சொல் விளையாட்டு!
திருப்பத்துார், டான்பாஸ்கோ பள்ளியில், 1969ல், 1ம் வகுப்பில் மகனை சேர்த்திருந்தோம். மகிழ்ச்சியுடன் சென்று வந்தான். ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று வகுப்பு ஆசிரியரிடம், 'சாமுக்கு போகணும்...' என கேட்டுள்ளான். ஒன்றும் புரியாமல், 'வகுப்பு முடிந்து போகலாம்... இப்போ உட்கார்...' என கூறியுள்ளார். இயற்கை உபாதை உந்தலால் அவதிப்பட்டு அவசரமாக வகுப்பறைக்கு வெளியே ஓடி, மைதானத்தில் சிறுநீர் கழித்துள்ளான்.ஆசிரியருக்கு அப்போது தான், அவன் கேட்டதன் பொருள் புரிந்துள்ளது. சமாதானப்படுத்தி, 'சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும்...' என சரியாக எடுத்து கூறி புரிய வைத்துள்ளார்.அன்று வீடு திரும்பியதும் விபரம் கூறியவன், பயத்தில் மறுநாள் பள்ளி செல்ல மறுத்தான். அவனை தேற்றி அழைத்துச் சென்றேன். தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக ஆசிரியரிடம் கூறினேன். அலட்டிக்கொள்ளாமல், 'அது சாதாரண நிகழ்வு; தவறாக ஏதும் இல்லை...' என்றார். நன்றாக படித்து அமெரிக்காவில் மகிழ்ச்சியாக வாழ்கிறார் என் மகன். என் வயது, 89; வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். வீட்டுக்குள் பேசும் குழுக்குறி, பொது இடத்தில் உதவாது என்ற பாடத்தை, அந்த நிகழ்வில் இருந்து கற்றுக்கொண்டேன்.- எஸ்.நரசிம்மன், சென்னை.