தந்ததை ஏற்று, வெந்ததை தின்பதா?
இவ்வுலகம் மிக விசித்திரமானது. சிலருக்கு அள்ளியும், சிலருக்கு கிள்ளியும் கொடுத்துள்ளது.இப்படி, தங்களுக்கு அளிக்கப்பட்டதை ஏற்று, 'நமக்கு கொடுத்து வைச்சது இவ்வளவு தான்; இதை வைத்து, சொச்ச காலத்தை ஓட்ட வேண்டியது தான்...' என்கிற முடிவிற்கு, பலரும் வந்து விடுகின்றனர்.தங்களை சுற்றியுள்ள நூலாம் படைகளை, தாம்பு கயிறாக, இரும்பு சங்கிலியாக கருதி, போராட்ட குணத்தையே தொலைத்து விடுகின்றனர். இந்நினைப்பை மட்டும் சுமந்திருந்தால், இன்று, உலக பணக்காரர்கள் நூறு பேர்களுள், ஐந்து இந்தியர்கள் உருவாகியிருக்க முடியாது. இவர்கள் ஐந்து பேரும், முதல் தலைமுறை பணக்காரர்கள். அதாவது, அப்பா சேர்த்து வைத்ததை, மூலதனமாக கொண்டு, அதை, பல கோடி மடங்காக ஆக்கியவர்கள்.அது மட்டுமா... இன்று, இந்தியாவில் உருவாகிற, 100 ஐ.ஏ.எஸ்.,களுள் பத்து பேர் தமிழர்கள்; இவர்கள் மட்டும், 'நான், ஏழை விவசாயியின் மகன்; என்னால் என்ன செய்ய முடியும்...''நான் ஆட்டோ ரிக் ஷா ஓட்டுபவரின் மகன்; ஐ.ஏ.எஸ்., ஆவதை நினைத்துப் பார்க்க முடியுமா...' என, சமூகம் தந்ததை மட்டுமே ஏற்றிருந்தால், பல சாதனைகள், நிகழ்ந்திருக்கவே முடியாது.'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பதெல்லாம், இன்று வேலைக்கு ஆகாது; வேண்டும் என்கிற மனமே, பொன் செய்யும் மருந்தாக மாறும்.'ஆசை தான் துன்பங்களுக்கு காரணம்...' என்று, புத்தர் சொன்னது உண்மை தான்; ஆனால், ஆசை தான், வளர்ச்சிக்கு காரணம் என்கின்றனர், அபரிமிதமாக முன்னேறியவர்கள். இதையே, 'அத்தனைக்கும் ஆசைப்படு...' என்கிறார், குரு ஜக்கி வாசுதேவ்.'ஆட்டுக்கு வாலை கடவுள் அளந்து தான் வைத்திருக்கிறான்...' என்றும், 'விழுந்து விழுந்து புரண்டாலும், ஒட்டுறது தான் ஒட்டும்...' என்றும், நம் முன்னோர், ஆழ்ந்த பொருளுடன் சொல்லிச் சென்றனர்.இதன் மேலோட்டமான பொருளை மட்டும் பிடித்து, 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது; அவனுக்கு நல்ல நேரம்; அவன் செய்த அதிர்ஷ்டம்; எனக்கு, அது எப்படி பொருந்தும்...' என்று, வாழ்க்கை போரில் இறங்காததற்கு, சாக்கு போக்கு சொல்லி, உழைப்பு, சிந்தனை, அறிவுக் கூர்மை மற்றும் துணிவு ஆகிய ஆயுதங்களை வீசி எறிந்து, நிராயுதபாணிகளாக நிற்கின்றனர்.வறுமை, இயலாமை மற்றும் பசியின் கொடுமையை அனுபவித்தவன் நான்.இளவயதில், என் தாயிடம், பத்து பைசா பெற்று, நாயர் கடையில், 'பன்' வாங்கி, உண்பேன்; அது, என் பானை வயிற்றிற்கு போதாது.'இன்னொரு பத்து பைசா தாம்மா...' என்று கேட்பேன்.'தருகிறேன்... ஆனால், நாளைக்கு கிடையாது; பரவாயில்லையா...' என்பார் அம்மா.வறுமையை, வெற்றி கொள்ள வேண்டும் என்ற உந்து சக்தியை, எனக்கு தந்ததே, இந்த பத்து பைசா, 'பன்' தான் என்றால் நம்புவீர்களா...நம் இயலாமையையும், வறுமையையும் பார்த்து, கை கொட்டி சிரிப்போரும், கேலி செய்வோரும் ஒரு நண்பன் தர முடியாத மன எழுச்சியை, நமக்கு தருகின்றனர்.'என்னை பாத்தா கை கொட்டி சிரித்தாய்... வளமையில், உன்னை மிஞ்சுகிறேன் பார்...' என்று சூளுரைத்து, நெஞ்சிற்குள், நெருப்பு பொறியை வைத்தால், அது, அணு உலையாய் மாறி, வேலை செய்யும்.'நல்லா சிரிச்சுட்டு போ... என்ன செய்றது, என் நிலைமை அப்படி...' என்று, அச்சிரிப்பை சாதாரணமாக ஏற்று விட்டால், வாழ்வின் துன்பம் தொடரவே செய்யும்.இச்சமூகமும், உங்கள் சூழலும் தந்ததை ஏற்று, 'உடுக்க உடை; படுக்க பாய்; தின்ன சோறு. இதுக்கு மேல், என்ன வேணும்...' என்று, வறட்டு தத்துவம் பேசிக் கொண்டிருந்தால், வாழ்வின் பெருஞ்செலவுகளை, நம்மால் எதிர்கொள்ள இயலாது.'எனக்கு இன்னது வேண்டும்...' என்று, சமூகத்தின் சட்டையை பிடித்துக் கேளுங்கள்.பின், 'இருப்பது போதாது; இன்னது, இன்னும் வேண்டும்...' என்று, உங்களை நீங்களே கேளுங்கள். இக்கேள்விகள், நம்முள் உறங்கி கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்பும்; புது உற்சாகத்துடன் கிளம்பச் செய்யும்; வாய்ப்புகளை, வளங்களை துருவித் தேடச் சொல்லும்.இந்த உலகம், ஒரு அலிபாபா குகை; 'அண்டாகாகசம் அபூகா குசம் திறந்திடு சீசே...' என்று, சரியானபடி மந்திரம் சொன்னால் நிச்சயம் திறக்கும்! - லேனா தமிழ்வாணன்