நட்பின் இழை!
அழைப்பு மணி ஓசை கேட்டு, கதவை திறந்த சங்கரி, ஒரு வினாடி திகைத்து நின்றாள். அவளுக்கு, தைலாவைப் பார்த்ததும், என்ன சொல்வது என்று புரியவில்லை.ஆனால், தைலாவோ, சங்கரியின் முகம் போன போக்கையோ, அவள் மனசில் ஓடும் எண்ணங்களையோ பற்றித் துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.எப்போதும் போல் புன்னகை தவழ, ''என்ன ஆன்ட்டி... அப்படியே திகைச்சுப் போய் நிக்கறீங்க... 'உள்ள வா'ன்னு கூப்பிட மாட்டிங்களா?'' என்று கேட்டவள், சங்கரி, 'வா...' என்று சொல்வதைக் கூட எதிர்பார்க்காமல், வழக்கம் போல் உள்ளே நுழைந்து, ஹாலில் மின் விசிறியைச் சுழல விட்டு, 'அப்பா... என்ன வெயில்...' என்று சொல்லிக் கொண்டே, கையிலிருந்த பெரிய பிளாஸ்டிக் பையை, எதிரே இருந்த டீபாயின் மேல் வைத்து, சங்கரியை திரும்பிப் பார்த்து, மீண்டும் புன்னகைத்தாள்.சங்கரிக்கு என்ன சொல்வதென்று புரிந்தால் தானே!தைலா என்று மிக பழமையான பெயர் கொண்ட, நவீன யுகத்து இந்த இளம் பெண், சங்கரியின் மகன் ரகுவை காதலித்தவள். கல்யாணப் பேச்சு எடுத்ததும், இரண்டு குடும்பத்தினரின் எதிர்ப்பால், காதல் முறியடிக்கப்பட்டு, பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஒருவனை, அடுத்த மாதம் கல்யாணம் செய்து கொள்ள போகிறவள், எதற்கு இங்கு இந்த நேரத்தில் வந்திருப்பாள்?சங்கரிக்கு ஏதாவது விளங்கினால் தானே!''என்ன சங்கரி ஆன்ட்டி... இப்படி வாங்க... திடீர்ன்னு பார்த்ததில் அதிர்ச்சியா?'' என்றாள் தைலா.ஒருவாறாக தன்னை சமாளித்துக் கொண்டாள் சங்கரி.''இல்லையில்லை... வா... என்ன விசேஷம்?'' என்றவள், எதையோ கூட்டிக் குழப்பிக் கொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினாள்.''விசேஷம்னா தான், நான் இங்க வரணுமா? ஆனா, இப்ப நான் வந்ததற்கு காரணம் இருக்கு.''சங்கரி ஒன்றும் பதில் சொல்லவில்லை.''என்னன்னு கேக்க மாட்டிங்களா ஆன்ட்டி?'' என்று, மீண்டும் கேள்வியை வீசினாள் தைலா.வறட்சியாக சிரித்தாள் சங்கரி. பின், ''என்ன, கல்யாணப் பத்திரிகை தர வந்தியா? அத ரகுகிட்ட ஆபீசிலேயே கொடுத்திருக்கலாமே,'' என்றாள் தொடர்ந்து.மீண்டும் புன்னகை செய்தாள் தைலா.''என்னப் பாக்கக்கூட உங்களுக்கு பிடிக்கலை... அப்படித்தானே!''முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் சங்கரி.தைலா எழுந்து வந்து, நின்று கொண்டிருந்த சங்கரியின் கைகளை பற்றி இழுத்துச் சென்று, தான் உட்கார்ந்திருந்த சோபாவுக்கு, எதிர் சோபாவில் அமர்த்தினாள்.''வீட்ல, அங்கிள் இல்லயா?'' என்று சுற்று முற்றும் பார்த்தாள் தைலா.''அவர் பாங்குக்கு போயிருக்கார்... வர்ற சமயம் தான், '' என்றாள் சங்கரி.ஈஸ்வரன் வந்து விட்டால் தேவலை என்று தோன்றியது.''ஓ... அப்படியா? சரி வரட்டும், காத்திருக்கேன். உங்க ரெண்டு பேர் கிட்டயும் தான் நான் பேசணும்,'' என்ற தைலா, ''எனக்கு ரொம்ப தாகமாக இருக்கு... நான் பிரிஜ்லேர்ந்து தண்ணி எடுத்துக்குறேன்,'' என்று, தானே எழுந்து சென்று, தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து மடமடவென்று குடித்தாள்.ஏனோ முட்கள் மீது அமர்ந்திருப்பது போல் இருந்தது சங்கரிக்கு.தைலா நல்ல பெண் தான். ஓரளவு அழகும் இருந்தது. புத்திசாலித்தனம் நிறையவே. ரகுவும், அவளும் ஒன்றாகத் தான் சோழிங்கநல்லூரில் இருந்த அந்த மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில், இணைந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.தோழி என்ற முறையிலும், உடன் வேலை பார்ப்பவர் என்ற சலுகையிலும், தனியாகவும், மற்ற தோழர்களுடனும், தோழியருடனும் பல தடவை, இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள் தைலா. சங்கரி - ஈஸ்வரன் இரண்டு பேரிடமும் நன்றாக பேசி பழகியவள் தான்.திடீரென்று ஒருநாள் ரகு, தனக்கும், அவளுக்கும் இடையே உள்ள காதலைப் பற்றிச் சொல்லி, திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்ட போது தான், பூகம்பம் வெடித்தது; புயல் வீசியது; உணர்ச்சிகள் கொந்தளித்தன.காரணம்?வெவ்வேறு ஜாதி, குலம், கோத்திரம், பொருளாதார வித்தியாசங்கள் என்று, பல காரணிகள், காரணங்களாக காட்டப்பட்டன.தைலா வீட்டில் என்ன நடந்ததோ, தெளிவாக தெரியாது என்றாலும், சங்கரியும் - ஈஸ்வரனும் நிர்த்தாட்சண்யமாக ரகுவின் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.ஏதோ கொஞ்சம் வாதாடி பார்த்து தோற்றுப் போனான் ரகு. ஆனால், மிரட்டவில்லை. ஒருநாள் பேச்சோடு பேச்சாக, 'நாங்கள் பிரிந்து விடத் தீர்மானித்து விட்டோம்...' என்றான்.'ரொம்ப சந்தோஷம்...' என்றனர் ஈஸ்வரனும், சங்கரியும். அந்தப் புயலுக்கு பின், தைலா, இந்த வீட்டிற்கு வரவில்லை.இன்று, திடீரென்று வந்து நிற்கிறாள் என்றால் என்னவாக இருக்கும்? சங்கரிக்கு மூளை குழம்பியது. நல்ல வேளையாக, அவள் பிரார்த்தனை பலித்தது போல், திறந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தவர், ஹாலில் தைலாவைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றார்.''ஹாய் அங்கிள்... எப்படி இருக்கீங்க?'' என்றாள் தைலா சகஜமாக.ஈஸ்வரன் வாயிலிருந்தும் உடனே பதில் வரவில்லை.இறுகிய முகத்துடன் தன்னை சமாளித்துக் கொண்டு, ''ம்...'' என்றவர், நேரே பெட்ரூமுக்குள் சென்றார்.சங்கரியும், ''காபி குடிக்கிறயா?'' என்று அந்த இடத்தை விட்டு நகரப் பார்த்தாள். 'இனி இவள் பாடு, ஈஸ்வரன் பாடு, மெதுவாக கழன்று கொள்ளலாம்...' என்று நினைத்து எழுந்தபோது, தைலா, ''வேண்டாம், உக்காருங்க ஆன்ட்டி... நான் இங்க, இப்ப காபி குடிக்க வரவில்லை. உங்களோடும், அங்கிளோடும் பேசத் தான் வந்திருக்கேன்,'' என்றாள்.அதற்குள் அவள் எதிர்பார்த்தபடி, உள்ளேயிருந்து எதிரே வந்து நின்றார் ஈஸ்வரன். அவர் முக இறுக்கம், இன்னும் மாறவில்லை.''சரி... இப்ப என்ன பேச வந்திருக்க? அதான் உனக்கும், ரகுவுக்கும் ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டானே? அப்புறம் என்ன இருக்கு பேச,'' என்றார் சற்றுக் கடுமை தொனிக்கும் குரலில்.ஒரு வினாடி மவுனமாக இருந்தாள் தைலா. பின் அவரை நேராக பார்த்து, ''உக்காருங்க. எங்களுக்கு நடுவில இனிமே ஒண்ணும் இல்லை தான்... அதனால் தான் பேச வந்திருக்கேன்,'' என்றாள். இப்போது, அவள் குரல் சற்று வித்தியாசமாக ஒலித்தது.ஈஸ்வரன் பதில் சொல்லாமல், சங்கரி அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தார்.இரண்டு பேரையும், ஆழமான கண்களால் பார்த்தாள் தைலா. அந்த பார்வையின் ஆழம், வயதான அந்த இருவரையும், சற்று நிலைகுலையச் செய்தது.'ஏதாவது சண்டை போட்டு, ரகளை செய்ய வந்திருப்பாளோ?'''என்ன... நான் உங்க கிட்ட கலாட்டா செய்ய வந்திருக்கேன்னு நினைக்கறீங்க இல்லை?'' என்ற போது, இருவரும் சற்று திடுக்கிட்டனர்.ஈஸ்வரன், தன்னை சமாளித்துக் கொண்டு, ''ஹூம்... இனி, என்ன கலாட்டா செய்ய இருக்கு... பிடிக்கலை, ஒத்து வர்ல... விட்டாச்சு. அதுக்கப்புறம் என்ன இருக்கு.''''கரெக்ட்... தட்ஸ் த ஸ்பிரிட்,'' என்ற தைலா, தான் கொண்டு வந்திருந்த... பெரிய பையிலிருந்து, ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்தாள்.''ஆன்ட்டி, அங்கிள்... நடுவில சண்டையில் பேசும் போது, நீங்க ரகுகிட்ட நான் ஏதேதோ கிப்டாகக் கிளப்பி விட்டேன்னு சொன்னீங்களாம். அத அவன் என்கிட்ட வந்து சொன்னபோது, மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒண்ணு சொல்றேன்... நாங்க ரொம்ப நாட்களுக்கு, ஜஸ்ட் நண்பர்களாகத் தான் பழகினோம். ஆனா, ஏதோ ஒருநாள் கல்யாண பேச்சு வந்த போது, 'நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகிட்டா என்ன? நமக்குள் நல்ல புரிதல் இருக்கே... பேமிலிக்கும் இரண்டு பேரையும் தெரியுமே...'ன்னு நெனச்சு கேட்டோம்,'' என்று தோளைக் குலுக்கி, உதட்டை பிதுக்கினாள் தைலா.தொடர்ந்து, ''ஆனா, உங்க அபிப்ராயம் வேற மாதிரி இருந்தது. சரி, அது உங்க இஷ்டம். உங்க பையனுக்கும், உங்களுக்கும் ஏத்த மாதிரி குடும்பத்தை சேர்ந்த பெண்ணை தான் தேர்ந்தெடுக்கணும்ன்னு ஆசைப்பட்டிங்க. எங்க வீட்டிலும் அப்படியே! அதனால் தான் நாங்களும், இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டோம். ரகு என் பிறந்த நாளுக்கும், காதலர் தினத்திற்கும் ரெண்டு முறை பரிசு வாங்கி தந்தது உண்மை. அதை நான் ஏமாத்தி வாங்கி கொண்டு விட்டதாக நினைச்சீங்கன்னதும், எனக்கு மனசு கஷ்டமா போச்சு. அதனால் தான், அவன் எனக்கு வாங்கி தந்த புடவை, மேக்கப் செட், பேனா, சல்வார் கமீஸ்ன்னு எல்லாத்தையும் திருப்பி தந்துட்டு போறதா முடிவு செய்துட்டேன்,'' என்று, அந்த பொருட்களை சோபாவின் மேல் எடுத்து வைத்தாள்.சங்கரியும், ஈஸ்வரனும் இந்த சந்தர்ப்பத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்து நின்றனர்.''தயவு செய்து, ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க ஆன்ட்டி, அங்கிள், நீங்களும் தான். உங்கள மாதிரி பெரியவங்க எல்லாம், கூட்டு குடும்பத்தில் அத்தை, மாமா, பாட்டி, தாத்தான்னு நிறைய பேர் இருக்கிற மாதிரி சூழல்லே வளர்ந்தவங்க. நாங்க அப்படியில்ல. எங்க உலகம் பெரும்பாலும், நண்பர்களோட தான். உங்களுக்கு, அன்று உறவுகள் இருந்த மாதிரி, எங்களுக்கு இன்று எல்லா உறவுகளுமே பிரண்ட்ஸ்... ஐ மீன் நண்பர்கள் தான். இது தான் யதார்த்தம். எங்க மனச வெளிப்படுத்த, துக்கமோ, சுகமோ, பகிர்ந்துக்க, அவங்க தான் முதல்ல வருவாங்க. இது இன்றைய சூழ்நிலை.''அதோட, நாங்க எல்லா உறவுகளிலுமே, ஒரு தோழமை இருக்கணும்ன்னு நினைக்கிறோம். நட்பின் இழை இருக்கிற எந்த உறவுமே, அது கணவன் - மனைவியானாலும் அறுந்து போகாது. இது என்னோட அபிப்ராயம். இது சரியா, தப்பான்னு உங்ககிட்ட வாக்குவாதம் செய்ய நான் இங்க வரல.''நீங்க, நான் ரகுவ காதலித்தது என் சுயநலத்திற்காக செய்ததா நினைச்சுக்க வேணாம். அதே மாதிரி, ரகுவும், என்னை சுயநலத்திற்காக காதலித்ததா நினைக்கல. உங்க மகன் எனக்கு ஒரு நண்பன். அவ்வளவுதான். அவன் மனசு உட்பட எல்லாத்தையும் உங்ககிட்ட, இந்த வினாடி திருப்பிக் கொடுத்திட்டேன்... சரியா?'' என்று நீளமாகவும், சரளமாகவும் தைலா பேசி முடிக்கவும், ரகுவின், 'பைக்' வந்து நிற்கும் சப்தமும் கேட்டது.என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சங்கரியும், ஈஸ்வரனும் திகைத்து நிற்கையில்... ரகு உள்ளே நுழைந்தவன் எதிர்பாராமல், தைலாவைப் பார்த்து, திடுக்கிட்டான்.''அட, தைலா... நீ என்ன இங்க... எதுக்கு வந்தே?'' என்றான் ஆச்சரியத்துடன்.''உங்கிட்டேருந்து, நான் வாங்கினதா சொன்ன எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்,''என்றாள் சிரித்தபடி தைலா.''ஹே... கம் ஆன்... இதெல்லாம் என்ன... விளையாட்டா எடுத்துக்கோ,'' என்றான் ரகு.''நீயும் அதை விளையாட்டா எடுத்துக்கோ,'' என்றவள்.''நான் கிளம்பறேன்; நாளைக்கு ஆபீசில பார்ப்போம்... பை அங்கிள். பை ஆன்ட்டி,'' என்று கூறியபடி, கிளம்பி வெளியே செல்பவளை வழி அனுப்பச் சென்றான் ரகு.''நான் வேணா உன்னை வீட்ல, 'ட்ராப்' செய்யட்டுமா தைலா,'' என்றான் ரகு.''நோ தாங்க்ஸ்... நான் பார்த்துக்குறேன்... பை டா,'' என்று வெளியே சென்றாள் தைலா.உள்ளே வந்த ரகு, ''அம்மா, எனக்கு ரொம்ப தலை வலிக்குது. அதான் சீக்கிரம் வந்துவிட்டேன். ஒரு கப் காபி கொடேன்,'' என்றபடி, டிரஸ் மாற்ற தன் அறைக்குள் சென்றான்.அவனும், எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல் போவதை பார்த்து, திகைத்துப் போய் நின்றிருந்ததில், முதலில் சங்கரி தான் சுதாரித்துக் கொண்டாள்.''நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டிங்களே,'' என்றாள் சங்கரி.'என்ன?' என்பது போல் அவளைப் பார்த்தார் ஈஸ்வரன்.''நாம தப்பு செய்துட்டோமோன்னு தோணறது,'' என்றாள் சங்கரி.பதில் ஒன்றும் பேசவில்லை ஈஸ்வரன்.*** சுவாமிநாதன்