உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

** எல்.ரமணி, சென்னை: இன்றைய பெண்கள் எப்படி இருந்தால், ஆண்களுக்கு பிடிக்கும்?அழகாக, சரியான அளவுகளுடன், 'ஷேப்பாக' சராசரி உயரத்துடன் இருப்பதை விரும்புகின்றனர். இத்துடன் மனைவியாக வருபவள் என்றால், எதிர்க்கக் கூடாது, வாயாடக் கூடாது, அடக்கம் வேண்டும், ஆடைகளால் போர்த்திக் கொள்ள வேண்டும். நகரத்தில் என்றால், பெண்ணும் சம்பாதிக்க வேண்டும்.

**** எம்.ராமதாஸ், தேனி: மன வலிமையில் உறுதியானவர்கள் ஆண்களா, பெண்களா?சந்தேகமே இல்லாமல், பெண்கள்தான்... குடிகார கணவன், வீட்டை விட்டு ஓடிப் போய்விடும் கணவன் போன்ற காரெக்டர்களை மன வலிமையாலேயே சமாளிக்கின்றனர். கணவன் இறந்து போனாலும், உடனே அடுத்ததை ஆண்களைப் போலத் தேடுவதில்லை... தன் பிள்ளை குட்டிகளுக்காக மன வலிமையால், தனித்தே நிற்கிறாள். மன  வலிமையால், உடல் வலிகள் பலவற்றையும் அவளே தாங்குகிறாள்!

***

** சி.கிருஷ்ணகுமார், சிவகங்கை: பலவீனனாக, எதையும் செய்யும் ஆற்றல் இல்லாதவனாக என்னை எப்போதும் உணர்கிறேனே...இது, உங்கள் தப்பல்ல... உங்கள் பெற்றோர் தவறு! மன தைரியம் அளிக்காமல், பயம் காட்டியே குழந்தையை வளர்ப்பதால் இந்த எண்ணம் தோன்றி விடுகிறது! இளம் வயதிலேயே ஆக்கப்பூர்வமான, உறுதியான, உதவுகிற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். போகட்டும்... உங்களை பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இனிமேலாவது மனதில் இடம் கொடாமல், 'என்னால் முடியும்' என்ற எண்ணத்தை இரவு பகலாக உங்கள் மனதில் விதையுங்கள்... தன்னம்பிக்கை தானே வந்துவிடும்!

***

*வி.பானுமதி, திருப்பூர்: 'ஒரே நாளில் மூன்று அடி உயரம் மூங்கில் வளரும்!' என்கிறாளே என் தோழி... நம்ப முடியலியே...நம்பலாம்... ஆனால், எல்லா வகை மூங்கிலும் அல்ல... ஆயிரத்திற்கும் அதிகமான மூங்கில் ரகங்கள் உள்ளன... அவற்றில் சில வகை, ஒரே நாளில் மூன்று அடி உயரம் வளரும் தன்மை கொண்டவை! புல் வகையை சேர்ந்தவை மூங்கில்கள். இவற்றில் மருத்துவ குணம் உண்டு; உணவாகவும் பயன்படுகிறது!

***

*கே.பாலு, திருச்சுழி: என்னைச் சுற்றியுள்ளவர்களில் பலரும் கெட்டவர்களாக உள்ளனர்... நான் மட்டும் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்?நல்லவர்களாக இருந்தால் தடையற்ற திருப்தியும், கலையாத அமைதியும் கிட்டும். துன்பங்களையும், துயரங்களையும் கடந்து செல்ல முடியும்! நல்லவர்களாக இருப்பவர்களுக்கு, அவர்களின் எல்லை எதுவென்று தெரியும். அதனால், உண்மையுடனே நடந்து இன்புற முடியும்!

***

*ஆ.ராஜா, மதுரை: எனக்கு மனசாட்சி இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படி கண்டு கொள்வது?தெரிந்தே ஒரு தப்பை நீங்கள் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... அப்போது, உடனடியாக உங்களை, உங்கள் மனம் கண்டிக்குமானால், உங்களிடம் மனசாட்சி உள்ளது எனக் கண்டு கொள்ளலாம்!

***

** எச்.ஸ்டெல்லா, சிதம்பரம்: கல்வித் திட்டம் எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?மனப்பாடம் செய்து, அதை வாந்தி எடுப்பது என்ற முறை கூடவே கூடாது! நான், நல்லவனாக, உண்மையை பேசுபவனாக, அகிம்சைகளை கடைபிடிப்பவனாக இருக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், போலீஸ் மீதுள்ள பயம் காரணமாக இவற்றை நான் கடைபிடிக்காமல், 'இந்த நற்பண்புகள் என் இயல்பு...' என்று ஒவ்வொரு மாணவனும் எண்ணும் அடிப்படையில் அமைய வேண்டும் கல்வித் திட்டம்!

***

*ஜே.என்.ஜேம்ஸ், வத்தலக்குண்டு: என் நண்பர்கள் அனைவரும் என்னை எப்போதும் புகழ்கின்றனரே...பண ஓட்டம் அதிகமாக இருப்பவர்களிடம் நெருக்கமாக பழகி, அவர்களை முகஸ்துதி செய்து, தம் காரியங்களை சாதித்துக் கொள்ளவே இவ்வாறு நடந்து கொள்வர். முகஸ்துதி செய்பவர்களை நம்பி விடாதீர்கள்; உங்களை மோசம் செய்யவே இந்த புகழ் மாலை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !