அந்துமணி பதில்கள்!
எஸ்.நய்னார் முகம்மது, கம்பம்: பதினாறு அல்லது பதினேழு வயதுக்குள், தம் பெண்ணுக்கு திருமணத்தை முடித்து விட வேண்டும் எனத் துடிக்கும் சில பெற்றோர் பற்றி...கம்பி எண்ண வைக்க வேண்டும் இவர்களை! முழுமையான உடல் வளர்ச்சியோ, மன வளர்ச்சியோ, உலக அறிவோ இல்லாத வயது அது. என்னைக் கேட்டால், 20 வயசுக்கு மேல் தான், பெண்ணுக்கு திருமணமே செய்ய வேண்டும்! பெ.சுஷ்மிதா, திருப்பூர்: இக்கால இளைஞர்கள், அழகிய பெண்களையே திருமணம் செய்ய விரும்புகின்றனரே...உங்கள் கூற்றுப்படி பார்த்தால், அழகு குறைவான பெண்கள் எல்லாருமே முதிர் கன்னிகளாக அல்லவா இருக்க வேண்டும்; அவர்களுக்கும் கல்யாணம் நடக்கிறது; குழந்தை, குட்டி பெற்று நல்லபடியாக குடித்தனமும் நடத்திக் கொண்டு தானே இருக்கின்றனர். 'அழகு மனதில் உள்ளது' என்பதை, ஆண்களும் உணர்ந்து இருக்கத்தான் செய்கின்றனர்!பி.சுமதி, கருவேலம்பட்டி: சமீபத்தில் சென்னை வந்திருந்தேன். அங்குள்ள பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளதே...நீங்கள் வெளியூர் பெண்மணி என்பதால், இப்படித் தோன்றியுள்ளது. சென்னை மகளிருக்கு இந்த அனுபவம், தினசரி காபி, டீ குடிப்பது போன்று பழகி விட்டது. பஸ் பயண இடி, உரசல்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை; சென்னை வாழ்க்கை முறை அப்படி! எஸ்.மாலதி, சென்னை: என் தோழி ஒரே நேரத்தில், தன் ஒரே படைப்பை, பல பத்திரிகைகளுக்கு அனுப்புகிறாள்; ஏதாவது ஒரு இதழில் வெளியாகாதா என்ற ஆர்வத்தில்... இப்படி அனுப்பலாமா?ரொம்ப தப்பு; அனுப்பக் கூடாது. ஒரே படைப்பு இரு வேறு பத்திரிகைகளில் ஒரே வாரமோ, அடுத்தடுத்த வாரமோ ஒரே பெயரில் வெளியானால், நம்பகத்தன்மையை இழந்து விடுவார்; ஓரம் கட்டி விடுவர் பத்திரிகை ஆபீசில்!எ.சரவணன், தாம்பரம்: ஓட்டுப் போடாமல், தேர்தலை புறக்கணிப்பவர்களை என்ன செய்யலாம்?இந்திய அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள, தனி நபருக்கான எல்லா அடிப்படை உரிமைகளையும் பறித்து விடலாம். இது கொடூரமாகத் தோன்றினாலும், வாக்களிப்பைப் புறக்கணிக்கும் மேல் தட்டு மக்களையும், படித்தவர்களையும் ஓட்டுச் சாவடிக்கு இழுத்து வர உதவும்!எம்.எம். ரஞ்சனி, நீலகிரி: இன்றைய இளைஞர்களிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம் எது?'எல்லாம் தெரியும்' என, நினைக்கும் மனோபாவம். இவர்களுக்கு ஏதாவது ஒரு சப்ஜெக்டிலாவது ஆழமான அறிவு இருக்குமா என தேடினால், 'ஜீரோ'வாகத்தான் இருக்கின்றனர், தொண்ணூறு சதவீதத்தினர்!சி.ஆர்.பரமசிவம், திருவையாறு: உங்கள் எதிரி யார்?இருபத்தி நான்கு மணி நேரம் தான்; இதுவே, முப்பத்தாறு மணி நேரம் ஒரு நாள் என, இருக்கக் கூடாதா என, நினைப்பவன் நான்!து.சசிகலா, பரவை: கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்கள், தம் காதலைப் பற்றி, திருமணமான, பெரிய பெண்களிடம் கூறலாமா?திருமணமான அப்பெண்ணிடம், இந்த இளம் பெண்ணுக்கு இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்துக் கூறி, ஆலோசனை கேட்கலாம். அது கிடக்கட்டும்... படிக்கிற வயதில் காதல், கத்திரிக்காய் எல்லாம் தேவையா?