அந்துமணி பதில்கள்!
*வி.ரேவதி, சிவகங்கை: சமைப்பது ஒரு கலை என்றால், அதை சாப்பிடுவதும் ஒரு கலை தானே...மிகச் சரியாக சொன்னீர்கள்... எனக்குத் தெரிந்த பலர், பொரியல், கூட்டு, அப்பளம், குழம்பு எல்லாவற்றையும் கலந்து, ஒரே வெட்டாக, நாம் குழம்பு சாதத்தை முடிக்குமுன், மோர் சாதம் முடித்திருப்பர்... அவ்வளவு அவசரமாக ருசி பார்க்காமல் சாப்பிடுவர். இன்னும் சிலர், அருமையான பால் பாயசத்தில் பூந்தி, வடை, அப்பளம் எல்லாவற்றையும் கலந்து, கையிலேயே ஒரு சுழற்று சுழற்றி, 'சர்' என உறிஞ்சுவர் பாருங்கள்... அத்துடன் ஊறுகாயையும் ஒரு நக்கு... சகிக்காது.****எம்.சக்திவேல், விருதுநகர்: ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று கருதுபவர்கள், இன்னும் தமிழகத் தில் இருக்கின்றனரா?இருக்கின்றனராவது... நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன், 100 பேரில், 16 பேர் இப்படிப்பட்ட நினைப்புக் கொண்டிருந்தனராம்... இன்றோ, 21 பேர் அப்படி நினைக்கின்றனராம்... டில்லியில் உள்ள, 'இந்தியன் கமிஷன் ஆப் சோஷியல் சயின்ஸ் ரிசர்ச் சென்டரி'ன் ஆய்வு இது!****சி.குணசேகரன், ராஜபாளையம்: எந்த சிறு சம்பவம் நடந்தாலும், விசாரணை கமிஷன் அமைத்து விடுகின்றனரே... இவை, எத்தனை நாளில் விசாரணையை முடிக்க வேண்டும்? இதனால், என்ன பயன்?விசாரணை கமிஷன் என்றால், 'அல்வா' என்று பொருள் கொள்ளுங்கள் இனி. கூக்குரலிடும் வாய்களுக்கு உடனே, 'பிளாஸ்திரி' போட, காலங்காலமாக கையாளப் பட்டு வரும் பம்மாத்தே விசாரணை கமிஷன். கமிஷனின் முடிவு எப்போது வெளியாகும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.****வி.சுப்பிரமணி, அருப்புக்கோட்டை: எனக்கு வாழ்க்கையே வெறுப்பாய் தோன்றுகிறது... என்ன செய்ய?நீங்கள் விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்... அது, எதிர்மறையாகும் போது, இந்த உணர்வு தோன்றுகிறது... உங்கள், 'லைப் ஸ்டைலை' மாற்றி பாருங்கள்... வருவதை விருப்போ, வெறுப்போ இன்றி ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; பிறகு சொல்லுங்கள்!***** டி.சீனிவாசன், வல்லம்: ஒருவனுக்கு வாழ்க்கை எப்போது இனிக்கும்; எப்போது கசக்கும்?மைசூர் பாகு சாப்பிடும் போது இனிக்கும்; பாகற்காய் சாப்பிடும் போது கசக்கும். கடன் வாங்கும் போது இனிக்கும்; அதை திரும்பக் கேட்கும் போது, கசக்கும். பிறருக்கு, 'அட்வைஸ்' பண்ணும் போது இனிக்கும்; அதன்படி அவனே நடக்க முயலும்போது கசக்கும்.****எஸ்.கிருஷ்ணகுமார், கோவை: பட்டப் படிப்பெல்லாம் இனி வேலை வாய்ப்பிற்கு உதவாது என்கின்றனரே... அப்படியா சார்?உண்மைதான்... புரொபஷனல் கோர்ஸ் படித்தவர்கள் கூட, வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பிளஸ் 2 முடித்த கையோடு, ஏதாவது தொழில் கற்று, ஒவ்வொருவரும் சொந்த காலில் நின்றால்தான், இனி பிழைக்க முடியும்.*****எஸ்.வெள்ளைச்சாமி, பொள்ளாச்சி: துன்பமே இல்லாமல் இருப்பவர் எவரேனும் உண்டா?இல்லை... துன்பம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. உள்ளத்தில் துன்பம் இல்லாதவருக்கு, உடலில் துன்பம் இருக்கும்... ஆனாலும், துன்பத்தை உணராமல் வாழ வழிகள் பல உண்டு!***