செல்லப் பிராணியான காட்டுப்பன்றி!
காட்டு பன்றிகள் மிகவும் ஆபத்தானவை. இதனிடம் அகப்பட்டால் காயமின்றி தப்புவது கடினம். இதை, செல்ல பிராணியாக வீட்டில் வளர்த்து வருகிறார், கேரளாவைச் சேர்ந்த, சூண்ட என்ற ஆதிவாசி பெண். இரண்டு ஆண்டுகளுக்கு முன், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பன்றி குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து, முத்து என பெயரிட்டு, புட்டிப்பால் கொடுத்து வளர்த்தார். குழந்தை போல், இவர் வீட்டை சுற்றி சுற்றி வருகிறது. தினம் இரண்டு தடவை பால் குடித்தும், கீரை, கோஸ் மற்றும் தானியங்களை சாப்பிட்டும் வீட்டுக்குள் வளைய வருகிறது. காட்டு விலங்கு என்பதால் இதை கொல்லவோ, விற்கவோ கூடாது என்ற நிபந்தனைக்கு கட்டுப்பட்டு வளர்த்து வருகிறார், அப்பெண். இவர் காட்டுக்குள் விறகு சேகரிக்க போகும் போது, முத்துவும் செல்கிறது. செல்லப் பிராணியாகவே வாழ்ந்து வருகிறது, முத்து.— ஜோல்னாபையன்