என்ன தூக்கம்?
நான் காரைக்காலிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மதிய நேரம் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, தூங்கி விட்டேன். என் வகுப்பு ஆசிரியர் ஒரு நீண்ட குச்சியை வைத்து, 'சுளீர்' என்று அடித்து, 'பாடம் நடத்தும்போது என்ன தூக்கம்? ஒழுங்கா கவனி!' என்றார்.சிறிது நேரத்தில் பாடங்களை கரும்பலகையில் எழுதிபோட்டு விட்டு, எங்களை எழுதச் சொல்லிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்தவாறே தூங்கி விட்டார்.இதைப் பார்த்த நான், சத்தம் போடாமல் அவர் பின்னால் சென்று, 'சுளீர்' என்று அவர் முதுகில் அடித்து, 'பாடம் நடத்தாமல் என்ன தூக்கம்?' என்று கேட்டுவிட்டு வீட்டுக்கு ஓடிவந்து விட்டேன். ஆசிரியர், 'திடுக்கிட்டு' எழுந்ததை பார்த்து அனைவரும் சிரித்தனர். அன்றிலிருந்து எல்லாரும் என்னை, 'வாத்தியாரை அடிச்ச பொண்ணு'னு சொல்லிக் கலாய்ப்பாங்க. இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் ஒரே சிரிப்புதான்!- வி.கன்னிகா, புதுச்சேரி.