உள்ளூர் செய்திகள்

ஷாம்புவில் சாதனை படைத்தவர்!

ஒரு காலத்தில், பணக்காரர்களின் ஆடம்பர, அழகு சாதன பொருளாக, 'ஷாம்பு' இருந்ததை, ஏழைகளும் பயன்படுத்தும் அவசிய பொருளாக்கியவர், சின்னி கிருஷ்ணன்.கடலுாரில், ராணுவ மருத்துவரான, ரங்கநாதன் - மனோரஞ்சிதம் தம்பதியின் மகன், சின்னி கிருஷ்ணன். பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணி செய்த இவருக்கு, எப்போதும் ரசாயன ஆராய்ச்சியிலேயே மனம் ஓடியது.தன் ஆர்வத்திற்கு வடிகாலாகவும், வாழ்க்கையின் வாழ்வாதாரமாக இருக்கும்படியும், ஒரு பரிசோதனை நிலையம் திறந்தார். நேரம் கிடைக்கும்போது, படிக்கும் புத்தகங்களில் இருக்கும் செய்முறை விளக்கங்களை செய்து பார்த்தார்.அப்படி, இவர் கண்டுபிடித்தது தான், 'பாக்கெட் ஷாம்பு!'மும்பை தயாரிப்பு ஷாம்புகளை போல், பாட்டிலில் விற்பனை செய்வதில் இரண்டு பிரச்னை... ஒன்று: மூலதனம் அதிகம் வேண்டும். இரண்டாவது: போட்டியாளர்களுடன் தன் புதிய தயாரிப்பை சந்தைப்படுத்துவது கடினமானது.அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டுமானால், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். அப்படி உருவானது தான், பாக்கெட் ஷாம்பு.ஷாம்புவை பாக்கெட்டுகளில் நிரப்பி, விற்பனை செய்ய போதுமான தொழில் உபகரணங்கள் வாங்க, பல லட்சம் ரூபாய் வேண்டும். எனவே, நாட்டு வைத்தியம் போல், எளிய முறையில், 'பிளாஸ்டிக் டியூப்'களில் ஷாம்புவை அடைத்து, அதை சிறிய பாக்கெட்டுகளில் நிரப்பி, சூடுபடுத்தி ஒட்ட வைத்தார்.ஆரம்பத்தில், ஷாம்பு பாக்கெட்டுகள் தடிமனாக இருந்ததால், பயன்படுத்த கடினமாக இருந்தது. அதை மெலிதாக்குவது எப்படி என்பதை தீவிரமாக சிந்தித்து, அதிலும் வெற்றி கண்டார்.ஷாம்பு, ஊறுகாய், பவுடர், பொம்மை, கைவினை பொருட்கள், பல்பொடி மற்றும் விவசாய பொருட்களை கண்டுபிடித்தார். தேங்காய் நாரிலிருந்து, மிகவும் எளிய முறையில் கயிறு திரிக்க, ஒரு இயந்திரத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர், இவர் தான்.ஷாம்பு நிறுவனத்தை சிறிய அளவில் துவங்கி, 'வெல்வெட்' என்ற பெயரில், பிள்ளைகளின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட வைத்தார். பரந்த மனமும், எதிர்கால சிந்தனையும் கொண்டவர், சின்னிகிருஷ்ணன். அவரது மனைவி, ஹேமலதா, பட்ட மேற்படிப்பு படித்தவர்.கணவரின் ஆலோசனைப்படி, ஆரம்ப பள்ளியை திறந்தார், ஹேமலதா. அதுவும், சிறப்பான பள்ளிகளில் ஒன்றாக வளர்ந்தது.சின்னி கிருஷ்ணனுக்கு நான்கு மகன்கள்; இரண்டு மகள்கள். ஆறு பேருக்கும், சிறப்பான கல்வியை தந்தார்.முதல் மகன், ராஜ்குமார் - கண் மருத்துவர். இரண்டாமவர், அசோக் - வழக்கறிஞர். மூன்றாவது மகள், ஆண்டாள் - பிரபல மகளிர் நல மருத்துவர். நான்காமவர், ரங்கநாதன், பி.எஸ்சி., பட்டதாரியான இவர் தான், இந்தியாவின் ஷாம்பு தயாரிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும், 'கெவின்கேர்' நிறுவன தலைவர். ஐந்தாவது மகள், விஜயலட்சுமி, பி.எஸ்சி., பட்டதாரி. கடலுாரிலுள்ள, பிரபல, 'அக் ஷரா வித்யாஸ்ரம'த்தின் நிறுவனர். ஆறாவது மகன், குமரவேல் - பல கிளைகளுடன் செயல்படும், 'நேச்சுரல்' சிகை அலங்கார நிறுவன உரிமையாளர்.குடும்ப தொழிலாக இருந்த, 'வெல்வெட் ஷாம்பு' நிறுவனத்திலிருந்து தனியாக வந்து, 15 ஆயிரம் ரூபாயில் துவங்கப்பட்டது தான், 'சிக் ஷாம்பு!' பின், அது, 'கெவின்கேர்' என்ற பெயரில், 16 தயாரிப்புகளின் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது.சகோதர - சகோதரிகளுடன் இணைந்து, நவம்பர், 2018ல், தன் பெற்றோருக்கும், தாத்தா - பாட்டிக்குமாக, நான்கு சிலைகளை திறப்பதாக, அழைப்பிதழ் அனுப்பியிருந்தார், ரங்கநாதன்.அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ:கடலுாரில் உங்கள் குடும்பம், மிகப்பெரிய பணக்கார குடும்பம் என தெரிகிறதே...இப்படி நீங்கள் சொல்வதற்கு காரணம்... சாதாரண தபால்காரரான, என் தந்தையின் தாத்தாவான, சிங்காரவேலர், மகன் ரங்கநாதனை, ஆங்கில மருத்துவராக படிக்க வைத்து, ராணுவத்தில் பணிபுரிய அனுப்பினார்.தாத்தா ரங்கநாதன், சம்பள பணத்தை சிக்கனமாக செலவு செய்து, மீதியை, பாட்டி மனோரஞ்சிதத்திடம் கொடுக்க, அவர், அந்த காலத்திலேயே கடலுாரின் புறநகர் பகுதியில், நிலங்களை வாங்கி போட்டிருந்தார்.அன்று, ஊருக்கு வெளியே இருந்த நிலங்கள், இன்று, வளர்ச்சி பெற்ற கடலுாரின் மையப்பகுதியாகி விட்டது. பாட்டி வாங்கிய நிலங்களை விற்று தான், எங்களை படிக்க வைத்தனர்.இன்று, நாங்கள் இந்த அளவு முன்னேற காரணமாக இருந்த, தாத்தா - பாட்டிக்கும், தாய் - தந்தைக்கும் நன்றி சொல்ல, அவர்களை வணங்கி வழிபடவே, சிலை வைத்துள்ளோம்.உங்களின், 'கெவின்கேர்' நிறுவனத்திலிருந்து எத்தனை விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன?'கிரீன் டிரண்ட்' சிகை அலங்கார நிலையம் - 400 கிளைகளுடன் இயங்குகிறது. இது தவிர, 16 விதமான தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளோம்.உங்களின் வாரிசுகள்...இரண்டு மகள்கள், ஒரு மகன்.மகன், உங்கள் நிறுவனத்தில் தான் பணிபுரிகிறாரா?மகனை என்னுடன் வைத்து, அவன் சுதந்திரத்தை பறிக்க விரும்பவில்லை. படிப்பை முடித்ததும், 'தனியாக தொழில் துவங்க போகிறேன்...' என்றார். சில லட்சம் தந்தேன். 'சி.கே., பேக்கரி' என்ற, நிறுவனம் துவங்கி, வெற்றிகரமாக பல கிளைகளுடன் நடத்தி வருகிறார்.அம்மா ஹேமலதா நடத்தி வந்த பள்ளி, இப்போது எப்படி உள்ளது?அதை, 'சி.கே., ஸ்கூல் ஆப் ப்ராக்டிகல் நாலெட்ஜ்' என்ற பெயரில், நடத்தி வருகிறேன். சிறப்பாக செயல்படுகிறது. இந்தியாவில், ஷாம்பு விற்பனை எந்த அளவு உள்ளது?அகில இந்திய அளவில் மூன்றாவது இடம். ஆந்திரா போன்ற சில மாநிலங்களில், நாங்கள் முதல் இடத்தில் உள்ளோம்.ஜி.அசோகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !