வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 40; சிறுவர்மலர் இதழில், 'உயிரைத் தேடி!' என்ற வண்ண படக்கதை, சில ஆண்டுகளுக்கு முன், தொடராக வந்தது.கொள்ளை நோயால் கொத்துக் கொத்தாக மடிந்த மனித இனத்தை, 'ஜானி' என்ற சிறுவன் மீட்பது தான், அதன் மையக்கரு!சிறுவர்மலர் அன்று அடித்த எச்சரிக்கை மணி, 'கொரோனா' தொற்றாக நிதர்சனமாகி உள்ளது. இது கண்டு சிலிர்ப்பு ஏற்படுகிறது. பள்ளி வரலாற்றுப் பாடத்தில், கடினமாக படிக்க நேர்ந்த மராட்டிய மன்னன் சிவாஜியை, சித்திரக்கதையில், தத்ரூபமாக கண்முன் நிறுத்தியது. மகாபாரத கர்ணன், சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் போன்ற பாத்திரங்களை எண்ணியவுடன், நடிகர் திலகம் முகம் நினைவில் வரும் என சொல்வர். ஆனால், அந்த கம்பீர உருவங்கள் சித்திர கதையாக, சிறுவர்மலர் இதழில் பிரசுரமாகி, என் மனதில் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வரைந்த, முகம் தெரியாத ஓவியர்களுக்கு பூச்செண்டு!ஒரு முக்கிய விஷயம்... என் தந்தை, 80 வயதை கடந்துள்ளார். பார்வை மங்கலான நிலையிலும், சிறுவர்மலர் இதழின் குண்டு குண்டான எழுத்துக்களை, அவரால் தெளிவாக படிக்க முடிகிறது.பிள்ளைகளை, தினமும் வீட்டுப் பாடம் செய்ய கட்டாயப்படுத்தி வந்த சராசரி தாயான என்னை, படைப்புகள் எழுத ஊக்குவித்த சிறுவர்மலர் இதழை, தவறாது வாசித்து மகிழ்கிறேன்.- ஈ.ஜெயமணி, திருப்பூர்.