உள்ளூர் செய்திகள்

வரமா சாபமா?

தனசேகரனுக்கு பாண்டிபஜார் பாயின்ட்டில் டூட்டி. அவன், டிராபிக் கான்ஸ்டபிளானதிலிருந்து, நான்கைந்து முறை, அந்த பாண்டிபஜார் பாயின்ட்டில், டூட்டி செய்திருக்கிறான். இவனைப் போலவே, பல டிராபிக் போலீசாரும் அந்த பாயின்ட்டில் டூட்டிக்கு வர ஆசைப்படுவர். காரணம், டிராபிக் போலீசாருக்கு, நல்ல வருமானத்தைக் கொடுக்கும் பாயின்ட்டுகளில் இதுவும் ஒன்று.வியாபார நிறுவனங்களும், வர்த்தக வளாகங்களும், கடை, கண்ணி என்று எப்போதும் நெரிசலோடு காணப்படும் தி.நகரில், போக்குவரத்து விதி மீறல் சகஜமாகிவிட்ட ஒன்று. அதை, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் போலீசாரும் உண்டு.காலையில் வேலைக்கு கிளம்பும் போது, அவன் மனைவி விஜயா சொல்லி அனுப்பியது, அவனுக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது...'நீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இன்னைக்கு வரும்போது, பத்தாயிரம் ரூபாய் பணத்தோட வரணும்...' 'என்னம்மா, டார் கெட்ட ஏத்திக்கிட்டே போறே... இதுவரைக்கும், ஐந்தாயிரம் தானே கேட்ட... இப்ப பத்துங்கறே...''பத்து பவுன் எடுக்கறதுக்கு, பத்தாயிரம் குறையுது. நான் ஒண்ணும் எனக்காக கேக்கல... பெத்து வெச்சிருக்கீங்களே ரெண்டு பொட்டபுள்ளைங்க, அதுக்காகத் தான். அதுங்கள நாளைக்கு கல்யாணம், காட்சின்னு கரையேத்தணும்னா, இப்ப சேர்த்தா தான் உண்டு...' என்று, அவள் சொல்ல, மலைத்து போனான் தனசேகரன்.''சார்... உஸ்மான் ரோடு எப்படி போகணும்,” என்று ஒருவன் வழி கேட்க, தனசேகரன் சுயநினைவுக்கு வந்தான். வழியை சொல்லிட்டு மணியைப் பார்க்க, 12:00 ஆகி இருந்தது. உச்சி வெயில் காரணமாக, சாலை போக்குவரத்து சற்றே குறைந்திருந்தது. தனசேகரன் தொப்பியை கழற்றி, கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்தவாறு, அருகில் உள்ள ஜூஸ் கடைப் பக்கம் ஒதுங்கினான்.இப்படி கடைப்பக்கம் ஒதுங்கிக் கொள்ள, ஒரு காரணம் இருக்கிறது. எதிர்திசையிலிருந்து, வரும் வாகன ஓட்டிகள், போலீஸ் இல்லை என்ற தைரியத்தில், 'நோ - என்ட்ரி'க்குள் நுழைவர். அப்போது கடை மறைவிலிருந்து வெளிப்பட்டு, 'லபக்'கென்று கோழி அமுக்குவது போல, வாகனம் ஓட்டி வந்தவர்களைப் பிடித்து கொள்வான். அதற்குப்பின், அவர்களிடமிருந்து, எவ்வளவு கறக்க முடியுமோ, அவ்வளவையும் கறந்து விடுவான். இது, தனசேகரன் போன்ற போலீஸ்காரர்கள் கடை பிடிக்கும், 'டெக்னிக்!''சார் லைம் ஜூஸ்...' என்று கூறிய, கடைக்காரனிடமிருந்து ஜூசை வாங்கிக் குடித்தான், பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு, பணத்தை எடுத்து, எண்ண ஆரம்பித்தான் தனசேகரன். ஒன்பதாயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது. இன்னும் சரியாக ஆயிரம் ரூபாய் தேவை. 'ரெண்டு மணி டூட்டி முடிவதற்குள், யாராவது மாட்டாமலா போய் விடுவர்...' என்று நினைத்தவனாய், பணத்தை மீண்டும் பாக்கெட்டில் வைக்க, சரியாக ஒருவன், டூவீலரில் அசுர வேகத்தில், 'நோ - என்ட்ரி'க்குள் நுழைந்தான். ரோட்டை கிராஸ் செய்து, ஜூஸ் கடை அருகே வரவும், தனசேகரன் வெளிப்பட்டு, அவனை பிடிக்கவும் சரியாக இருந்தது.தனசேகரன் வழிமறித்து நிறுத்த, ஒரு கணம் பைக்கில் வந்தவன் ஆடிப்போய்விட்டான். “வண்டியை ஓரமா நிறுத்துங்க,” என்று சொல்லியவாறு, பைக் சாவியை எடுத்துக் கொண்டான் தனசேகரன். பைக்கை ஓரமா நிறுத்திவிட்டு, வந்தவனிடம், “இது, 'நோ - என்ட்ரி' தெரியுமல்ல,” என்று கூற, “சாரி சார்... அர்ஜென்டா பேங்குக்கு போகணும், அதான்,” என்று இழுத்தான்.“உங்க பேர் என்ன?”“ஷண்முகம்.”“லைசென்ஸ் எடுங்க,” என்று கூற, ஷண்முகம் தயங்கியவாறு... “இனிமே தான் சார் லைசென்சுக்கு, 'அப்ளை' செய்யப் போறேன்,” என்றான்.அடுத்து, ஹெல்மெட் போடலை மற்றும், வண்டிய இன்ஷுரன்ஸ் செய்யவில்லை என்பதையும் தெரிந்து கொண்டான் தனசேகரன்.தனசேகரனுக்கு மனதினுள், ஒரே குதுாகலமாய் இருந்தது. 'ஒருத்தனிடமே நாலு கேஸ்... அப்படி, இப்படி சொல்லி, எப்படியும் ஆயிரம் ரூபா கறந்துடலாம்...' என, எண்ணியவனாய், “நோ- என்ட்ரில வந்தது, லைசென்ஸ் இல்ல, ஹெல்மெட் போடல, இன்ஷுரன்ஸ் இல்ல, மொத்தம் நாலு கேஸ்... அபராதம் எவ்வளவு தெரியுமா? எப்படியும் மூவாயிரம் ரூபா ஆகும். அபராதம் கட்டறீங்களா?” தனசேகரன் பின் பாக்கெட்டிலிருந்து, ஒரு சிறிய நோட்டை எடுத்து, 'பைக்' சீட்டில் வைத்தான்.“உங்க பேர் என்ன சொன்னீங்க,” என்று பேனாவைத் திறந்து, பாவ்லா காட்ட, பைக்கில் வந்த சண்முகம், மிரள ஆரம்பித்தான். மூவாயிரம் ரூபாய் பைன், அவ்வளவு பணத்திற்கு, அவன் எங்கே போவான். அதிர்ச்சியும், பயமும் ஒரு சேர, “சார், இந்த ஒரு தடவை மன்னிச்சிருங்க சார்,” என்றான் அழாத குறையாக.“இந்த ஒரு தடவைன்னா, இன்னும் ஒரு தடவை இந்தத் தப்பை செய்யப் போறியா?”“இ... இ... இல்ல சார்.”“சரி, அதிருக்கட்டும்... உம் பேரைச் சொல்லு, பணத்தை எடு. உங்களுக்கெல்லாம் அபராதம் கட்டுனாத் தான் புத்தி வரும்,” என்று, சற்று மிரட்டும் தொனியில் கூற, ஷண்முகம் மிரண்டு போனான்.“சார்... அவ்வளவு பணம் இல்ல சார்.”“அதுக்கு என்னை என்னப்பா செய்யச் சொல்றே... உனக்காக நான் கட்டிடவா,” என்று கிண்டலடிக்க, நெளிந்தான் சண்முகம்.“தம்பி, சும்மா நின்னு பிரயோஜனமில்ல, டைம் வேஸ்ட்டா போயிட்டிருக்கு. பணத்தை கட்டறயா, இல்ல வண்டிய ஸ்டேஷனுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா,” என்றபடி, தனசேகரன், செக் வைக்க, அதிர்ந்தான் சண்முகம்.“வேணாம் சார்... ஸ்டேஷனுக்கு வண்டிய எடுத்திட்டு போக வேண்டாம் சார்.”“அப்ப பணத்தைக் கட்டு,” என்றதும், மவுனமானான் சண்முகம்.“சார்... நீங்க பார்த்து மனசு வையுங்க சார்.”“நான் என்னப்பா செய்ய முடியும்? நீ அபராதம் கட்டுனா, நான் விட்டுடப் போறேன்.”“அவ்வளவு பணம் எங்கிட்ட இல்ல சார்,” அழாத குறையாக சண்முகம் கூற, “சரி... எவ்வளவு பணம் வெச்சிருக்க?” அடுத்த, 'செக்' வைத்தான் தனசேகரன்.“சார், ஐநுாறு ரூபா இருக்கு சார்,” என்றபடி, சுற்றும் முற்றும் பார்த்தவாறே பர்சை எடுத்து, விரிக்க, உள்ளே இரண்டு, ஐநுாறு ரூபாய் நோட்டுகள் இருப்பதை நொடியில் பார்த்துவிட்டான் தனசேகரன். 'எந்தக் காரணத்தைக் கொண்டும், ஐநுாறு ரூபாய்க்கு படிந்து விடக்கூடாது...' என்று தீர்மானித்தான்.“ஐநூறு ரூபா எல்லாம் பத்தாதுப்பா, ஆயிரம் ரூபா இருக்கா பேசு... இல்லைன்னா வண்டியில ஏறு. ஸ்டேஷனுக்குப் போகலாம்,” என்று கறாராகச் சொல்ல...“ஆயிரம் ரூபா இருக்கு சார்... ஆனா, அத அப்படியே உங்களுக்கு தரமுடியாது; என் தங்கச்சி காலேஜ் பீசுக்காக, பேங்குல பணம் சேர்த்துட்டிருக்கேன். அதுல ஒரு, ஐநூறு ரூபா உங்களுக்குத் தர்றேன்,” என்றான்.டென்ஷனான தனசேகரன், “தம்பி, நீ என்ன, எனக்கு பிச்சையா போடறே... ஐநூறு ரூபா வேணா தர்றேங்குறே.”“கோவிச்சுக்காதீங்க சார்... என் தங்கச்சிய நல்லா படிக்க வைக்கணும்கிறது, என் லட்சியம். அதுக்காகத் தான், 'டே மற்றும் நைட் ஷிப்ட்டு'ன்னு உழைச்சு, பணம் சேர்க்குறேன்.”“ஏம்பா... பேசாம வண்டில ஏறு. ஸ்டேஷனுக்குப் போகலாம்,” என்று கூறி, தனசேகரன் வண்டியை, ஸ்டார்ட் செய்ய, சண்முகம், இனி, இவனிடம் மன்றாட முடியாது; கொடுத்து விடுவதைத் தவிர, வேற வழியில்லை என்ற முடிவுக்கு வந்தவனாய், பர்சிலிருந்து, அயிரம் ரூபாயை எடுத்து, தனசேகரனிடம் கொடுத்தான். பணத்தை வாங்கி, பேன்ட் பாக்கெட்டில் சொருகிய தனசேகரன், “இந்தா சாவி,” என்று, பைக் சாவியை சண்முகத்திடம் கொடுக்க, அவன் வாங்கி, வண்டியில் அமர்ந்து, வண்டியை கிளப்ப தயாரானவன். “சார்... ஒரு விஷயம்,” என்று கூற, தனசேகரன், “என்னப்பா சொல்லு?” என்றான்.“நீங்க நல்லா இருக்க மாட்டீங்க.”ஒரு வினாடி ஸ்தம்பித்து. “ஏய் என்ன பேசுறே...” “ஆமா, வயிறு எரிஞ்சு சொல்றேன், நீ நாசமா போகப்போறே.உன் குடும்பம் நடுத் தெருவுக்கு வரும் பாரு,” என்று ஓலமிட்டவாறு, வினாடி கூட தாமதிக்காமல், வண்டியைக் கிளப்பிச் சென்றான் சண்முகம். 'ஏதோ பைத்தியம் உளறிட்டுப் போகுது...' என்று சமாளித்தவாறு, தனசேகரன் மீண்டும் பாயின்ட்டுக்கு வந்தான். மனதிற்குள், பத்தாயிரம் ரூபாய் தேற்றிவிட்ட சந்தோஷம்.அவன் டூட்டி முடித்து யூனிபார்மை மாற்றி, கிளம்ப தயாரானபோது, மொபைல் அடித்தது. மனைவி விஜயா தான் அழைத்தாள். மொபைலை ஆன் செய்து, காதில் பொருத்தியவாறு, “சொல்லு விஜயா,” என்றான். மறுமுனையில் விஜயா பதட்டமாய், “என்னங்க நம்ம பொண்ணு செல்வி போன ஸ்கூல் வேன் மேல, பஸ் மோதி ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம்...” கேட்ட வினாடியே, நிலைகுலைந்தான் தனசேகரன்.“என்ன சொல்றே விஜயா... உண்மையாவா!”“ஆமாங்க... எல்லா குழந்தைகளையும், மருத்துவமனையில சேர்த்திருக்காங்களாம்... நீங்க உடனே, ஜி.எச்.,க்கு வாங்க,'' என்று கூறி, போனை வைத்துவிட்டாள்.தனசேகரனுக்கு கண்கள் இருண்டன. இதயம் வழக்கத்தை விட வேகமாக படபடத்தது. பயத்திலும், பதட்டத்தில் வியர்க்க, மனம், 'கடவுளே... என் செல்விய காப்பாத்து. அவளுக்கு ஒண்ணும் ஆயிருக்கக்கூடாது. இறைவா...' என்று வேண்டிக் கொண்டவனாய், பதட்டத்தோடு, 'பைக்'கை ஸ்டார்ட் செய்தான். 80 கி.மீ., வேகத்தில், வண்டி மருத்துவ மனை நோக்கி பறந்தது.ஜி.எச்., மருத்துவமனை உள்ளே நுழைந்து, வண்டியை ஸ்டேண்டில் நிறுத்திய, தனசேகரன், அவசர அவசரமாக விபத்து பகுதி வார்டை நோக்கி ஓடினான். அங்கே அவனுக்கு முன்பாகவே, தகவலறிந்து, மற்ற மாணவ -மாணவியரின் பெற்றோர், உறவினர் என்று, நிறைய கூட்டம் கூடியிருந்தது. ஐ.சி.யூ., உள்ளே, நர்ஸ்கள், மருந்துகளோடும், ஆக்சிஜன் டிராலியோடும் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.நர்ஸ் ஒருவர், ஐ.சி.யூ.,விலிருந்து வெளியே வர, தனசேகரன், அவளிடம், “நர்ஸ், செல்விங்கற பொண்ணு எப்படி இருக்கு, நாங்க பார்க்க முடியுமா?” என்று கேட்டான்.“சார்... டாக்டர்ஸ் எல்லாரும் பேஷன்டுக்கு ட்ரீட்மென்ட் குடுத்துகிட்டு இருக்காங்க. இப்ப எதுவும் சொல்ல முடியாது. கொஞ்ச நேரம், 'வெயிட்' செய்யுங்க,” என்று நர்ஸ் கடுகடுக்க, துவண்டு போய், ஒரு துாணைப்பிடித்துக் கொண்டான்.'கடவுளே... இது என்ன சோதனை...' என்று எண்ணியவனுக்கு, சற்று நேரத்திற்கு முன், பைக்கில் பிடிபட்ட சண்முகம் சாபமிட்டது, நினைவுக்கு வந்தது. 'அவன் சாபத்திற்கு இவ்வளவு வலிமையா... அரைமணி நேரத்தில் பலித்து விட்டதே... உண்மையில் நான் அவனை மிகவும் நோகடித்து விட்டேனோ... கடவுளே... என் பொருட்டு, என் மகளை தண்டித்து விடாதே... அவளுக்கு ஏதும் ஆகாமல், அவளைக் காப்பாத்து. இனி, நான் லஞ்சம் வாங்க மாட்டேன். யாருடைய மனசையும் நோகடிக்க மாட்டேன். யார் வயித்தெரிச்சலையும் கொட்டிக்க மாட்டேன்...' என்று மனமுருக, வேண்டினான். அப்போது, நர்ஸ் ஒருத்தியின் குரல் ஒலித்தது...“நான் இப்ப கூப்பிடுற பேஷன்ட்டோட பேரன்ட்ஸ் எல்லாம், அந்த ரூமுக்குள்ள போங்க,” என்று கூறியவாறு, அவள் தன்னிடமிருந்த பேப்பரைப் பார்த்து, படிக்கத் துவங்கினாள்...“விமல், சாந்தினி, அக் ஷய் குமார், செல்வி...” என்று சொன்னது தான் தாமதம், விஜயாவும் தனசேகரனும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். “என்னங்க, நம்ம பொண்ணு செல்வி பேரைச் சொல்லிட்டாங்க. ஐயோ அவளுக்கு என்ன ஆச்சோ,” என்று, விஜயா ஓலமிட்டு அழ, அவளைப் போலவே, மற்ற பெற்றோரும் அழுதவாறே, நர்ஸ் குறிப்பிட்ட அறையை நோக்கி சென்றனர். தனசேகரனும், விஜயாவும் தடுமாற்றத்தோடு அந்த அறைக்குள் சென்றனர். டாக்டர் ஒருவர், அங்கு வந்தார்.“கவலைப்படாதீங்க... ஆக்சிடெண்ட்ல உங்க குழந்தைகளுக்கு மட்டும் ஒண்ணும் ஆகல... சின்ன காயங்களோடு, உங்க குழந்தைங்க தப்பிச்சுட்டங்க,” என்று கூறியதைக் கேட்ட மறுகணம், விஜயாவும்-, தனசேகரனும் நிம்மதி அடைந்தனர்.“இந்த விஷயத்தை உங்ககிட்ட தனியா சொன்னதுக்கு காரணம், மத்த குழந்தைங்க, ஆபத்தான கட்டத்துல தான் இருக்காங்க. அதனால தான், சந்தோஷமான விஷயத்தை, தனியா உங்ககிட்ட மட்டும் சொன்னோம். அந்த வழியா வெளியே போனீங்கன்னா, உங்க குழந்தைங்க இருப்பாங்க... கூட்டிட்டு போங்க,” என்று கூறி, டாக்டர் உள்ளே சென்றார். அவர் சொன்ன வழியில், அனைவரும் வெளியே வர, வராண்டாவில் அவரவர் குழந்தைகள், சிறு சிறு கட்டுக்களோடு நின்றனர். விஜயாவும்-, தனசேகரனும், தங்கள் மகள் செல்வியை, வாரி அணைத்து முத்தமிட்டு, கண்ணீர் மழை பொழிந்தனர்.“கடவுளே... என் பெண்ணைக் காப்பாத்திட்ட, நான் நெனைச்சது மாதிரி, அவளுக்கு ஒண்ணும் ஆகல, குடும்பத்தோட கோவிலுக்கு வந்து பொங்கல் வெக்கறேன்,” என்று, விஜயா அழ, அப்போது தான் விஜயா, கையில் இருந்த ஒரு மஞ்சள் பையை கவனித்தான் தனசேகரன்.“என்ன விஜயா இது?”“பணம்ங்க, ஒரு லட்ச ரூபா!” தனசேகரன் புரியாமல் விழிக்க.“பொண்ணுக்கு ஏதாவதுன்னா... மருத்துவ மனையில பணம் கட்டி, வைத்தியம் பார்க்கணும் இல்ல... அதான் வரும் போதே எடுத்துக்கிட்டு வந்தேன்.”ஒரு வினாடி யோசித்த தனசேகர்,“சரி... அந்த பணத்தைக் குடு.”“எதுக்கு?”“குடு. சொல்றேன்.”“சொல்லுங்க... குடுக்குறேன்.”“குடுடி,” என்று வெடுக்கென, பையை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். ஒரு ஆட்டோவுல செல்வியக் கூட்டிட்டு, வீட்டுக்கு போ. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்,” என்றபடி, அவன், அவசரமாக செல்ல, அவன் போவதையே பார்த்து, விக்கித்து நின்றாள் விஜயா.அடுத்த அரைமணி நேரத்தில், ஐ.ஓ.பி., கவுன்டரில் நின்றான் தனசேகரன். அந்த பேங்க், மாலை வரை, வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் கிளை.பேங்க் மேனேஜர், தனசேகரனிடம், “சார்... சண்முகம்ன்னு மொட்டையா பேர் சொன்னீங்கன்னா எப்படி? அந்த பேர்ல நுாத்துக்கணக்கான பேர், இந்த பேங்கில் அக்கவுன்ட் வெச்சிருக்காங்க. அதுல, நீங்க கேக்குற சண்முகம் யார்ன்னு எப்படி தெரியும்? அட்லீஸ்ட், அக்கவுன்ட் நம்பர் தெரிஞ்சாலாவது ஏதாவது செய்யலாம்.”“வேற ஒண்ணும் செய்ய முடியாதா சார்?”'ப்ச்ச்...!' என்று, உதட்டை சுழிக்க, தனசேகரன் வெறுப்புடன் வெளியே வந்தான். அவனை எப்படி தேடறது என்று, யோசித்தபடி படியிறங்க... எதிரே ஒருவன் அவசரமாக படியேற, எதேச்சையாக அவனைப் பார்த்தான் தனசேகரன். அங்கே, ஷண்முகம் நின்றிருந்தான். “சண்முகம்,” என்று குரல் கொடுக்க, சண்முகம் திரும்பினான். தனசேகரனைப் பார்த்ததும், 'ஐயோ... திரும்பவும் இவரா... ஒருவேளை காலையில் நான் திட்டினது பிடிக்காமல், ஏதாவது பொய் கேஸ் போட்டு, இன்னும் பணம் பறிக்க பார்க்கிறாரோ! கடவுளே... இவரிடமிருந்து என்னை காப்பாற்று...' என்று நினைத்தவன், நடுங்கிய குரலில், “என்ன சார்?” என்றான். “உன்னைப் பார்க்கதாம்பா இங்க வந்தேன். உங்க தங்கச்சி படிப்புக்கு எவ்வளவு பணம் கட்டணும்?”“ஒரு லட்ச ரூபா.”சற்றும் யோசிக்காமல், தனசேகரன், சண்முகத்தின் கையில், பணப்பையை திணித்தான்.“இதுல... ஒரு லட்ச ரூபா பணம் இருக்கு. தங்கச்சிக்கு காலேஜ் பீஸ் கட்டிடு,” என்று கூற, ஆடிப் போனான் சண்முகம். “தம்பி காலையில் நீ பேசுனது, எனக்கான சாபமா அல்லது வரமான்னு தெரியல... என்னன்னமோ நடந்து போச்சு. இனிமே, நான் லஞ்சம் வாங்கறதில்லை. யார் வயித்தெரிச்சலையும் கொட்டிக் கறதில்லன்னு சத்தியம் செய்து, திருந்திய மனுஷனா உன் முன்னாடி நின்னுக்கிட்டிருக்கேன். தயங்காம, இந்த பணத்தை வாங்கிக்கோ,” என்று கூற, அதை வாங்க மறுத்தான் சண்முகம்.“நீங்க திருந்தினதா சொன்னது, ரொம்ப சந்தோஷம். ஆனா, இந்தப் பணம் எனக்கு வேண்டாம். என் தங்கச்சி நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்ன்னு ஆசைப்படறேன். இந்தப்பணம் பலபேர் பாவத்துக்கும், சாபத்துக்கும் ஆளாகி சம்பாதிச்ச பணம். இதுல, என் தங்கச்சி படிச்சா, படிப்பு வராது. நான் உழைச்சு, என் தங்கச்சிய படிக்க வைக்க முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் வர்றேன்,” என்று கூறி, விடு விடுவென்று நடந்து சென்றான் சண்முகம். ஆயிரம் சம்மட்டிகளால் அடித்ததுபோல், வலித்தது. நிலைகுலைந்து எவ்வளவு நேரம் நின்றிருப்பான் என்று தெரியாது.“சாமி... ஏதாவது தர்மம் செய்யுங்க சாமி,” என்ற குரல் கேட்டு, திரும்பினான். ஒரு வயதான மூதாட்டி, தட்டை ஏந்தி நின்றிருந்தாள். ஏதோ, மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவன் போல, தனசேகரன் பையிலிருந்து, 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளாக அள்ளி தட்டில் போட்டான். மூதாட்டி ஆச்சர்யமடைந்து தட்டையும், அவனையும் மாறி மாறி பார்த்தாள்.“தம்பி, தர்மம் செய்யுங்கன்னு கேட்டேன். நீங்க அள்ளி எடுத்து, தட்டுல போட்டீங்க. இந்தப் பணத்தை பார்த்தாலே பயமா இருக்கு. நியாயமா சம்பாதிச்ச பணம் மாதிரி தெரியல. உழைச்ச காசு ஒரு ரூபா இருந்தா போடுங்க, அது ஒடம்புல ஒட்டும்,” என்று கூறியபடி, பணத்தை அவனிடமே திருப்பி தந்து, நடையை கட்டினாள் மூதாட்டி. அவமானத்தால், கூனி குறுகிப் போனான் தனசேகரன்.கால் போன போக்கில் சிறிது துாரம் நடந்தவன், பஸ் ஒன்று வர அதில் ஏறி, பின் இருக்கைக்கு சென்று, ஜன்னலோரமாக அமர்ந்து கொண்டான். பஸ் வேகமெடுத்துச் செல்ல ஆரம்பித்தது. தனசேகரன், கையில் இருந்த பணத்தை வெளியே எடுத்தான். ரப்பர் பேண்டை நீக்கி, கத்தையாக, அதை அப்படியே ஜன்னல் வழியாக வெளியே வீசினான். திடீரென்று, காற்றில் ரூபாய் நோட்டுகள் பறந்து வர, பொதுமக்கள் ஆளாளுக்கு, அதை எடுக்க போட்டி போடுவது, அவன் ஓரக் கண்களுக்கு தெரிந்தது. அடுத்த நிறுத்தத்தில் பஸ் நிற்க, பாரத்தை இறக்கிவிட்ட உணர்வோடு இறங்கினான். மனம் லேசாகிப் போக, நடக்க ஆரம்பித்தான். மறுநாள் பத்திரிகைகளில், 'சாலையில் பணமழை, அடையாளம் தெரியாத நபரின் அதிசயச் செயல்...' என்ற செய்தி, வெளியாகி இருந்தது.கே. ரமேஷ் ராஜ்வயது : 38, கல்வித்தகுதி : பி.காம்., (முழுமை பெறவில்லை) திரைப்படத் துறையில் இணை இயக்குனராக பணிபுரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !