உள்ளூர் செய்திகள்

விடியும் முன் எழு!

''துாங்கியது போதும்... விடிஞ்சுருச்சு... வீட்டுப் பாடத்தை இன்னும் செய்யல. இப்படி துாக்கத்துக்கு அடிமையானா எப்படி...''அதிகாலையே மகன் முத்துவை கடிந்தாள் அம்மா சியாமளா.''போம்மா... இன்னும் கொஞ்ச நேரம் துாங்க விடு...''புரண்டு படுத்தான் முத்து.மகன் துாக்கத்தில், கும்பகர்ணனின் வாரிசாக இருப்பது, அவளுக்கு பிடிக்கவில்லை; தாமதமாக எழுந்து, பள்ளிக்கு புறப்பட்டு செல்வதற்குள், வீடே களேபரம் கொள்வது தொடர் கதையாக நீளுகிறது.புத்திமதியை அள்ளி வீசியும் பயனில்லை; அவன் செயலில், எவ்வித மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. இதை எண்ணி வருந்தினாள் அம்மா.வேறு வழி தெரியாமல், தன்னைத் தானே அமைதியடைய செய்தாள்.ஒரு நாள் -பள்ளி முடிந்து வந்த போது, வீட்டில் முதியவர் அமர்ந்திருப்பதை பார்த்தான் முத்து.வந்ததும் அவரை அறிமுகம் செய்யும் விதமாக, ''இவரு எனக்கு சித்தப்பா வேணும்; கோல்கட்டாவில் இருக்காரு; பறவைகள் மீது அக்கறை உடையவர். அதை பற்றிய சிந்தனை, வேலை என, ஓடியபடியே இருப்பாரு. வித விதமான பறவைகளை, புகைப்படம் எடுத்துள்ளார். அவை குறித்த ஒலி, ஒளி காட்சிகளை காணொளியாக வைத்துள்ளார்...'' என்றாள் அம்மா.கூறி முடித்த கையோடு, ''இப்பவே அதையெல்லாம் காட்ட சொல்லு...'' என அடம் பிடித்தான் முத்து.பறவைகள் இரை தேடிப் பறக்கும் காணொளிகளை காண்பித்த தாத்தா, ''பள்ளிச் செல்வது, ஒழுக்கத்தை பேணி காப்பதற்கு தானே... அதிகாலையில் எழுந்து, படிக்க வேண்டும்; படிக்கும் நேரத்தில் துயில் கொள்ளுதல் கூடாது என, ஆசிரியர் போதிக்கிறார் தானே...''ஆனால், பறவைகளுக்கு கற்றுக் கொடுக்க பள்ளி இல்லை; அவை காலங்காலமாக முறையாக செய்து வருவதை பார். அவை எப்படி சுறுசுறுப்பாக இருக்குது...'' என சுட்டி காட்டினார் தாத்தா.முத்துவின் தலைக்குள், 'பளீர்...' என மின்னல் வெட்டியது.'துாக்கத்துக்கு அடிமையாகி, பள்ளிக்கு அவசரம் அவசரமாக கிளம்பும் போது, எல்லா வேலையிலும் பதற்றம், அவசரம் தான் மிஞ்சுது... இனி, இரவில் சீக்கிரம் துாங்கி, அதிகாலை எழும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என தீர்மானித்தான் முத்து.அன்று முதல், அதீத துாக்கத்திற்கு விடை கொடுத்தான்; அதிகாலை படிப்பதுடன், வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து, சுறுசுறுப்புடன் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்தான்.மகனிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பார்த்து, அகம் மகிழ்ந்தாள் அம்மா.குழந்தைகளே... துாங்கி காலத்தை விரயம் செய்யாமல், சுறுசுறுப்பாக செயல்பட்டால் வெற்றிகளை குவிக்கலாம்!- கு.கணேசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !