உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

** ஏ.கலா, திண்டுக்கல் : நேரமே போக மாட்டேங்குது... வாழ்க்கையே, 'போர்' அடிக்குது எனக்கு...வாழ்வின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க ஆரம்பியுங்கள். அதற்கென திட்டமிட ஆரம்பியுங்கள். நேரமே போதவில்லை என கூற ஆரம்பித்து விடுவீர்கள்; 'போர்' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்! முன்னேற்றம் குறித்து நல்ல திட்டங்களை யோசித்துக் கொண்டே இருந்தால், ஒரு நாள் நிச்சயம் ஒரு, 'பொறி' தட்டும்; வளமான வாழ்வுக்கான பாதையில் முதல் அடி எடுத்து வைத்து விடலாம்!****எஸ்.அரிகரன், விருதுநகர்: தற்போதைய சூழ்நிலையில், ரசிகர்கள், சிறப்பான கதையோட்டமுள்ள படங்களை விரும்புகின்றனரா அல்லது கவர்ச்சி ஆட்டத்தை விரும்புகின்றனரா?இடை, தொடையை கவர்ச்சி ஆட்டங்களில் பார்த்து, அவற்றை ரசிக்க பழகி விட்ட ரசிகர்களுக்கு, அவற்றை முற்றிலும் துறக்க விருப்பமில்லை. அதே நேரம், நல்ல கதையும், சத்தையும் எதிர்பார்ப் பவர்களாகவும் இருக்கின்றனர்!****டி.சுடலைமுருகன், சென்னை: தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை காதலிக்கலாமா?வலியச் சென்று, தகுதிக்கு மீறிய பெண்ணை காதலித்தால், 'டேஞ்சர்...' பின்னி எடுத்து விடுவர்! அவர்களாகவே முன் வந்தால், 'கன்சிடர்' செய்யலாம்!****பி.ஜகன்நாதன், திருமங்கலம் : அரசு அதிகாரியாக இருந்து, சமீபத்தில் ஓய்வு பெற்றேன். எனக்கு, மொத்தமாக நிறைய பணம் கிடைத்திருப்பதை அறிந்த உறவினர்களும், நண்பர்களும், கடன் கேட்டு நச்சரிக்கின்றனர்... என்ன செய்வது?தயங்காமல், 'நோ' சொல்லி விடுங்கள்... தாட்சண்யம் பார்த்தால், 'பிளேடு' கம்பெனிகளில் பணம் போட்டவர்களின் கதியாகி விடும். இதனால், நட்போ, உறவோ பாதிக்கப்பட்டாலும் பாதகமில்லை.***** சே.லாவண்யா, திருச்சி: இந்திய பெண்களின் முன்னேற்றம், உங்களை வியக்க வைக்கிறதா, திகைக்க வைக்கிறதா?ஏன் வியக்க, திகைக்க வேண்டும்? இயல்பிலேயே, அவர்களுள் மறைந்து கிடக்கும் திறமைகள், இப்போது தான் வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளன... இது, மகிழ்ச்சியைத் தருகிறது!****வி.கண்ணன், சேலம் : உலகிலேயே அதிக போதையை மனிதனுக்கு தருவது எது?மிக போதையூட்டும் சக்தி, புகழ் மொழியே! அதுவும், 'இவனை வீழ்த்தியே தீருவது' என சபதம் எடுத்தவன் கூறும் புகழ் மொழி இருக்கிறதே, ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்தது!***** ஆர்.லெட்ச்சப்பன், ஊட்டி : கட்டிய மனைவியை கைநீட்டி அடிப்பதால், கணவன் பெரிய மனிதனாகி விட முடியுமா?பெரிய மனிதனாக மாட்டான்; கேவலமாகி விடுவான்! உடல் ரீதியாக தனக்கு சமமாக உள்ள ஆளைக் கூட கை நீட்டி அடிப்பது கேவலம் எனும் போது, உடலில் பாதி, உயிரில் பாதி எனக் கருதப்படும் மனைவியை அடிக்கக் கை தூக்குபவன் எவனாக இருப்பினும், அவன் சாக்கடை புழுவுக்கு ஒப்பானவன் தான்!****ஏ.கிருஷ்ணகுமார், ஓசூர் : நண்பர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?நாம் துன்பத்தில் இருக்கும்போது, நம்மிடம் வருத்தப்படுவது போல நடித்து, பிறரிடம் நம்மை கிண்டல் செய்து, நம் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள் - ஒன்று! நம் துன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தை நீக்க - போக்க வழி செய்யத் தெரியாதவர்கள் - இரண்டு! துன்பம் நீங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்பவர்கள் - மூன்று. ஆக, நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்! உங்களது நண்பர்களில் மூன்றாம் வகை நண்பர்கள் எத்தனை? முதலாம் வகை எத்தனை?***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !