உள்ளூர் செய்திகள்

வாசு, விசு!

வாசு, விசு என்ற இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். வாசு பணக்காரன். அதனால் எல்லா வசதிகளையும் பெற்றிருந்தான். ஆனால், விசு ஏழை. அதனால், அவனுக்கு பொறாமை அதிகமாயிற்று. வாசுவிற்கு எதிராக சதி வேலை செய்து கொண்டிருந்தான்.விசு தன்னுடைய நேரத்தில் பெரும் பகுதியை விரோதம் பாராட்டுவதிலேயே கழித்து வந்தான். மீதி நேரமே அவன் வேலை செய்தான். நண்பனின் மகிழ்ச்சிக்குத் தான் இடையூறாக இருப்பதை வாசு உணர்ந்தான். அதனால், அவன் நகரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ள சிறிய ஊருக்குச் சென்றான். அங்கு அவன் எல்லாருக்கும் நல்ல பண்புகளைப் பற்றியும், இரக்கத்தைப் பற்றியும் பிரசாரம் செய்தான்.'இந்தத் தேசத்திற்கு நன்மை செய்ய வந்த மகான்!' என்று புகழ்ந்து வரவேற்றனர் ஊர் மக்கள். அவனது புகழ் பரவும் செய்தி அவனுடைய அண்டை வீட்டுக்காரனான விசுவை அடைந்தது. அவனால் தனது பொறாமையை அடக்க முடியவில்லை. அவன் வாசு இருக்கும் இடத்திற்குச் சென்றான். வாசு அவனை அன்புடன் வரவேற்றான்.இருவரும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அந்தத் தோட்டத்தில் ஒரு கிணறு இருந்தது. அதைக் கடக்கும் போது அதற்குள் வாசுவை தள்ளிவிட்டான் விசு. அவ்வளவு பொறாமை. ஊரில் எத்தனையோ பணக்காரர்கள் இருந்தாலும், தன் பக்கத்து வீட்டுக்காரன் புகழ் பெறக்கூடாது என்பதே அவனது நோக்கம்.ஆனால், எப்படியோ தப்பித்து உயிருடன் வெளியே வந்துவிட்டான் வாசு. வாசு விழுந்த கிணறு மற்றொரு நாட்டை ஆண்ட சுல்தானுடையது. சுல்தானின் அரண்மனையில் இருந்த மந்திரி, வாசு ஒரு தெய்வீக ஆற்றல் வாய்ந்த மனிதர் என்பதை அறிந்தான். இது நடந்த சமயம் சுல்தானுடைய மகள் கடும் நோய்வாய்ப்பட்டிருந்தாள். மருத்துவர்கள் எவராலும் அவளைக் குணப்படுத்த இயலவில்லை. அதனால், சுல்தான் வாசுவை அணுகி தனது மகளுக்கு வைத்தியம் செய்யும்படி கூறினார்.வாசு அவளுக்கு வைத்தியம் செய்தார். இளவரசி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பழைய நிலைக்கு வந்தாள். சுல்தான் மனம் மகிழ்ந்து வாசுவிற்கு வாஜிர் பதவி அளித்தார்.பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒருநாள் வாசு வழியில் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தான். அவன் விசு என்று அவனுக்கு தெரிந்துவிட்டது.''நண்பனே! என்னை யார் என்று உனக்குத் தெரிகிறதா? நான்தான் வாசு. நீ என்னைக் கிணற்றில் தள்ளினாய். ஆனாலும், நான் மீண்டு வந்து இப்போது பெரிய பதவி வகிக்கிறேன். பொறாமை கொள்வது என்பது எலும்புருக்கி நோய் போன்றது. அது நம்மையே உருக்கிவிடும். அதுதான் உன்னை இந்த இழிநிலைக்கு தள்ளி விட்டது!'' என்றான்.விசு அழுதான்; விம்மினான். பிறகு அவனிடம் மன்னிப்புக் கேட்டான். வாசு, விசுவிடம் சிறிது பணத்தை கொடுத்து, ''இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு மறுபடியும் உன் வாழ்க்கையை ஆரம்பி. ஆனால், ஒருபோதும் பொறாமைக்கு அடிமையாகாதே!'' என்று கூறினான்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !