அந்துமணி பதில்கள்
த.பத்மநாபன், சென்னை: பணம் கடன் கொடுத்தால் தான் திரும்பி வராது. புத்தகங்கள் கடன் கொடுத்தாலும் திரும்பி வருவது இல்லையே...கடன் கொடுக்க கூடாதது மூன்று: பணம், புத்தகம் மற்றும் இசை தட்டுகள். தட்ட முடியாது எனும் பட்சத்தில், அன்பளிப்பாக கொடுத்து விடுங்கள். திரும்ப எதிர்பார்த்து, மனக் கசப்பையும், பிரச்னையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்.பி.துமிலாதேவி, கடலூர்: தமக்கும், சமூக உணர்வு உண்டு என காட்டிக் கொள்வதற்காக, சம பங்கு பொதுவுடமை, மார்க்சிசம் என்று பேசுபவர்கள், சமூகத்தில், தாங்கள் ஒரு அந்தஸ்தை அடைந்த உடன், தாமும், ஒர் பூர்ஷ்வா சமூகத்து முதலாளியைப் போல நடந்து கொள்கின்றனரே!உண்மை தான். இங்கு மட்டுமல்ல, சம பங்கு பொதுவுடமை பேசி, அதை கடைப்பிடிப்பதாக காட்டி வரும் நாடுகளின் வண்டவாளங்களே, இப்போது, வெளிச்சத்துக்கு வந்து விட்டதே! இந்த சுயநலவாதிகளின் பிடியில், எப்போதும் சிக்காது தப்பிப்பதில், ஒவ்வொரு தனி மனிதனின் திறமையும், நாட்டின் திறமையும், அடங்கி உள்ளது.மு.முபாரக்அலி, பள்ளபட்டி: அரை வேக்காட்டுத்தனமாக, சிலர் ஆங்கிலம் பேசுவது பற்றி?ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்வது தவறில்லையே. ஆனால், ஆங்கிலத்தை கரைத்துக் குடித்தது போல, நடிப்பது தான் அரை வேக்காட்டு தனமானது. உ.சதாம் உசைன்,கோவை: ஆண்களிடம், பெண் களுக்கு ஒரு பய பக்தி இல்லாமல் போய் விட்டதே.!அப்போ, பெண்களுக்கு, சம உரிமை வேகமா கிடைச்சிக்கிட்டு இருக்குன்னு சொல்லுங்க.ஜெ.கிறிஸ்டோபர், செம்பட்டி: சிரித்துப் பேசுபவர்கள் எல்லாரும் கழுத்தறுப்பவர்கள் என்பது உண்மையா?'அனா'வாதிகளின் சிரிப்பை, சிரிப்பவர்களை மட்டும், 'கானா' அறுப்பு கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளலாம்.பி.முருகானந்தம், திருப்பூர்: கடன் இல்லாமல், வாழ்க்கை நடத்த கணவனுக்கு பொறுப்பு வேண்டுமா, மனைவிக்கும் தேவையா?சம்பாத்தியம் முழுவதையும், மனைவியிடம் கொடுத்து, செலவு பொறுப்பையும் அவ்விடமே கொடுக்கும் ஆசாமிகளின் மனைவியருக்கு கண்டிப்பாக, அதிக பொறுப்பு தேவை. அவ்விடம் பொறுப்பு சற்று கம்மி என்றால், சம்பாதிப்பவரே, 'லகானை' பிடித்துக் கொள்வது உத்தமம்.கெ.ஆரோக்கியமேரி, கம்பமெட்டு: சிறு பிரச்னை வந்தாலும், தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது எனக்கு...உளவியலாளர்களும், அவர்களது நுால்களும், கூறுவது என்ன தெரியுமா? தற்கொலை எண்ணம் கொண்டவர்கள், தங்கள் உயிர் மேல், மிகுந்த ஆசை கொண்டவர்கள். ஒருநாளும், இவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். மாறாக, தற்கொலை என்பது, அந்த ஒரு நிமிடத்து உணர்ச்சியின் வேகத்தில் நிகழ்வது, என்கின்றனர். கவலைப்படாதீர்கள், 'அந்த' செயலுக்கு துணிய மாட்டீர்கள்.