உள்ளூர் செய்திகள்

எங்கடா படிச்ச...

கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது!மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த நான், ஒன்பதாம் வகுப்பில், மதுரை தெப்பக்குளம், தியாகராஜர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். முதல் நாளே, ஆங்கிலப் பாட ஆசிரியர், வரிசையாக, ஒவ்வொரு மாணவரையும் படிக்குமாறு கூறினார். என் முறை வந்த போது, ஒரு சொல்லை தவறாக உச்சரித்ததால், 'இதற்கு முன்னாடி எங்கடா படிச்ச...' என கேட்டு, ஓங்கி ஒரு அறை விட்டார்; அப்படியே அதிர்ந்து போனேன்.ஆசிரியர் மேல், வெறுப்பு ஏற்பட்டது. 'ஆங்கிலப் பாடத்தை நன்கு படிக்க வேண்டும்; இல்லையேல், அடி தாங்க முடியாது' என்ற பயமும் வந்தது. எனவே, ஆங்கில பாடத்தில், திறமையான மாணவர்களை அணுகி, ஆங்கிலத்தை நன்கு கற்று, பேசும் அளவிற்கு தேர்ச்சி பெற்றேன். அவர், அடித்த அடி, ஆங்கில அறிவு பெற உதவியது.இக்காலத்தில், ஆசிரியர்கள், மாணவர்களை அடிக்க கூடாது என்ற நிலமை உள்ளது நம்முடைய துரதிஷ்டமே.'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்' என்ற பழமொழி, என் விஷயத்தில் உண்மையானது.- க.ராஜேந்திரன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !