ஆச்சி மனோரமா! (30)
பல தடைகளையும் மீறி, மனோரமாவின் மகன் பூபதிக்கும், தஞ்சாவூர் கோவிந்தராஜு முதலியார் மகள், தனலட்சுமிக்கும் திருமணம் மிகச் சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடந்தேறியது. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் பிறந்தனர். பூபதியை எப்படி கண்ணும் கருத்துமாக வளர்த்தாரோ, அதேபோல தன் பேரக் குழந்தைகளையும் சீராட்டி, பாராட்டி வளர்த்தார், மனோரமா.ஆனாலும், அவர் வாழ்வில் சோக கீதம் மறுபடியும் பாடத் துவங்கியது. மதுவுக்கு அடிமையானார், பூபதி. நெருக்கமானவர்கள் சிலரால் ஏமாற்றப்பட்டார்; நிறைய பணத்தை அவர்களிடம் இழந்தார்.குடியில் இருந்து அவரை மீட்டு வருவதற்காக எவ்வளவோ முயற்சி செய்தார், மனோரமா. ஆனால், எதுவுமே பலனளிக்கவில்லை.பொதுவாக காமெடி நடிகர்கள், திரையில் மற்றவர்களை சிரிக்க வைப்பர். ஆனால், அவர்களின் சொந்த வாழ்க்கையில் அழுதுகொண்டே இருப்பர். இது, மனோரமாவின் வாழ்விலும் தப்பாமல் நடந்தது.சொந்த வாழ்க்கையில் தினந்தோறும் அழ ஆரம்பித்தார். தன் மகனை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அது நிறைவேறவில்லை. ஆனாலும், தன் பேரக் குழந்தைகளை டாக்டராக்கி அழகு பார்த்தார்.ஆனாலும், அந்த சந்தோஷமும் அதிக நாள் நீடிக்கவில்லை. மகன் முழுநேர குடிகாரனாக மாறிவிட்டார். எப்போதும் போதை மயக்கத்திலேயே கிடந்தார்.என்ன செய்வது?இதுவே அவரை உடைந்து போக செய்தது. உள்ளம் கவலைகளால் பின்னிக் கொண்டது. அதுவே அவரது உடலிலும் தளர்வை தந்தது. வயது மூப்பு வேறு.சுறுசுறுப்பை இழந்தார், மனோரமா.ஆயிரம் படங்கள் நடித்து முடித்த நிலையில், ஒரு படப்பிடிப்பிற்கு கூட நடிக்க சென்று, 'நடிக்க முடியாது' என்று திரும்பி வந்ததில்லை. ஆனால், அவரது வாழ்வில் அப்படியொரு சம்பவமும் நிகழ்ந்து விட்டது... ஆசை மனைவி என்றொரு படம். அதில் நடிப்பதற்கு மனோரமாவை ஒப்பந்தம் செய்தனர். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்தவர், இடிச்சபுளி செல்வராஜ்.அந்த படத்தின் படப்பிடிப்பு காட்சியை, உதவி இயக்குனர் மனோரமாவிடம் சுருக்கமாக விவரித்தார். அதில், அவருக்கு மகளாக, சங்கராபரணம் ராஜலட்சுமி நடித்தார்.முதல் நாள் படப்பிடிப்பு நடக்க இருந்த அன்று, குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன், செட்டிற்கு சென்று விட்டார். அப்போது, அந்த படத்தின் மற்றொரு காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அது என்ன காட்சி என்று சற்று ஒதுக்குப்புறமாக நின்று கவனித்தார், மனோரமா.படத்தில், வீடு மாதிரி, 'செட்' போடப்பட்டு, படுக்கையறை காட்சி படமாக்க தயாராக இருந்தது. அந்த காட்சியில் இவர்களது மகளாக தோன்றும் ராஜலட்சுமி, மற்றொரு நடிகருடன் படுக்கை அறையில் இருப்பதை போன்ற காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.கதையின்படி, ராஜலட்சுமி திருமணமாகாத பெண் என்று கூறப்பட்டிருந்தது. 'அப்படியானால், படுக்கையறை காட்சி எப்படி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது?' என்ற கேள்வி, மனோரமாவுக்கு எழுந்தது.அங்கிருந்த மற்றொரு உதவி இயக்குனரை அழைத்து, தன் சந்தேகத்தை கேட்டார்.அதற்கு அவர், 'ராஜலட்சுமி, கல்லுாரி மாணவி. அவளுக்கும், கல்லுாரி பிரின்சிபாலுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால், அவர் அடிக்கடி ராஜலட்சுமியின் வீட்டுக்கு வருவார். 'அப்போது அவரையும், ராஜலட்சுமியையும் தனியறைக்குள் அனுப்பிவிட்டு அவரது பெற்றோரான மனோரமாவும், இடிச்சபுளி செல்வராஜும் வெளியில் காவல் இருப்பர். அதன்பின், இந்த ஆளை பிடிக்கவில்லை என்று சொல்லி வேறு மாப்பிள்ளை தேடுவர்...' என்று விவரித்தார்.மனோரமாவிற்கு ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனோரமா, 'என்னிடம் சொல்லப்பட்ட கதை வேறு. ஆனால், இப்போது சொல்கிற கதை வேறாக இருக்கிறது. ஒரு குடும்ப தலைவியே, தன் மகளை வைத்து விபசாரம் செய்வது போல கதை அமைந்திருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த கதையில் ஏதாச்சும் மாற்றம் செய்ய முடியுமா?' என, இயக்குனரிடம் கேட்டார்.'மாற்றம் செய்ய முடியாது...' என்றார் இயக்குனர். அவரது பதில் ஏனோதானோவென்று இருந்தது.'ஏன்... அதனால், உங்க கதைக்கு ஏதாவது பாதகம் ஏற்படுமா?' என்று கேட்டார் மனோரமா.'ஆமா... நிச்சயமா கதைக்கு பெரிய பாதகம் ஏற்படும்...' என்றார், இயக்குனர் இறுக்கமாக.ஆக, கதையை மாற்றுவதற்கு அவருக்கு விருப்பமில்லை என்பது அவரது பதில் தெளிவாக்கியது.'அப்படியானால் என்னை விட்டுடுங்க. இதில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. நான் விபசார விடுதியின் தலைவியாக கூட நடிச்சிருக்கிறேன்; ஆனா, தான் பெற்ற மகளையே விபசார தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு குடும்ப தலைவியாக இதுவரை நடிச்சதே இல்லை. 'ஒரு குடும்பத்தின் மானத்தை காக்க வேண்டிய பொறுப்பு குடும்ப தலைவிக்கு உண்டு. அவளே இதுபோன்று தப்பான வழியில், தன் மகளை ஈடுபடுத்துவது தப்புன்னு நினைக்கிறேன். அதனால், இந்த படத்தில் என்னால நடிக்க முடியாது. தயவுசெஞ்சு தப்பா நினைக்காதீங்க...' என்று திட்டவட்டமாக கூறினார், மனோரமா.இப்படி ஒரு முடிவை எதிர்பாராத இயக்குனர், அவரது முடிவை மாற்ற எவ்வளவோ பிரயத்தனம் செய்தார். ஆனால், மனோரமாவின் முடிவை அவரால் தகர்க்க முடியவில்லை.கடைசியில், படத்தில் நடிப்பதற்காக வாங்கிய முன் பணத்தையும், கம்பெனி உடைகளையும் திருப்பி கொடுத்து, 'பை' சொல்லி விட்டார்.ஆனால், படக்குழுவினர் அடிபட்ட புலியாக இருந்தனர். வதந்தியை காட்டுத் தீயாக பரவ விட்டனர்.'இடிச்சபுளி செல்வராஜுடன், ஜோடியாக நடிக்க மாட்டேன்னு சொல்லி, படத்தில் நடிக்க மறுத்து விட்டார், மனோரமா...' என, புரளியை கிளப்பி விட்டனர்.பத்திரிகையாளர்களுக்கு இது போதாதா? சகட்டுமேனிக்கு தங்கள் கற்பனை கதைகளையும் சேர்த்து ஏதேதோ எழுதி விட்டனர்.ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மனோரமா. புதுமுகமாக இருந்தால் கூட முகம் சுளிக்காமல் நடிக்கும் தன்மை அவருக்கு உண்டு. இதுவரை, 'யாருடனும் சேர்ந்து நடிக்க மாட்டேன்...' என்று அவர் மறுத்து சொன்னதே இல்லை. எனவே, இந்த வதந்தியை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால், இச்சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில தினங்களில், இதேபோன்ற மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது.பத்மினி பிக்சர்ஸ், பி.ஆர்.பந்துலுவின் மகன், படம் ஒன்றை இயக்கினார். அந்த படத்தில் நடிப்பதற்கு மனோரமாவை ஒப்பந்தம் செய்தனர்.அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகிறவராக மனோரமா நடிக்க வேண்டும். அங்குள்ள ஆண் ஊழியர்களிடம் சென்று, 'என்னை கட்டிக்க... என்னை கட்டிக்க...' என்று கேட்பது போல் காட்சி; கூடுதலாக மோசமான வசனங்களோடு அவர்களிடம் பேசுகிற மாதிரி அமைந்திருந்தது அந்த கதாபாத்திரம்.— தொடரும்.நன்றி: சங்கர் பதிப்பகம்சென்னை.www.shankar_pathippagam@yahoo.comகுன்றில்குமார்