அந்துமணி பதில்கள்
ச.மனோகரி, ஒட்டன்சத்திரம்: தன் கணவன், இன்னொரு பெண்ணுடன் பேசினால், பொறுத்துக் கொள்கிறாள் மனைவி. ஆனால், தன் மனைவி இன்னொரு ஆடவனோடு பேசினால் சந்தேகம் கொள்கின்றனரே இந்த கணவன்மார்...தம்மைப் போலவே, தம் மனைவியையும் நினைக்கும் ஆசாமிகள் இவர்கள். நம்பிக்கை துரோகம் செய்யும் குணம் இயற்கையிலேயே பெண்களுக்கு கிடையாது. ஆனால், கட்டிப் போட்டு காபந்து செய்ய நினைச்சா, தோல்விதான் என்பதை இந்த சந்தேகப் பேர்வழிகள் உணர வேண்டும்!பி.சந்திரகாந்தா, கொரட்டி: எதிர் வீட்டுச் சிறுவன் என்னை அடிக்கடி குறும்புப் பார்வை பார்க்கிறான். என்ன செய்வது அவனை?சிறுவன் தானே... அருகே அழைத்து செல்லமாக தலையைக் கோதிக் கொடுத்து, 'தம்பி... இந்தா சாக்லெட்...' என்று கொடுங்கள்; அப்புறம் பார்க்கவே மாட்டான்!இ.வேளாங்கன்னி, வடுகபட்டி: சில சமயங் களில், நம்மை அறியாமலேயே மற்றவர் மனதை வார்த்தைகளால் புண்படுத்தி விடுகிறோம். இதற்கு என்ன தண்டனை?புண்படுத்தி விட்டதை உணர்ந்து வருந்துவதே தண்டனை தான். இப்படிப்பட்ட மனம் இருக்கும்போது, புண்பட்டவரிடம் நேரடியாக மன்னிப்பு கோருவது சிறந்த மருந்தாக அமையும்!வி.ராமச்சந்திரன், பண்ரூட்டி: தங்கியிருக்கும் வீட்டின் நிலை தெரியாமல், விருந்தினர்கள் நாள் கணக்கில், 'டேரா' அடித்து விடுகின்றனரே...இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல் உள்ள நிலவரத்தை எடுத்துச் சொல்லி விடுவதுதான் புத்திசாலித்தனம். கடன் ஏற்பட்டால், இவர்கள் கண்டு கொள்ளவா போகின்றனர்!ம.சந்திரசேகரன், முனைஞ்சிபாடி: நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படிக்கிறேன். என்னுடைய, ஏட்டுப் படிப்பை தொடர்வதா அல்லது தொழில் கற்றுக் கொள்ளலாமா?வேலை செய்து கொண்டே படிப்பதாக கூறுவதால், உங்கள் குடும்பச் சூழல் புரிகிறது. ஏட்டுப் படிப்பில், ஒரு, 'டிகிரி' வாங்கினால், தற்போதைய வேலையை விட, மரியாதை(?)யான வேலையை தேடி அலைய வேண்டியதுதான் மிச்சமாக இருக்கும். நீங்கள் இப்போது, வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே, தொழில் கற்றுக் கொள்ள முடிந்தால், 'வெல் அண்ட் குட்!' இல்லாவிட்டாலும், ஏதாவது தொழில் கற்று, சுய காலில் நிற்க முயற்சிப்பது, 'பெஸ்ட்!'கே.பாபு,சென்னை: இன்றைய பெண்களிடம், 'பெண்மையின் மென்மை' கொஞ்சமாவது தென்படுகிறதா?இன்றைய பெண்கள், 'பலாப்பழ' வேடம் தரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. வெளித்தோற்றம் முள்ளாக இருந்தாலும், உள்ளே எப்போதும், 'ஸ்வீட்'தான் பெண்கள்!எஸ்.மெகரூன்னிசா, மேற்கு மாம்பலம்: அறுவை களிடமிருந்து தப்புவது எப்படி?தவிர்க்க கூடிய அறுவைகளா, தவிர்க்க முடியாத அறுவைகளா என்பதைக் கூறவில்லையே! இரண்டுக்கும் வெவ்வேறு வழிகள் உள்ளன!