ஐந்து வயது சிறுவன் மீது வழக்கு!
தேர்தலின் போது அமைதியை சீர்குலைத்தான் என குற்றம்சாட்டி, ஐந்து வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு போட்டுள்ளனர். இந்த அதிசய சம்பவம், பீகார் மாநிலத்தில் நடந்தது.சமீபத்தில், பீகார் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. திப்ரா என்ற நகரத்தில் நடந்த கலவரத்தில், பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சூர்யகாந்த் பஸ்வான் என்ற ஐந்து வயது சிறுவனும் அடக்கம். கைதான மறுநாள் அவன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான். ஜாமின் தொகை, இருபதாயிரம் ரூபாய் கட்டி, இப்போது வெளியே வந்துள்ளான் அவன். எனினும், தினமும் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் அவன் கையெழுத்திட வேண்டும். இந்த சம்பவம், இந்த ஊரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசில் கேட்ட போது, 'பஸ்வானின் மூத்த சகோதரரை கைது செய்வதற்கு பதில், இந்த சிறுவனை போலீசார் கைது செய்து விட்டனர். இது தொடர்பாக கோர்ட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளோம்...' என்றனர். இது எப்படி இருக்கு? போலீஸ் என்றாலே குளறுபடிதானோ! — ஜோல்னா பையன்.