உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

* பி.ராஜாமணி, ஆவடி: இரு தாரம் சட்டப்படி குற்றம் என்கின்றனர். அரசியல் தலைவர்கள், 'பல தாரம்' வைத்துள்ளனரே... அது எப்படி? சட்டம் அவர்களை ஒன்றும் செய்யாதா?அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல... சுப்பன், குப்பனையும் கூட சட்டம் ஒன்றும் செய்யாது. 'சட்டப்படி தாலி கட்டிய பொண்டாட்டி நான் இருக்கேன்... எங்க வீட்டுக்காரரு, இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டரு' என, சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுக்க வேண்டும். முதலாவது இருக்கும்போது, இன்னொன்றை தாலி - பதிவு இல்லாமல், 'சேர்த்து'க்கிட்டால், ஒன்றும் செய்ய முடியாது! நம்ம சட்டம் அப்படி!**** கே.மல்லிகா, பூந்தமல்லி: ஈ.வெ.ராமசாமி எந்த விதத்தில் உங்களைக் கவர்ந்தார்?படிப்பின்மையை பெண்களிடமிருந்து விரட்டப் பாடுபட்டதில்; பெண் அடிமையை ஒழிக்க முயன்றதில்; கணவனை இழந்த பெண்கள், மறுமணம் செய்வதை ஆதரித்து ஊக்குவித்ததில்!**** சி.ரகுவரன், கடலூர்: சிறந்த முன்னணி எழுத்தாளராக விரும்புகிறேன். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்...வாங்க... ரெண்டு பேரும் சேர்ந்து, முன்னணியை தேடிப் போவோம்!****வி.மீனலோசினி, கம்பம்: உண்மையைச் சொல்லுங்கள்... தீபாவளிக்கு பயமில்லாமல் கொளுத்துவது கம்பி மத்தாப்பு தானே?வயிற்றெரிச்சலை கிளப்பாதீர்.... 'வேண்டாம் கையைச் சுட்டுக்குவே...' என்று, கம்பி மத்தாப்பை கூட லென்ஸ் மாமா, 'அபேஸ்' செய்து விடுகிறார்.****கே.வேணுகோபால், குமுளி: மருந்தால் குணமடையாத நோய்கள், மந்திரம் மூலம் குணமடைகிறதே... நம்பிக்கை உண்டா?வேண்டாதவர்களை நாசுக்காக தீர்த்துக் கட்டும் வழிகளில், இதுவும் ஒன்று என்பது, என் நம்பிக்கை!*****ஜெ.கருணைக்கடல், பெசன்ட் நகர்: முகஸ்துதி செய்வோர்களைக் கண்டால், கடுமையாக பேசி விடுவீர்களா - பல்லிளித்துக் கொள்வீர்களா?முகஸ்துதி செய்பவர் புரிந்து கொள்ள முடியாத முகபாவனையை, கொண்டு, ஆசாமியை ஆழம் பார்த்துக் கொள்வேன். கலப்பையை மாற்றி, கள்ள உழவு எப்போ போடுவான் என்பதற்கான கால நேரத்தையும், கணித்து விடுவேன்!****தி.அன்புசெழியன், மைலாப்பூர்: விரக்தி, காதல் தோல்வி, பேஷன் - என்ன காரணத்திற்காக, இளைஞர்கள் தாடி வளர்க்கின்றனர்?தினமும், 'ஷேவ்' செய்து கொள்வதில் உள்ள சோம்பேறித்தனம்!***** இ.சண்முகவடிவு, கோவை: இன்று, நேரு எந்த அளவில், மக்களால் நினைக்கப்படுகிறார்?சீனாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் காஷ்மீரின் சில பகுதிகளை தன் தவறான அணுகுமுறையால், தாரை வார்த்துக் கொடுக்க காரணமாகி விட்டாரே என்ற அளவில்!****பி.வடிவேல், காளையார் கோவில்: நடிகைகள் என் கனவில் வந்து வாட்டுகின்றனரே... என்ன பரிகாரம் செய்யணும்?கனவில் வாட்டும் நடிகைகளின், 'மேக்கப்' இல்லா, போட்டோக்களை அடிக்கடி பாரும்...***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !