உள்ளூர் செய்திகள்

சுவர் இல்லாத சித்திரம்!

சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு விட்டால், எந்த துறையில் வேண்டுமானாலும் சாதித்துக் காட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார், ஜெசின் மார்வடல் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண். பேச்சு வராத குழந்தைகளுக்கு, பேசுவதற்கு கற்றுக் கொடுக்கும் படிப்பில் பட்டம் பெற்றவர் இவர். ஆனால், தனக்கு சற்றும் பரீச்சயம் இல்லாத ஓவியத் துறையில் புகுந்து, சாதித்துக் காட்டியிருக்கிறார்.படித்து முடித்தவுடன் தான், இவருக்கு ஓவியத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவாகவே அதைக் கற்றுக்கொண்ட ஜெசின், வழக்கமான ஓவியங்களை போல் இல்லாமல், தான் வரைவது வித்தியாசமான ஓவியங்களாக இருக்க வேண்டும் என கருதினார்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியை பொய்யாக்கும் வகையில், சுவர் இல்லாமலும் சித்திரங்கள் வரைய முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளார். சுவர்களுக்கு பதிலாக, மாடலிங் துறையில் உள்ள இளம் பெண்களின் உடல்களையே, திரைச் சீலைகளாக்கி, அந்த உடல்களில், தன் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்.இளம் பெண்களின் உடல்களில், பல வண்ணங்களை தீட்டி, பிளமிங்கோ பறவை, நிலா வெளிச்சம் வீசும் இரவுப் பொழுது, அன்னப் பறவை போன்ற ஓவியங்களை தீட்டியுள்ளார். வரைந்து முடிந்ததும், அவற்றை புகைப்படங்களாக எடுத்து, இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, 'மற்றவர்கள் செய்வதை காட்டிலும், வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வமே, என் வெற்றிக்கு காரணம். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காத பெயின்ட்களையே, ஓவியங்கள் வரைவதற்கு பயன்படுத்துகிறேன்...' என்கிறார் ஜெசின்.***சி. சந்தீப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !