உள்ளூர் செய்திகள்

எல்லாப் பூக்களும் எனக்கே ! - தொடர்கதை - பகுதி - 29 - மதுனிகா ராணி

முன்கதைச் சுருக்கம்!கதாநாயகன் யாத்ராவின் வீட்டுக்கு, நேசிகா மற்றும் அவளது சகோதரிகள் வந்தனர். அன்று முழுவதும் யாத்ராவின் வீட்டிலேயே தங்கப் போவதாகவும், மூவருமே யாத்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், யாத்ராவின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.பியூலாவை சந்திக்க அனிதா ரெட்டியுடன் சென்றான் யாத்ரா. அவளுக்கு டீச்சர் வேலை ஒன்று வாங்கிக் கொடுத்து, ஆசைதம்பியை திருமணம் செய்து கொள்ளும் ஏற்பாட்டையும் செய்தான் -இனி -மருத்துவமனையில், உடல் முழுக்க கட்டுகளுடன் படுத்திருந்த நர்ஸ் ரஞ்சனியை சந்தித்து, விசாரித்தனர். தொழில் போட்டியால் உடன் பணிபுரியும் இன்னொரு நர்ஸ், ரஞ்சனியை கத்தியால் கீறி காயப்படுத்தியதை அறிந்து, அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினர்.யாத்ராவின் இரு கைகளைப் பிடித்தபடி, ''நீ படு பயங்கரமான கில்லாடி!'' என்றாள் அகராதி.''எப்படி?''''நேசிகாவை தக்க வச்சுக்கிட்டு, மத்த எல்லா கிறுக்கச்சிகளையும், அவ, அவ தகுதிகளுக்கேற்ப செட்டில் பண்ணி விட்டுக்கிட்டிருக்க.''''எத வச்சு சொல்ற?''''அபர்ணா நாயுடுவின் குரலை, மீடியால ஓங்கி ஒலிக்க வச்சிட்ட, அனிதா ரெட்டிக்கு புணர்வாழ்வு அமைச்சுக் குடுத்திட்ட, பியூலாவை ஆசைதம்பியோட சேத்து வச்சிட்ட, மச்சினி ரெண்டு பேருக்கும், ஏதோ வழிவகை யோசிச்சு வச்சிருக்க, நேசியை மிரட்டின சைக்காலஜி புரொபசர் பிப்ரவரி மீது, துறை நடவடிக்கை எடுக்க வச்சிட்ட, துர்காவின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இறுதித் திட்டம் தீட்டி வச்சிருக்க... பாக்கி நான் மட்டும்தான்... என்னை வீரசமருக்கு கட்டி வச்சிடலாம்ன்னு பாக்கறியா?''சிரித்தான் யாத்ரா.''சமர் உனக்கு பொருந்த மாட்டான்; வேற ஆள் தான் பார்க்கணும்!''''இத பார் யாத்ரா... நான் இந்த விளையாட்டுக்கு வரல. ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் படமெடுப்போர், என்னை அஞ்சு வருடம் அக்ரிமென்ட் போட்டு கூட்டிட்டு போறாங்க. எதுக்கு போறேன் தெரியுமா? உனக்காக. உன்னையே நினைச்சிக்கிட்டிருந்துட்டு, எவனையோ கல்யாணம் பண்ணிக்க நான் தயாரில்லை. நாளையே நான் விமானம் ஏறுறேன்பா!''''என்னை விட்டு விலகிப் போறியா?''''ம்ஹூம். ஆஸ்திரேலியாவில் இருந்து உன்னை ஒரு தலையாய் காதலிச்சுக்கிட்டே, உன்கிட்ட நெட்போன்ல பேசிக்கிட்டிருப்பேன். என்னை தடுக்காதே... என்னை போகவிடு!''''போகாதே!'' அழுதான் யாத்ரா.''நீ அழுவியாடா?''''ஏன்... எனக்கு மட்டும் மனசில்லையா? உன் பயணத்தை இரண்டு வாரம் தள்ளிப்போடு!''''எதற்காக?''''தோழிகளுடன் ஒரு கெட் டு கெதர் ஏற்பாடு பண்ணிருக்கேன். அந்த பார்ட்டில, என் அதிகாரப்பூர்வ காதலி பற்றி அறிவிக்கப் போகிறேன். அதை அடுத்து என் கல்யாணம். கல்யாணத்தை நடத்தி குடுத்துட்டு, எங்க வேணாலும் போ!''''நீ காதலிய அறிவிச்சிட்டா, நான் கேக்க முடியாது. என்னை தப்பா நினைச்சிக்காத யாத்ரா. உன் நினைவா ஒரு முத்தம் கொடு. ரகசியமா, ஆயுளுக்கும் பாதுகாத்து ரசிப்பேன்!''அகராதியை அர்த்தபுஷ்டியாய் வெறித்தான்.''நீ கேக்றது சரியோ, தப்போ... தோழி அகராதிக்காக ஒரு நினைவு பரிசை தருகிறேன்!''அகராதியின் உதட்டில், ஒரு நீண்ட பிரியா விடை முத்தம் கொடுத்தான் யாத்ரா.''கடவுளே! கடவுளே!'' வானத்துக்கு இரு கை உயர்த்தி, மோட்ச நிலை உயர்ந்தாள் அவள்.மல்லிகை எப்.எம்., வானொலி நிலையம் -ஒலிப்பதிவு அறை. ஒலிப்பதிவு கருவிகளின் முன், அனிதா ரெட்டி அமர்ந்திருந்தாள். ''மல்லிகை எப்.எம்., வானொலி நிலைய நேயர்களுக்கு, வணக்கம்... நான், ஆந்திரத்து பைங்கிளி அனிதா ரெட்டி பேசுகிறேன்... என் தமிழில் எதாவது வித்தியாசம் தெரிகிறதா? தெரியும்தான். தமிழே தெரியாத நான், மூன்றே மாதங்களில் கற்றுக்கொண்டு, உங்கள் முன் தமிழ் பேசுகிறேன். சென்னைத் தமிழ் பெரிதா, நெல்லைத்தமிழ், தஞ்சைத்தமிழ் பெரிதா என, வட்டார மக்கள் சண்டை போடுவர். இனி, அனிதா தமிழ் தான் பெரிது என, என் தமிழை கொண்டாடுவர்!''என் கன்னித்தமிழை, என் மகள் சாரதாவுக்கு சமர்ப்பிக்கிறேன். இன்றைய நிகழ்ச்சியை பாராட்டி, நிறைய கடிதங்களும், போன்களும் எஸ்.எம்.எஸ்.,களும் பறந்து வரலாம். அத்தனையிலும், என் மகளின் பதில் வந்தால் மிக்க மகிழ்வேன்,'' என்றவள்-''என் உயிர் நண்பன் யாத்ராவுக்காக, முதல் பாடலை ஒலிக்க விடுகிறேன்!'' என்றாள்.'முஸ்தபா முஸ்தபா... டோன்ட் ஒர்ரி முஸ்தபா... காலம் நம் தோழன் முஸ்தபா!' பாடல் ஒலித்தது.தொடர்ந்து, நட்பு தொடர்பான பாடல்களையே ஒலிக்கச் செய்து, தன் இரண்டு மணி நேர நிகழ்ச்சியை முடித்தாள் அனிதாரெட்டி. ஒலிப்பதிவாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளருடன் சேர்த்து, யாத்ராவும், ஒபிலி, நேசி, மொழி, கடல், அபர்ணா, அகராதி அண்ட் கோக்களும் கைத்தட்டினர்.ஒபிலியாவை கட்டியணைத்துக் கொண்டாள் ரெட்டி.''உன்னால்தான் என் தமிழ் மகிமைபட்டது. பிரமாதம் ஒபிலி! யு ஆர் கிரேட்!''மொபைல்போன் சிணுங்கியது. ரெட்டி எடுத்து காதில் இணைத்தாள். எதிர்முனையில் அவளது மகள். ''அம்மா... நீயா இவ்வளவு அழகா தமிழ் பேசின? குடிப்பழக்கத்தையும், முன்கோபத்தையும் விட்டொழிச்சிட்டதா தெலுங்குல சொன்ன... அதோட, இன்னுமே நீ அப்பாவையும், தாத்தாவையும், என்னையும் நேசிப்பதாக கூறினாய். வி ஆல் சோ லவ் யூ அம்மா. நீரடிச்சு நீர் விலகுமா? குஞ்சு மிதிச்சு கோழி சாகுமா?''நீ எத்னி பர்சன்ட் தப்பு செஞ்ச... நாங்க எத்னி பர்சன்ட் தப்பு செஞ்சம்ன்னு கணக்கு போட விரும்பல. தப்பு செய்றது இயற்கைம்மா. வி ஆர் ஹூயூமன் பீயிங்ஸ். ஆனா, திருந்தணும். நாம இப்ப திருந்திட்டம். நீ இப்பஎன் கூடவே இருந்தா நல்லாயிருக்கும்ன்னு தோணுது. காரணம், போனவாரம் நான் பெரிய மனுஷி ஆயிட்டேன். நானும், அப்பாவும், ரெண்டு நாளா சென்னைல தான் இருக்கோம். சந்திப்போமா?''''சந்திப்போம் மகளே!''''அப்பா பக்கத்துலதான் இருக்கார். பேசுறியா?''போனை வைத்துக்கொண்டு இந்த முனையில் அனிதாரெட்டி அழ, அந்த முனையில் ரெட்டியின் கணவர் அழுதார். திரிசூலம் படத்தில் சிவாஜி - கே.ஆர்.விஜயா போன் உரையாடல் போல, இவர்களின் போன் உரையாடல் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது. ரெட்டி பேசும் தெலுங்கில், காதல் தேன் சொட்டியது. ரெட்டி குரலில் இருபது வயது குறைந்தது.''என்னை மன்னிச்சிருங்க!''''நீ என்னை மன்னிச்சிரு!''கூடியிருந்த நிலைய ஊழியர்கள் கோரசாய். ''எல்லாரும், எல்லாரையும் மன்னிச்சிடலாம். நாங்க உங்க பேச்சை கேட்டதுக்கு எங்களை மன்னிச்சிடுங்க!''கண்ணீரில் மிதக்கும் கண்களுடன், சிரித்தாள் அனிதா ரெட்டி. ''நாம் இன்னைக்கி சாயந்தரம் எழு மணிக்கு, லீ ராயல் மெரிடியனில் சந்திப்போம்!''''பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா!'' என்றான் யாத்ரா.''இந்த சிச்சுவேஷனுக்கு காமத்துப்பாலிலிருந்து ஒரு குறளை எடுத்து விடவா?'' என்றாள் ஒபிலியா.''போரடிக்காம சொல்லு பூனைக்காரி ஒபிலி!''சொன்னாள் ஒபிலி!''ஒபிலி... நீ ரொம்ப மோசம். ஒரு நாளைய இருபத்தி நாலு மணி நேரமும் காமத்துப்பால் படிச்சு பேஜார் ஆகி போயிட்டிருக்கியா? ஊடல் கொண்ட கணவன் கூடுவானான்னு பாக்கிறியா?''''அவன் வர மாட்டான் யாத்ரா!''''ஏன்?''''அவன் உயிரோட இல்லை. அவன் பிரிஞ்சு போனதாக பொய் சொன்னேன். ராவா, ஒரே மூச்சில் ஒரு புல்லு விஸ்கி குடிக்கிறேன்னு பிரண்ட்ஸ்ங்க கிட்ட ஆயிரம் ரூபா பந்தயம் கட்டியிருக்கார். பத்தே நிமிடத்துல குடிச்சு முடிச்சவர், மூக்கிலயும், வாய்லயும் ரத்தம் வர இறந்து போயிட்டார்!''''பேத்தடிக் ஒபிலி!''''விடு... நிம்மதியா இருக்கேன்...''''ரெட்டிக்கு தமிழ் சொல்லிக் குடுத்த உனக்கு, எதாவது பரிசு தர விழைகிறேன் ஒபிலி. அருளா இன்ஸ்டிடியூட்டோட துணை நிறுவனமாக நீ செயல்பட, நிறுவனத் தலைமையுடன் பேசி வந்திருக்கேன். அவர்களின் பேட்டர்னில் உன் கோச்சிங் இருக்க வேண்டும். வெற்றிகரமாய் கோச்சிங் முடித்தவர்களுக்கு அருளா சான்றிதழ் வழங்கும். உனக்கு மாத சம்பளம் ரூபாய் ஐம்பதாயிரம்!''''நன்றி யாத்ரா?''''டொரன்டோ விலங்குகள் காப்பகம் ஒன்றுடன், உன் பூனை வளர்ப்பு பற்றி பேசினேன். அவர்கள் சார்பாக, உன்னை பூனைகள் காப்பகம் நடத்த சொல்கின்றனர். நிதி லட்சக்கணக்கான டாலர்கள் தருவர்.''''கரும்பு தின்னக்கூலி தருகின்றனர்!''''உனக்கு ஒரு ஆண் துணை அவசியம் என நம்புகிறேன்... அதனால்...''''அதனால், நீ என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறாயா? நான் தயார் தயார்!''''உன் கவர்ச்சியை சொன்னால் யாருக்கும் புரியாது; கண்கூடாக பார்த்தால்தான் தெரியும். கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புல இன்பங்களும், ஒளி பொருந்திய வளையல் அணிந்த உன்னிடத்தில் உள்ளன ஒபிலி. உன்னை சந்தித்துவிட்டு ஆண்கள் பிரியும்போது, அவர்களின் அழகையும், ஆண்மையையும் பறித்துக் கொண்டு, காதல் நோயையும், பசலையையும் ஆண்களுக்கு பரிசளிக்கிறாய். உன்னை திருமணம் செய்துகொள்ள வீரசமர் தயாராக இருக்கிறான்; நீ தயாரா?''''அந்த பொடியனையா?''''அவன் உன்னை நன்கு பார்த்துக் கொள்வான். உனக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது!''''என் மறுமணத்திற்கு என் மகன் ஒத்துக் கொள்வானா?''''சமரை விட்டு அவனோடு பேச சொல்றேன்!''''உனக்கு நான் வேண்டாம். நேசிகா எனும் கன்னிப் பெண் தான் வேண்டுகிறதோ?''சிரித்தான் யாத்ரா.''பேச்சை மாற்றாதே ஒபிலி. திருமணத்திற்கு நீ தயாரா?''''அந்த பையனை கட்டியிருக்கும்போது, செக்சே வேணாமுன்னு தோணுச்சு. இப்ப கொஞ்ச நாளா, அது இருந்தா தேவலைன்னு தோணுது. நானும் மனுஷிதானப்பா? நமக்குன்னு ஒருத்தன் வந்தா நல்லது தானே? வீரசமர்... என்னைக் கட்டிக்க சம்மதம் தானே?''''சம்மதம்!''''என் புருஷன் மாதிரி, பந்தயம் கட்டி குடிக்க மாட்டாய் தானே?''''திராட்சை தோட்டமே... உன் அருகாமையே எனக்கு செம போதைதான். தனியே நான் ஏன் குடிக்கப் போகிறேன்?'' கூடியிருந்த எல்லாரும் சிரித்தனர்.அந்த மினி ஹாலில், யாத்ராவின் அனைத்து தோழிகளும் குழுமியிருந்தனர்.ஒயிட் அண்ட் ஒயிட்டில், ஆண் தேவதை போல மின்னினான் யாத்ரா.யாத்ரா முத்தமிட்ட உதட்டை, அடிக்கடி வருடி பார்த்துக் கொண்டாள் அகராதி. ஒபிலியாவும், வீரசமரும் ஜோடியாய். கணவர், மகளுடனும் வந்திருந்தாள் ரெட்டி; பியூலாவும், ஆசைதம்பியும் ஜோடியாய். சந்தனப்பொட்டு நர்ஸ் ரஞ்சனி தன் குடும்பத்துடன்; நேசிகா, தூரிகை, மொழி, கடல் அமர்ந்திருந்தனர். தேர்வு எழுதிவிட்டு, முடிவை எதிர்பார்த்திருக்கும் மாணவியின் மனோநிலையில் இருந்தாள் நேசிகா.சைவ உணவு, அசைவ உணவு, பழரசங்கள், ஐஸ்கிரீம்கள் என மேஜை நிறைந்திருந்தன.ஒற்றை ரோஜாவை பரிசளித்தாள் நேசிகா.யாத்ரா பேச எழுந்தான்...''என் உள்ளம் கவர் தோழிகளுக்கு முதல் வணக்கம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, இவ்வுலகத்தை பெண்கள் வழியாக பார்த்துதான் புரிந்து வந்திருக்கிறேன். ஆண்களை படைக்கும்போது இறைவன் கரடு முரடாகவும், கத்துக்குட்டியாகவும் இருந்திருக்கிறான்; பெண்களை படைக்கும்போதுதான், படைப்பில் நிபுணத்துவம் பெற்றிருந்திருக்கிறான். எங்கு, பொறுமையுடன் அழகும் இருக்கிறதோ, அங்கு பெண்மை வாழ்கிறது. தறிகெட்டோடும் காட்டாறுகளை கடலில் சேர்ப்பது பெண்மை தான்.''ஆண்கள் ஒற்றை எழுத்து என்றால், பெண்கள் ஒட்டுமொத்த மொழி. ஒரு கிலோ மீட்டர் பெட்ரோலுக்கு லட்சம் கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் பெண்கள்.''இறைவனை அடைய துறவறம் தேவையில்லை. பெண்கள் வழி சிற்றின்பத்தில் இறைவனை அடையலாம். ஓ÷ஷாவின் ஆன்மிக வழி எனக்கு உடன்பாடானதே!''இன்றைக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழிகள் வந்திருக்கிறீர்கள். உங்களை நானோ, என் செய்கைகளோ, என் பேச்சுகளோ, அறிந்தோ, அறியாமலோ காயப்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள். என் பழகல் காதல் போல தெரிந்து துன்புறுத்தியிருந்தாலும் மன்னியுங்கள்.''பெண்களை நான் உடன் பிறந்தோராய் நினைத்ததுமில்லை; பெண்டாள நினைத்ததுமில்லை. பெண்களிடம் பொய் பேசி, பாசாங்கு பண்ணி, யாசகம் கேட்டு, படாடோபமாக நடித்து, அவர்களின் உடலை ஜெயிக்க விரும்பவில்லை நான்.''புத்தனுக்கு போதி மரம் ஞானம் தந்தது; எனக்கோ, பெண்கள் ஞானம் தந்தனர். பட்டினத்தார் பெண்களை இழிவாய் பாடியது அனைத்தும், அவருக்கும் பொருந்தும் தானே? பெண்களை இழிவாய் பேசுவோர், பாடுவோர் அனைவரும், ஞான சூன்யங்கள், அவசரக் குடுக்கைகள். ஒன்றை கொடுத்துவிட்டு, நூறை எதிர்பார்ப்பவர்கள்.''பெண்கள் கடல் என்றால், ஆண்கள் பாய்மரக் கப்பல்கள். கடலுக்கு பாய்மரக்கப்பல் தயவு தேவையா? பாய்மரக் கப்பலுக்கு தானே கடலின் தயவு தேவை.''எத்தனையோ பெண்களுடன் பழகியிருந்தாலும், காதல் உணர்வு வந்ததில்லை எனக்கு. முதன்முறையாக, மற்ற என் தோழிகளை விட ஒரு சில மதிப்பெண்கள் கூடுதலாய் பெற்று, நேசிகா முன்னணியில் நிற்கிறாள். அவளை காதலிக்கலாமென நினைக்கிறேன். அவளுக்கும், எனக்கும் ஒத்து வருமா? அவளுக்கு நான் உகந்தவனா, எனக்கு அவள் உகந்தவளா என்பதை கண்டுபிடிக்க, மூன்று சந்திப்புகள் செய்ய இருக்கிறோம். சந்திப்பின் முடிவில் எங்களுக்குள் காதல் உண்டா, இல்லையான்னு ஊரறிய, உலகமறிய அறிவிப்போம்!''அனைவரும் கை தட்டினர்.''மூன்று சந்திப்புகள் எங்கெங்கு?''''முதலாம் சந்திப்பு... கடலும், கடல்சார்ந்த இடமும். இரண்டாம் சந்திப்பு... வானமும், வானம் சார்ந்த இடமும். மூன்றாவது சந்திப்பு... பனிமலையும், பனிமலை சார்ந்த இடமும்!''''பார்வையாளர் யாருக்கும் அனுமதி உண்டா?''''வந்தால் காலை உடைப்போம்!''''மாப்பிள்ளை தோழன், மணமகள் தோழி மாதிரி யாராவது இருவர் உடன் வரலாமா?''''வரக்கூடாது. மூச்!''''யோசித்து பார்க்க, கவிதைத்துவமா இருக்கிறது, உங்களது மூன்று காதல் பானிபட் யுத்தங்கள். நல்ல சமாதான உடன்படிக்கையுடன் முடிவுக்கு வரட்டும்!''''கல்யாணத்திற்காவது பார்வையாளர் அனுமதி உண்டா?''''உண்டுண்டு!''காதல் தேவதை, மூன்று சந்திப்புகளையும் கண்டு, கேட்டு, மகிழ ஆயத்தமானது.-- தொடர்ந்து பூக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !