உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

கே.மணிவாசகம், தாம்பரம்: தற்கொலை கள் அதிகமாகிக் கொண்டே போக காரணம் என்ன? 'டிப்ரஷன்' - மனச்சோர்வு முக்கிய காரணம் என்கின்றனர் உளவியலார். உலகிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் நாடுகள், 'ஸ்கேண்டிநேவியன் கன்ட்ரீஸ்!' இந்த நாடுகளில் பனிக் காலங்களில், மக்களுக்கு மனச்சோர்வு அதிகம் ஏற்படுகிறதாம். இதனால், தற்கொலை விகிதம், உலகிலேயே இங்கு அதிகமாக உள்ளது எனக் கூறுகின்றனர். வி.ராஜமோகன், பண்ருட்டி: எனக்கு முன் கோபம் அதிகம். இதனால், சில சமயங்களில், பொருட்களை கூட உடைத்து விடுகிறேன். கோபம் தெளிந்த பின், அதற்காக வருந்துகிறேன். முன் கோபத்தை தவிர்க்க என்ன வழி? 'கோபம் வரும் போது, சட்டென உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். அதன் விகாரத்தை உங்களாலேயே சகிக்க முடியாது, கோபம் பறந்து போகும்...' என, யாரோ ஒரு அறிஞர், எப்போதோ கூறியதை, எங்கோ படித்த நினைவு! பெ.முத்துராஜ், திருவொற்றியூர்: பேருந்துகளில், ஊக்கு, குண்டூசி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தும் அம்மணி யரை என்ன செய்வது? மூட்டைப் பூச்சி வேலையை ஓரங்கட்டி, ஒழுங்காகப் பேருந்தில் செல்பவர்கள், ஊக்கிற்கும், குண்டூசிக்கும் ஏன் பயப்பட வேண்டும்? சி.முனியபெருமாள், கோவை: ஐம்பது பைசா சில்லரை தராவிட்டால் கூட, பஸ் கண்டக்டர் களிடம் பெண்கள் சண்டைக்குப் போய் விடுகின்றனரே, ஏன்? கஷ்டப்பட்டு கணவன் சம்பாதிக்கும் காசின் அருமை தெரிந்தவர்கள் என்பதால், கறாராக இருக்கின்றனர்; இதே ஐம்பது காசு, குறைத்துக் கொடுத்தால், கண்டக்டர், 'டிக்கெட்' தருவாரா? ஈ.விக்னேஷ்வரன், சென்னை: ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் - கோடைக்கு ஏற்ற இடம் எது? முதலாவது மக்கள் நெருக்கடி, 'கசகச!' இரண்டாவது, இன்னும் டெவலப்பாக வேண்டும். மூன்றாவது சுகமோ சுகம்! மு.மல்லிகா முருகன், சீலையம்பட்டி: பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு, ஸ்டைல் என நினைத்து, 'புஸ் புஸ்' என, மற்றவர் முகத்தில் சிகரெட் ஊதி தள்ளுவதை நாகரிகம் எனக் கருதுகின்றனரே இளைஞர்கள்... பெரும் தவறு செய்கின்றனர்... 'ஸ்டைலாக' சிகரெட் பிடிப்பது இளம் பெண்களைக் கவரும் என, தப்புக் கணக்கு போடுகின்றனர். சிகரெட் பிடிக்கும் ஆண்களை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை என்பதும், அப்படி விரும்பும் பெண்கள் கூட, சிகரெட் புகைப் பவர்களுடன் நெருக்கம் ஏற்பட்ட பிறகு, சிகரெட்டை வெறுக்கின்றனர் என்பதும் இக்கால இளைஞர்களுக்குத் தெரிவதில்லையே...' என்கின்றனர் அனுபவப்பட்ட ஒரு பெண் உதவி ஆசிரியையும், உதவி ஆசிரியரும்! சா.நிஜார் பாட்சா, கம்பம்: சம்பள வாழ்க்கை எனக்கு அலுத்து விட்டது. கையில், காசும் இல்லை. என்ன செய்வது? 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' அதிபர், ஒரே ஒரு பித்தளை டம்ளருடன்தான், வட இந்தியாவில் இருந்து, சென்னை வந்தார். சிம்சன் அதிபர் சாதாரண குமாஸ்தாவாகத்தான் அக்கம்பெனியில் பணியாற்றத் துவங்கினார்; வி.ஜி.பன்னீர்தாஸ் ஒரு டீ கடையில், 'சாயா'தான் அடித்துக் கொண்டிருந்தார்...வெறும் கையில் முழம்போடும், 'டெக்னிக்'கைப் படியுங்கள். கையில் பணம் வைத்திருப்போர் ஒரு நாளும் 'அட்வென்சரில்' இறங்குவது இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !