உள்ளூர் செய்திகள்

உங்க பைகள் எங்கேடா?

கடந்த, 1977ம் ஆண்டு என் பள்ளி வாழ்வில் நடந்த சுவையான சம்பவம்... எங்கள் கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரமுள்ள நடுநிலைப் பள்ளிக்கு நடந்தே செல்வது வழக்கம்.அன்று இத்தனை வாகன வசதிகள் இல்லை. எங்கள் தலைமை ஆசிரியர் பிரம்பை வைத்துக் கொண்டு வாசலில் நிற்பார். தாமதமாக வரும் மாணவர்களுக்கு, அவர் தரும் தண்டனை பிரம்படிதான். அந்த அடிக்கு பயந்தே உரிய நேரத்தில் மாணவர்கள், பள்ளிக்கு வந்துவிடுவர்.அன்று நானும், என் நண்பனும் பள்ளிக்கு தாமதமாகிவிட்டது என்று ஓட்டமும், நடையுமாக பள்ளிக்கு சென்றோம். மணி அடித்து வகுப்புகள் துவங்கிவிட்டது. பள்ளியின் வாசலில் தலைமை ஆசிரியரை பார்த்ததும் இதயம் இரண்டு மடங்கு வேகத்தில் துடித்தது.எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தவர் பின் சிரித்தார். எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அப்பாடா... இன்றைக்கு அடி இல்லை என சந்தோஷப்பட்டு நாங்களும் மெல்லச் சிரித்தோம்.'உங்க பைகள் எங்கேடா..? என அவர் கேட்ட போதுதான் அவசரத்திலும், பயத்திலும் பையை எடுக்காமல் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிந்தது. எங்களை பார்த்து வகுப்பே சிரித்தது. அடுத்த சில நாட்கள் பள்ளி வளாகத்தில் இதுதான் பரபரப்பு செய்தியாக இருந்தது.எப்பூடி எங்கள் படிப்பு?- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !