அந்துமணி பதில்கள்
சு.மகேஸ்வரி, திண்டிவனம்: ஆண் பிள்ளை, பெண் பிள்ளை... பெற்றோரிடம் அதிக பாசம் வைத்திருப்பவர் யார்?பெரும்பான்மையும் நான் பார்த்த, கேட்ட வரையிலும் பெண் பிள்ளைகள் தான்! பெற்றவர் சொத்து, சீர் செனத்தி செய்கின்றனரோ இல்லையோ பெற்றவர்களிடம் அதிக பாசம் வைத்திருப்பவர் பெண் பிள்ளைகளே! எஸ்.கணேசன், வல்லம்: புகுந்த வீட்டிற்கு வந்த பின்னும், ஒரு பெண்ணுக்கு தாய் பாசம் தானே ஓங்கி இருக்கிறது. அதே பாசம், மாமியார் மீது வர மறுப்பதேன்?மாமியார், தாயாக மாற வேண்டும். 'நான் மாமியார், நீ மருமகள்' என்ற ஹோதாவை உதறி மருமகளில் உள்ள,'மரு'வை தூக்கி எறிய வேண்டும். பின்னர் பாருங்கள்...எஸ்.கோவிந்தன், அழகாபுரி: டீன் - ஏஜ் பெண்கள் வழி மாறி போக, சரியான வழிகாட்டுதல் இல்லாத தாய் கூட ஒரு காரணம் என்கின்றனரே...நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தை இது. பல தாய்மார்கள் உலக நடப்பு அறியாதவர்களாக, வெளுத்ததெல்லாம் பால் என, நம்புபவர்களாக உள்ளதால், அவர்கள் குழந்தைகளுக்கு மேடு எது, பள்ளம் எது என, வகைப்படுத்தக் கூட தெரியவில்லை. இதனாலேயே பல சோகங்கள் நிகழ்ந்து வருகின்றன!ப.இளங்குமரன், கண்டமனூர்: உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை; என்ன செய்வது?உங்களுக்கு சாமர்த்தியம் போதவில்லை என்று தெரிகிறது; காலுக்கு பொருந்தாத செருப்பை கழற்றி எறிந்து விட்டு போயிடணும்! ஆர்.ஹரிஹரன், விளாமரத்துப்பட்டி: உண்மையான அறிவாளியை அடையாளம் காணுவது எப்படி?அவன் முட்டாளைக் கண்டு சிரிக்க மாட்டான்; முன்னேறி விட்டதாகச் சொல்லி குதிக்க மாட்டான். முந்திரிக் கொட்டையைப் போல தலையை முன்னால் நீட்டி அவமானப்பட மாட்டான்.எம்.உமா, ஆனைமலை: தன் தகுதி அறியாதவர் கதி என்னவாகும்?'துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது முதுமொழி. தன்னைத்தானே அறியாதவர், ஜால்ராக்களின் புகழ் மொழியால் இழி நிலைக்கு தள்ளப்படுவர். பிறகு, 'உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா' கதைதான்! ஆர்.குணசெல்வி, தேனி: துன்பம் வந்தால் ஆறுதல் தேடுவது எப்படி?ஏதோ இதோடு போயிற்றே என்று எண்ணி, ஆறுதல் அடைய வேண்டியதுதான்!