உள்ளூர் செய்திகள்

விளம்பர நாயகன்!

சூப்பர் செல்லப்பாங்கி ஸ்டோர்ஸ். எட்டு மாடி பிரமாண்ட கட்டடமாய் நிமிர்ந்திருந்தது. எட்டாவது மாடியில், நிர்வாக இயக்குனரின் அறை.'ரிவால்விங் சேரில்' அதன் நிர்வாக இயக்குனர், காத்தவராயன் அமர்ந்திருந்தார். வயது, 52, உயரம், 160 செ.மீ., கரிய நிறம், கிராமிய முகம். முழுவதும் துாக்கி சீவப்பட்ட தலைகேசம், இடுங்கிய கண்கள், முழு வட்டத்துக்கு வீங்கிய வாய். பட்டு வேட்டி, பட்டு சட்டை.சீரக மிட்டாயை மென்றபடி, உதவியாளன் அப்துலை ஏறிட்ட காத்தவராயன், ''விளம்பர பட இயக்குனர், ப்ரடரிக் ராஜா வந்துட்டானா?'' என்றார். ''வந்து அரைமணி நேரமா காத்துகிட்டு இருக்கார்,'' என்றான், அப்துல்.''ஜெய் அனுமான்... இன்னும் கால் மணி நேரம் கழிச்சு, அவனை உள்ளே வரச்சொல்.''அந்த, 15 நிமிடங்களில், நான்கு குத்துப் பாட்டுகளை, 'ஐ போனில்' கண்டுகளித்தார், காத்தவராயன்.வணங்கியபடி, குளிரூட்ட அறைக்குள் பிரவேசித்தான், ப்ரடரிக் ராஜா.''வாய்யா... டைரக்டரு... உக்காருய்யா!''அமர்ந்தான்.''நடிகர் பார்யாவை பார்த்து பேசினியா?''''பேசினேன். அவர், 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ' எனும், 'டிவி' நிகழ்ச்சியில, 'பிசி'யாம்... நமக்கு விளம்பர படம் பண்ண மாட்டேன்னுட்டார்!''''கூடுதல் பணம் குடுக்கறதா சொன்னியா?''''அதுவும் இல்லாம, 'டிவி' நிகழ்ச்சிக்கு நடுவுல, விளம்பர படத்துல நடிச்சா, 'இமேஜ்' கெட்டு போயிரும்ன்னு பயப்படுறார்!''''அவனோட நெருங்கின வட்டாரங்களை வச்சு பேசி பார்த்தியா?''''பேசி பார்த்தேன்!'' ''சினிமா மார்க்கெட் இறங்கு முகத்தில் இருக்கும்போதே, இந்த ஆட்டம் போடுறானா பாருய்யா?'' என, காத்தவராயன் கூற, நெளிந்தான், ப்ரடரிக் ராஜா.''செல்லப்பாங்கி ஸ்டோர்ஸ் விளம்பரத்துல நடிச்சா, புதுசா நாலு படத்துல, 'புக்' ஆகலாம்ன்னு அந்த முட்டாளுக்கு தெரியாது போல!'' என்றான், அப்துல்.''சரி... பவகீர்த்திகேயனிடம் பேசி பார்த்தாயா?''''பேசினேன். 'அவசரக்காரன்' படத்துக்கு பின், மார்க்கெட்டை, 'ஸ்டெடி' பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த சமயத்துல விளம்பர படம் நடிக்கிறது உசிதமா இருக்காதுன்னு சொல்றார், பவகீர்த்திகேயன்.''''அவன், 'மிமிக்ரி' பண்ணிட்டிருந்த காலத்துல, என்கிட்ட ஆயிரத்துக்கும், ஐநுாறுக்கும் தொங்கி இருக்கான் தெரியுமா?'' என்றார், காத்தவராயன்.''இன்னிக்கு, அவரோட மார்க்கெட் மதிப்பு பத்தி பேசுங்க சார்!''''நாம் மூன்றாவது தேர்வாக, அஜய் சேதுபதியை வச்சிருந்தோம்... அவனை போய் பார்த்தியா?''''பார்த்தேன்!'' என்றான், ப்ரடரிக் ராஜா.''என்ன சொல்றான்!''''உங்க நிறுவனம் மூலம் என்னென்ன பொருள் விக்கிறீங்க... பொருட்களை எல்லாம் எங்க வாங்கறீங்க... எவ்வளவு லாபம் வச்சு விக்கிறீங்க... உங்க கட்டடத்துக்கு, சி.எம்.டி.ஏ., அப்ரூவல் இருக்கா... தீ விபத்து ஏற்பட்டா, தடுக்க தகுந்த உபகரணங்கள் வச்சிருக்கீங்களா...''நிறுவனத்துல எவ்வளவு பேர் வேலை பார்க்கறாங்க... அவங்களுக்கு எல்லாம் முறையா, இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடிக்கறீங்களா... பெண் ஊழியர்கள், பாலியல் தொல்லை இல்லாம, பாதுகாப்பா இருக்காங்களா... சினிமா பிரபலங்களை மட்டும் வச்சு ஏன் விளம்பரம் பண்றீங்க...''எழுத்தாளர், 'சயின்டிஸ்ட்' வச்சு பண்ணலாமே... வருமான வரி ஏய்ப்பு செய்யாம, ஒழுங்கா கட்டுறீங்களா... ஆண்டுக்கு, 5,000 கோடி லாபம் பார்க்கும் நீங்கள், சமுதாயத்துக்கு திருப்பி செய்வது என்ன... அப்படி, இப்படின்னு ஆயிரம் கேள்விகளை, சி.பி.ஐ., அதிகாரி மாதிரி, அள்ளி வீசுறாரு அஜய் சேதுபதி,'' என, விவரித்தான், ப்ரடரிக் ராஜா.''அவனே, 'இன்கம்டாக்ஸ் ரெய்டு' ஏற்பாடு பண்ணுவான் போல...'' என, கடுப்புடன் கூறினார், காத்தவராயன்.''பேசாம மார்க்கெட் போன நித்யராஜ், சிரபு மற்றும் நம்பு... இவர்கள வெச்சு, விளம்பர படம் எடுத்தா என்ன?'' என, யோசனை கூறினான், அப்துல்.''நல்லா போய்கிட்டு இருக்கற வியாபாரம் படுத்துக்க வழி சொல்றியா அப்துல்?'' என்றார், காத்தவராயன்.''மலையாள நடிகர், கில்கர் பல்மானை பேசி பார்க்கவா?'' எனக் கேட்டான், ப்ரடரிக் ராஜா.''வேணாய்யா!''''தெலுங்கு நடிகர் குமேஷ் பாபு...''''ம்ஹும்!''''இந்தி நடிகர் கன்வீர் சிங்...''''வேண்டாம்... 'நேட்டிவிட்டி' இருக்காது!'' என மறுத்தார், காத்தவராயன்.நடிகர் பாண்டு போல, முகத்தை அஷ்டகோணலாக்கி யோசித்த, அப்துல், ''முதலாளி... நான் ஒரு யோசனை சொன்னா, திட்ட மாட்டீங்களே!'' என்றான்.''குள்ள மலையாள நடிகர், 'டிஷ்யூம் டிஷ்யூம்' உண்டபக்ருவை வெச்சு விளம்பர படம் எடுக்கவா, யோசனை சொல்லிட போற... சொல்ல வந்ததை மறைக்காம சொல்லு!'' என்றார், காத்தவராயன்.''பேசாம, நம்ம விளம்பர படத்துக்கு நீங்களே, 'ஹீரோ'வா நடிச்சிருங்களேன் முதலாளி,'' என்றான், அப்துல்.துள்ளிக் குதித்தான், ப்ரடரிக் ராஜா.'இந்த குரங்கு மூஞ்சானை, கரிய நிறத்தனை, தகரத்தில் ஆணி வைத்து கீறியது போன்ற குரலனை, எவன் பார்ப்பான்?' என, அப்துல், மனதில் நினைத்துக் கொண்டான்.''சீச்சீ... என்ன முட்டாள்தனமான யோசனை இது... அப்துல் குடிச்சிருக்கியா?'' என்றார், காத்தவராயன்.''முதலாளி... பேச்சி மசாலா விளம்பரத்துல, ஓனரே நடிச்சிருக்கார்; பெரிய அரசியல் தலைவர் போல, மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கி, பாட்டுக்கு வாய் அசைப்பார். மக்கள் ஏத்துக்கலையா... பவிதா ஜுவல்லரி விளம்பரத்துல, மொட்டைத் தலை ஓனர் நடிச்சிருக்கார்; மக்கள் ஏத்துக்கலையா...''உங்க முகத்தை பவுர்ணமி போல, மாசு மருவில்லாம காட்ட, டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்திருச்சு... உங்க ஒரிஜினல் குரலுக்கு மாற்றா, 'டப்பிங்' குரல் வச்சிடலாம்... உங்களுக்கு ஜோடியா மூணு, 'ஹீரோயின்'கள போட்டுடலாம்... 'ரொமான்டிக்'கா, 20 நொடி, 40 நொடி, 60 நொடி விளம்பரங்கள் பண்ணிட்டா, 'சூப்பர் ஹிட்' ஆகிடும்!'' என, அளந்து விட்டான், அப்துல்.''மூணு, 'ஹீரோயின்'கள் யார் யார்ன்னு நீயே சொல்லிடு!''''மிரியா சாரியார், கோபிகா திடுகோனே, பேட்ரினா சைப்!''''எனக்கு ஜோடியா நடிக்க ஒத்துப்பாங்களா?'' என, கேட்டார், காத்தவராயன்.''நடிகர்கள் தான், கொள்கை, கிள்கைன்னு பேத்துவான்க... நடிகையருக்கு பேசினதுக்கு மேல, கூடுதலா பணம், 50 ஆயிரத்தில் பட்டு புடவை, ஒரு கிலோ நகை கொடுத்தா, உங்க தாத்தாவுக்கு ஜோடியாவும் நடிப்பாங்க!''''உன் யோசனை, 'ஒர்க் - அவுட்' ஆகும் போல,'' என்றார், காத்தவராயன்.''இசை அமைப்பாளரை விட்டு, 'ஜிமிக்கி கம்மல் ஸ்டைல்'ல, ஒரு, 'ஜிங்கிள்ஸ்' போட்டுடலாம்... பத்து வகை புல் சூட்ல, நொடிக்கு நொடி பாடிக்கிட்டே, 'டான்ஸ்' ஆடுறீங்க... கூட ஆடும் மூணு ஹீரோயினும், போட்டி போட்டு உங்களுக்கு முத்தம் தர்றாங்க... ஒவ்வொரு முத்தத்துக்கும், நம்ம கடை விற்பனை பகுதிகள் பூக்குது...''முகம் முழுக்க, 'லிப்ஸ்டிக்'கோட நீங்க நாணி கோணி, 'சூப்பர் செல்லப்பாங்கி ஸ்டோர்சில் பொருட்கள் வாங்கினால், முத்தங்கள் மொத்தமா கிடைக்கும்'ன்னு, 'டயலாக்' சொல்றீங்க... விளம்பரம் முடியுது!'' ''எனக்கு, 'டான்ஸ்' ஆட வராதே, அப்துல்!''''பல வருஷமா, டான்சில், ஏ, பி, சி, டி தெரியாம, கிஜினிகாந்த் மற்றும் சாக்யராஜ் சினிமாவுல குப்பை கொட்டலையா?'' எனக் கேட்டான், அப்துல்.''இந்த விளம்பர படம், 'பிளாப்' ஆனா, மாதம், 150 கோடி ரூபாய் வரை நஷ்டமாகும் பரவாயில்லையா சார்?'' என்றான், ப்ரடரிக் ராஜா.''இயக்குனரே... நஷ்டத்தை பத்தி, நான் தானே கவலைப்படணும்... 'ஜிங்கிள்ஸ்'சை தயார் பண்ணு... 'ஷூட்டிங்'கை அடுத்த வாரம் ஆரம்பிச்சு முடிச்சிடலாம்!'' என, உத்தரவிட்டார், காத்தவராயன்.குழப்ப முகத்துடன் கிளம்பினான், ப்ரடரிக் ராஜா.'சம்பளத்துல, அஞ்சாயிரத்தை ஏத்தி குடுன்னு கேட்டா, மாட்டேங்கற... இப்ப என் யோசனைப்படி, விளம்பர படத்துல நடிச்சு, 150 கோடி நஷ்டமடைய போற...' மனதுக்குள் சிரித்தான், அப்துல்.தமிழ் சேனல்கள் அனைத்திலும் ஒளிபரப்பானது, காத்தவராயன் நடித்த விளம்பர படம். 'வாட்ஸ் - ஆப், பேஸ் புக், டுவிட்டர்' என, அனைத்திலும், காத்தவராயனை, மக்கள் கழுவி கழுவி ஊற்றினர்.சாப்பிட மறுக்கும் குழந்தைகளை, 'இதோ பூச்சாண்டி வரான்' என, தாய்க்குலம் மிரட்டி, சோறுட்ட, காத்தவராயன் விளம்பர படம் உதவியது.'கடந்த, 10 ஆண்டுகளில் வந்த விளம்பரங்களில், மிக மோசமானது, காத்தவராயன் விளம்பரம் தான்...' என, ஒரு கணக்கெடுப்பு தெரிவித்தது.ஒரு வாரத்துக்கு பின், நிலைமை தலைகீழானது.திட்டியபடி, கிண்டல் அடித்தபடி, தலையில் அடித்தபடி, நையாண்டி, நக்கல் செய்தபடி, காத்தவராயன் விளம்பரத்தை கண்டு மகிழ்ந்தனர், மக்கள். எந்தெந்த நிகழ்ச்சிகளில் காத்தவராயன் விளம்பரங்கள் வந்தனவோ, அந்தந்த நிகழ்ச்சிகளின், டி.ஆர்.பி., எக்கச்சக்கமாக கூடியது.பவர்ஸ்டார் கீனிவாசன், 'காத்தவராயன் தான், இனி என் ரோல் மாடல்...' என, அறிவித்தார். சூப்பர் செல்லப்பாக்கி ஸ்டோர்சின் வியாபாரம், உச்சத்துக்கு எகிறியது.ஆறு மாதங்களுக்கு பின்-அதற்குள், வெற்றிகரமாக, 10 விளம்பர படங்களில் நடித்து விட்டார், காத்தவராயன். 'ஹாலிவுட்' நிறுவனமான, 'ஜாக்கல் ஸ்டுடியோ'வின் பிரதிநிதி காத்திருந்தார்.''மிஸ்டர் காத்தவராயன்... ஜாக்கல் ஸ்டுடியோ, 200 கோடி பட்ஜெட்டில், ஒரு புது தமிழ் படம் எடுக்க முடிவெடுத்திருக்கிறது... படத்தின், 'ஹீரோ' நீங்க தான்... சிறு வயதில், நீங்க மிருககாட்சி சாலைக்கு போனபோது, ஒரு குரங்கு கடித்து விடுகிறது. ''அதனால், உங்களுக்கு விசேஷ சக்தி வந்து, 'சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன்' போல, அனுமன் மேன் ஆக, சூப்பர் ஹீரோ ஆகி, உலகத்தை காப்பாற்றுகிறீர்கள். இது தான், கதை. உங்களுக்கு, 30 கோடி சம்பளம். படத்தில் உங்களுக்கு, ஆறு ஹீரோயின்கள்!''''ஜெய் ஆஞ்சநேயா!'' நெட்டுயிர்த்தார், காத்தவராயன்.'களிமண்ணிலிருந்து குரங்கு பொம்மை பிடிக்க போய், பிள்ளையார் பொம்மை பிடித்து விட்டோமே...' என, முணுமுணுத்தபடி கைகளை பிசைந்து கொண்டான், அப்துல். 'இனியாவது கேட்ட சம்பள உயர்வை குடுப்பானா, முதலாளி காத்தவராயன்?' என, அவன் மனம் ஏங்கியது. குட்டி கார்க்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !