உள்ளூர் செய்திகள்

மாலதி என்றொரு தாய்!

''எப்ப ஆச்சாம்?''''இரவு, 12:00 மணி இருக்கும்... எனக்கு போன் வந்தது. உடனே, உன்னைக் கூப்பிட்டேன்,'' என, மாமாவும், கடைக்குட்டி சித்தப்பாவும் பேசுவதை கேட்டு, மாலதி பரிதவித்தாள்.பக்கத்தில், கண்களிலிருந்த அதிர்ச்சி விலகாமல் வாயில் துண்டை பொத்தியபடி குலுங்கிக் கொண்டிருந்தான், மாலதியின் கணவனான, 'மாஜி' எம்.எல்.ஏ., சிவராமன். உயிர் நண்பரான, சேகர், சிவராமனின் முதுகை ஆறுதலாக அணைத்து ஆசுவாசப்படுத்தினார்.மாலதிக்கும் கண்களில் நீர் வந்தது.'நான் காண்பது உண்மைதானா... என் மீதான நேசம் இன்னும் மிச்சமிருக்கிறதா சிவராமனிடம்?' மனசுக்குள் ஜில்லிட்டது.திடீரென்று கூவியபடி, 'நகருங்க... நகருங்க...' என, நான்கு பேர், கண்ணாடி பேழையை துாக்கி வந்தனர். 'கரென்ட் கனெக் ஷன்' தரப்பட்டு, மாலதியின் உடல் அதற்குள், 'ஜில்'லென்று அடைக்கலமானது.இன்னும் நம்பவே முடியவில்லை, மாலதியால்.'என்ன ஆயிற்று எனக்கு... இரவு, சிவராமனுக்கும், மகன் தனுஷுக்கும், சப்பாத்தியை சுட்டுப் போட்டேன். செல்ல மகள், காவ்யாவுக்கும் சப்பாத்தியை ஊட்டி விட்டு, கையோடு நானும் ரெண்டை சாப்பிட்டேன். காவ்யாவோட கைகள் எப்பவும் போல கழுத்தை இறுக்க கட்டிக்கொண்ட பின்... ம்ம்... லேசா நெஞ்ச வலிச்சு, மூச்சு முட்டுற மாதிரி இருந்தது...'அதுக்கப்புறம் கண்ணை இருட்டிக்கிட்டு வந்தது தான் தெரியும்... அப்ப தான், மகன் தனுஷ், 'குட் நைட்' சொல்ல வந்தான்... அதுக்கப்புறம் என்ன ஆயிற்று... ஓ... நான் இறந்துட்டேனா?' நண்பர்கள் சூழ, அம்மாவின் உடலைப் பார்த்து அவ்வப்போது கேவிக்கேவி அழுதவாறு, வந்திருந்தவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான், தனுஷ்.'ப்ச்... என்ன சோதனை இது... கடவுளுக்கு கண்ணே இல்லையா... எத்தனையோ வயசானவங்க, 'என் உயிரை எடுத்துக்கோ'ன்னு, படுக்கையோட கிடக்கறப்ப, இப்படி இள வயசுக்காரங்களை எடுத்துக்கணுமா... பாவம், இவளையே நம்பியிருக்கும், குழந்தை காவ்யாவுக்கு இனி யார் ஆதரவு...' என, வந்தவர்களின், 'உச்' கொட்டல்களை கேட்க முடிந்தது, மாலதியால்.வயது, 40 இருக்கும். இதுவரை யார் மனசையும் நோகடித்ததில்லை... உதவி என கேட்டவருக்கு, தன்னால் முடிந்த உதவிகளை ஓடிப்போய் செய்வாள்... அதற்காக, எந்த எதிர் பலனையும் விரும்ப மாட்டாள். அதனால் தான் இத்தனை உண்மையான அனுதாபங்கள்...''ஐயோ... அக்கா,'' என, அலறி அடித்தவாறு வீட்டுக்குள் நுழைந்து, மாலதியின் உடல் இருந்த பெட்டியின் மீது விழுந்து கதறிய தங்கை ரேவதியை பார்த்தவுடன், மாலதிக்குள் மகிழ்ச்சி பரவியது.'வா ரேவா... உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்... மேல் அறைக்கு போய், காவ்யா என்ன பண்றான்னு பாரேன்...'மாலதி பேசியதை, ரேவதி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அழுது புரண்டு அரற்றிக் கொண்டிருந்தாள்.''ரேவா ரேவான்னு எத்தனை பாசமா இருந்தா... இனி, நான் யார்கிட்ட போய் புலம்புவேன்... பொறந்ததுல இருந்து கூடவே இருந்துட்டு, இப்படி பொசுக்குன்னு சொல்லாம போயிட்டியே அக்கா...'''ரேவா... என்னைப் பற்றி புலம்பியது போதும்... பெரிய இடத்துல என்னைக் கட்டித் தந்து, உன்னை, வசதி குறைஞ்ச மாப்பிள்ளைக்கு கட்டி வெச்சுட்டாங்கன்னு, எத்தனையோ முறை என்கிட்டே நீ பாராமுகமா நடந்துகிட்டது, என் மனச எவ்வளவு வேதனைப்படுத்தி இருக்கு... 'இப்ப, நானே இல்லாம போயிட்டேண்டி... இனி, நீ யார்கிட்ட உன் வெறுப்பை காட்டுவே... இப்ப உனக்கு சந்தோஷமா?' இறந்த நிலையிலும், மாலதியின் உயிர், தன் மறு பக்கத்தை காட்டியது.'என்ன இது, நானும் இப்படி... ஆனா ஒண்ணு, காவ்யா பொறந்து வளர ஆரம்பிச்சதுமே, ரேவதி கூட வெறுப்பை விட்டுட்டு, பாசமா நடந்துகிட்டாளே... அது சரி, இந்த காவ்யா என்ன பண்றாளோ... இன்னுமா யாரும் போய் பார்க்கல... 'ஐயோ பாவம் குழந்தை... பசியாயிருக்குமே... நேரம், 8:00 மணி ஆச்சு போலிருக்கே... ச்சே, கடிகார முள் இரவு, 12:00 மணியிலேயே நிக்குதே... ஓ, அதுதான் நான் உயிர் விட்ட நேரமோ?'சிவராமனின் உற்றார், உறவினர், நண்பர்கள்; மாலதியின் உறவினர், தோழிகள் என, அவளது மறைவையொட்டி துக்கம் விசாரிக்க வந்த பெருங்கூட்டத்தால், பங்களா நிரம்பி வழிந்தது. 'மடமட'வென்று காரியங்கள் நடந்தன.'ஷாமினா பந்தல் போட ஆட்கள் வந்தாச்சு... சங்கு ஊத ஆள் தயார்... இப்படி இன்னும் இத்யாதிகள்... பரவாயில்லை, நான் நன்றாகத்தான் வாழ்ந்து இருக்கேன்...' மாலதியின் மனசுக்குள் சிறு திருப்தி. 'ஆனால், காவ்யா...' என அரற்றியது.பெரிய, 'பார்டர்' வைத்த பட்டுப் புடவையில், கழுத்து நிறைய நகைகள் போட்டு, முகத்தில் மஞ்சள் ஒளிர குங்குமப் பொட்டுடன் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த மாலதியின் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை, இப்போதும், அவளை மேலும் அழகாகக் காட்டியது.'இறந்து போனாலும் என் அழகு அப்படியே இருக்கிறதே... ஆமாமாம், இந்த அழகையும், சிரிப்பையும் பார்த்துத்தானே பெரிய இடத்துப் பிள்ளையான, சிவராமன், மயங்கி, என்னையே கல்யாணம் பண்ணிகிட்டான்...' என, எப்போதும் போல பெருமிதத்தில் ஒருகணம் மிதந்தது.அடுத்த கணமே, 'சீ... என்ன இது, நானா இப்படி... ஒன்றும் அறியாத என் காவ்யா குட்டியைத் தவிக்க விட்டு நிர்கதியாய் நிக்கிறேன்... ஐயோ... நான் என்ன செய்வேன்... திடீரென்று என் உயிரை ஏன் பறித்தாய் கடவுளே... முன்னமே தெரிந்திருந்தால், காவ்யாவிற்கு ஏதேனும் வழி செய்திருப்பேனே...'நான் சொகுசா வாழவா நினைத்தேன். என் உயிர் மொத்தமும், காவ்யாவுக்கு மட்டும் தானே... இனி, அவளுக்கு யார் இருக்கா...' மாலதி அரற்றியதை, அங்கு யாரும் கவனிக்கவில்லை அல்லது யாருக்கும் தெரியவில்லை.துக்க வீட்டில் திடீரென்று ஒருவித அமைதி தோன்றுவது சகஜம். அப்படி சில நிமிடங்கள் தோன்றிய அமானுஷ்ய அமைதியை குலைத்து, பெருங்குரலெடுத்து அழுதபடி, தலைவிரி கோலமாக வந்த, வீட்டுப் பணிப்பெண் சுசீலா, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள். மாலதிக்கு, வலது, இடது கை அனைத்தும், இந்த சுசீலா தான்.''அம்மா, மவராசி... இப்படி போயிடீங்களே... அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு... நேற்று கூட நல்லாத்தானே பேசிகிட்டு இருந்தீங்க... என் குடும்பத்தை வாழவெச்ச தெய்வமே... குடிகார புருஷன பத்தி நான் புலம்பறப்பல்லாம், 'வாழ்க்கைன்னா அப்படித்தான் இருக்கும்... உன் புருஷனோட பாசத்தைப் பார்... நீ கொடுத்து வெச்சுருக்கே'ன்னு ஆறுதல் சொல்லி சிரிப்பீங்களே...''எனக்கு, 'குழந்தை இல்லை'ன்னு அழுதப்ப, 'நாங்க இருக்கோம்'ன்னு தைரியம் தந்துட்டு, இப்ப நீங்க போயிடீங்களே... ஐயோ...''கொஞ்ச நேரம், உண்மையான பாசத்துடனும், நேசத்துடனும் அழுது புரண்டாள். திடீரென, நினைவு வந்தவளாக எழுந்து, மாடிக்கு ஓடினாள். கூட்டம் மொத்தமும் அவளையே பார்த்தது.உள்ளே சென்றவள், தாய் இறந்தது அறியாமல் வாயில் கை வைத்து, மலங்க மலங்க விழித்தபடி இருந்த, 10 வயது காவ்யாவை பார்த்தாள். படுக்கையிலேயே சிறுநீர் கழித்து, ஈரமான நிலையில், பரிதாபமாக கடைவாயில் எச்சில் ஒழுக இருந்தவளை, அள்ளி அணைத்துக் கொண்டாள், சுசீலா.''அடிப் பொண்ணே, மாலதிம்மா எங்கேயும் போகல... உன் கூடத்தான் இருக்காங்க... இதோ இனிமே, நானும் உனக்காகத்தான் வாழப் போறேன்... கடவுள், என் வயத்துல ஏன் குழந்தையை தரலைன்னு இப்பத்தான் புரியுது... இனி, நீதான் என் குழந்தை...''அம்மா இருந்தப்ப எப்படி உன்னை கண்ணும், கருத்துமா பார்த்துக்கிட்டாளோ... அப்படியே நானும் உன்னை பார்த்துப்பேன். இதோ இங்க தான் எங்கேயோ மாலதிம்மாவோட ஆத்மா இருக்குது... அம்மா, நீங்க நிம்மதியா போங்க... நான் இருக்கேன் உங்க காவ்யாவுக்கு...''கண்களில் நீர் வழிய, காவ்யாவை கட்டிக்கொண்ட, சுசீலா, ஆதரவாக எழுப்பி, சிறுநீர் கழித்த ஆடையை மாற்றி, அவளை குளிப்பாட்டினாள்.இதையெல்லாம் ஓரமாக இருந்து பார்த்த, மாலதிக்கு, கண்களில் நீருடன் மனமும் நிறைந்தது.'இனி கவலையில்லை... என் விதியை ஏற்றுக்கொள்கிறேன்... குழந்தையான என் செல்ல மகள் காவ்யாவுக்கு, எனக்கு பதிலாக இன்னொரு அம்மா கிடைத்து விட்டாள். இது போதும் எனக்கு...'மாலதி என்றொரு தாய், நிம்மதியாக தன் இறுதி பயணத்தை துவங்கினாள்.சுபா தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !