உள்ளூர் செய்திகள்

ஏ. வி.எம்., சகாப்தம் (5)

ஒரு மொழியில் படம் எடுக்கும்போது, எத்தனை நாள், 'கால்ஷீட்' தேவைப்படுமோ, அதைவிட அதிகமான கால்ஷீட், மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் பிடித்ததால் தேவைப்பட்டது. அதனால், ஒவ்வொரு மொழி படத்தையும் முடிப்பதற்கு என்ன பட்ஜெட் ஆகுமோ, அப்படி ஆகாமல், அந்தந்த மொழி படத்தின் பட்ஜெட்டும் அளவுக்கு மீறி போனது. வேறு வழியின்றி, பெண் படத்தை முடிக்க வேண்டும் என்பதால், இயக்குனர், நடிகர் - நடிகையர் மூலம் வந்த பிரச்னைகள் அனைத்தையும் சமாளித்து, படத்தை முடித்து, வெளியிட்டார், அப்பா.ஆனால், எதிர்பார்த்தபடி படம் வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம், மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் எடுத்ததால், தமிழில் என்ன குறை இருந்ததோ, அதே குறை, மற்ற மொழி படங்களிலும் இருந்தது.கால்ஷீட் பிரச்னைகளாலும், படம் வெற்றி பெறாததாலும் ஏற்பட்ட மனத்தாங்கலை, அப்பாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாழ்க்கை படம், மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றது. பெண் திரைப்படம், மூன்று மொழிகளிலும் தோல்வி கண்டது. இப்படி, ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டவர், மனம் தளராமல் அடுத்த முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.கர்நாடகாவில், குப்பி வீரண்ணா என்பவர், தன் பெயரில் நாடக கம்பெனியை ஆரம்பித்து, பேடர கண்ணப்பா என்ற நாடகத்தை நடத்தி வந்தார். இந்த நாடகம், 100 நாட்களுக்கு மேல், கர்நாடகாவில் வெற்றிகரமாக நடந்தது. அந்நாளில், மைசூர் மகாராஜாவின் சபையில் ஆஸ்தான நடிகராகவும் இருந்தார், குப்பி வீரண்ணா.ஒரு சமயம், அப்பாவுடன், நாங்கள் பெங்களூரு சென்றிருந்தோம். அங்கு, திரைப்பட விநியோகஸ்தராக இருந்த, அப்பாவின் நண்பர் பசவராஜ் என்பவரை சந்தித்து, 'மைசூர் அரண்மனையை பார்க்க வேண்டும்...' என்ற, எங்கள் விருப்பத்தை சொன்னோம். 'மைசூரில் உள்ள குப்பி வீரண்ணாவிடம் சொல்லி, அவர் மூலம் அரண்மனையை பார்க்க ஏற்பாடு செய்கிறேன்...' என்று, எங்களை மைசூருக்கு அனுப்பி வைத்தார், பசவராஜ்.மைசூர் சென்ற எங்களை, அன்போடு வரவேற்று, 'இன்று, அரண்மனையில் மகாராஜாவின் தர்பார் நடக்கிறது. நீங்கள் வந்தது, நல்ல நேரம் தான்...' என்று அழைத்துச் சென்று, பார்வையாளர் பகுதியில் எங்களை அமர வைத்தார், குப்பி வீரண்ணா.தர்பாரில், ராஜ உடையில் மைசூர் மகாராஜாவும், அரண்மனையில் பணியில் இருப்போர், ராஜா காலத்து உடையிலும் இருந்ததை கண்ட எங்களுக்கு, மகிழ்ச்சியாகவும், புது அனுபவமாகவும் இருந்தது.அன்றைய தர்பார் நிகழ்ச்சி முடிந்ததும், 'உங்களுக்கு நேரம் இருந்தால், இன்று மாலை, நான் நடத்திக் கொண்டிருக்கும், பேடர கண்ணப்பா நாடகத்தை பார்க்கிறீர்களா...' என்று கேட்டார், குப்பி வீரண்ணா.'பார்க்கலாம்...' என்று அப்பா சொல்ல, அதன்படி, நாங்கள் சென்று நாடகத்தை பார்த்தோம்.நாடகத்தின் கதையும், வேடன் கண்ணப்பனாக நடித்தவரின் நடிப்பும், அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. குப்பி வீரண்ணாவிடம் நன்றி தெரிவித்து, மிகவும் பாராட்டினார். அப்போது, 'இந்த நாடகத்தை, திரைப்படமாக எடுக்கலாம் என்று ஆசை. நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்...' என்றார், குப்பி வீரண்ணா.'சென்னை வாருங்கள்... எல்லா உதவிகளையும் செய்கிறேன்...' என்று உறுதியளித்தார், அப்பா.'கண்ணப்பனாக யாரை நடிக்க வைக்கலாம்...' என கேட்டார், குப்பி வீரண்ணா.'நாடகத்தில் நடித்தவரையே நடிக்க வைக்கலாம். அவரும் நன்றாக தானே நடிக்கிறார்...' என்று அப்பா கூற, சம்மதித்தார், குப்பி வீரண்ணா.பசவராஜ், குப்பி வீரண்ணா இருவரும் சேர்ந்து, 'ஜி.கே., புரொடக் ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். அந்த நிறுவனமும், ஏவி.எம்., நிறுவனமும் சேர்ந்து கூட்டு தயாரிப்பாக, பேடர கண்ணப்பா படம் உருவாக ஆரம்பித்தது.படப்பிடிப்பு, சென்னை, ஏவி.எம்., ஸ்டுடியோவில் நடந்தது. ஆர்ட் டைரக்டர், கேமரா மேன் உட்பட, தொழில்நுட்ப கலைஞர்களை, சென்னையிலேயே ஏற்பாடு செய்தார், அப்பா. கர்நாடகாவை சேர்ந்த, எச்.எல்.என்.சிம்ஹா என்பவர், படத்தை இயக்கினார்.படப்பிடிப்பு முடிந்து, கர்நாடக மாநிலம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது. எல்லா இடங்களிலும், 100 நாட்களுக்கு மேல் ஓடியது.கண்ணப்பனாக நடித்தவர், மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பேடர கண்ணப்பா படத்தின் மூலம் புகழடைந்தவர், கர்நாடகாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர், ராஜ்குமார். நடிகர் ராஜ்குமாரை, திரை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர், அப்பா என்பதில் எங்களுக்கு பெருமையே. பின், இந்த கதையை, தெலுங்கில், காளஹஸ்தி மஹாத்மியம் என்ற பெயரிலும், வேடன் கண்ணப்பா என்ற பெயரில், தமிழிலும், சிவ பக்தா என, இந்தியில் தயாரித்து திரைப் படமாக்கினோம். இந்தியில், 'ஷாகூ மோடக்' என்ற நடிகர் நடித்தார்.கண்ணப்பரின் முரட்டுத்தனமான பக்தியை, வட மாநில மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 'சிவனது திருமேனியை காலால் மிதிப்பதா...' என்று வெறுத்து, ஒதுக்கினர். இந்த கலாசார பின்னணியில், சிவ பக்தா கண்ணப்பன், இந்தியில் தோல்வி கண்டான்.வாழ்க்கை மற்றும் நாம் இருவர் போன்ற வெற்றிப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய, ப.நீலகண்டன், திரைக்கதை, வசனம் எழுதி, முதல் முறையாக இயக்கும் பொறுப்பையும் ஏற்ற படம், செல்லப்பிள்ளை.கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா மற்றும் சாவித்திரி போன்ற, பெரிய நடிகர்கள் நடித்த இப்படத்தின் இசையமைப்பாளர், ஆர்.சுதர்சனம். படப்பிடிப்பு நன்றாகவே நடந்து, ஓரளவு முடிவு பெற்ற சமயம், நீலகண்டனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த படத்தை போட்டு பார்த்தார், அப்பா. அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. தன் அதிருப்தியை நீலகண்டனிடம் தெரிவித்தார்.பதிலேதும் சொல்லாமல் வெளியேறி, மறுநாள் அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார், ப.நீலகண்டன். — தொடரும்ஏவி.எம்.குமரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !