அந்துமணி பதில்கள்!
வி.பிரேமா, ஆலங்குளம்: இந்தியர்களின் உணவு பழக்கங்களில் மாறுதல் ஏதும் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளதா?கடந்த, 35 ஆண்டுகளில், அசைவ உணவு பழக்கம் பணக்காரர்களிடம், 100 சதவீதமும், குறைந்த வருமானமுள்ளவர்களிடம், 121 சதவீதமும் அதிகரித்துள்ளதாம். இதே போல், பழ வகைகள் உண்பதும், 163 சதவீதத்திலிருந்து 184 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, 'புட் பாலிசி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கூறுகிறது!எஸ்.மணிராஜ், உடுமலைப்பேட்டை: அரசியலில் நடிகர்கள் பிரபலமாவது போல் பத்திரிகையாளர்களால் முடிவதில்லையே... ஏன்?கிராமங்களில், இளைஞன் முதல் கிழவி வரை யாரால் எட்ட முடிகிறதோ, அவர்களே அரசியலில் பிரபலமாக முடியும். அறிவுப்பூர்வமான விஷயங்களை கிராம மக்களால் புரிந்து கொள்ள முடியாது. அதனால், பத்திரிகையாளர்களை அவர்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது. இதனாலேயே அரசியலில் பிரபலமாக முடியாமல் போய் விடுகிறது. க.அஞ்சலை, ஆவாரம்பாளையம்: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, இங்கு பத்திரிகை சுதந்திரம் எப்படி உள்ளது?எவ்வித நெருக்குதல்களும், அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், வட மாநில நிருபர்களுக்கு உள்ள தைரியம், நம்மவர்களுக்கு இல்லை; அரசியல்வாதிகளிடம் ஒரு பயம் இருக்கிறது. உருட்டுக் கட்டைகளும், ஆட்டோக்களும் இதற்கு அடிப்படையாக இருக்கலாம்!கே.சரண்யா, நரிமேடு: என் காதலர் என்னை ஏமாற்றி விட்டார்; இழக்கக் கூடாததை எல்லாம் இழந்து, இன்று பெரும் கவலையில் இருக்கிறேன்...'சென்றதை எல்லாம் உடனே அறவே மறந்து விடு; கவலைப்பட்டு கொண்டே இருப்பவன் சுகப்பட மாட்டான்!' என, எத்தனையோ அறிஞர்கள், தத்துவ ஞானிகள் கூறிச் சென்றதை படித்ததில்லையா... 'வாட் நெக்ஸட்' என, அடுத்து நடக்க வேண்டிய வேலைகளைப் பார்க்க ஆரம்பியுங்கள்!எஸ்.மகேஸ்வரி, அவனியாபுரம்: ஏதோ ஒரு நாட்டில், ஆண்டில் மூன்று மாதங்கள் இரவே வராதாமே... அந்நாடு எங்கே உள்ளது?வடமேற்கு ஐரோப்பிய நாடான நார்வேயில் தான் மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் இரவே வராது; 24 மணி நேரமும் பகல்தான். இந்நாட்டிற்கு, 'நள்ளிரவு சூரியன் நாடு' என்ற பெயரும் உண்டு.எம்.மாணிக்கவல்லி, குலமங்கலம்: நாம் இன்னும் விவசாய நாடுதானா?ஆம். நம் மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர், பயிர் தொழில், கால்நடை வளர்த்தல், மீன் பிடித்தல், பதப்படுத்தும் தொழில் மற்றும் விவசாய விளைபொருள் விற்பவர்களாகவே உள்ளனர். உலகில் உள்ள விவசாயிகளில் நான்கில் ஒருவர் இந்தியர்!எஸ்.கார்த்திகேயன், ஆத்துப்பாளையம்: அமெரிக்கர்களை விட, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிகம் சம்பாதிப்பதாக என் தோழி கூறுகிறாளே...உண்மைதான்; இங்கிருந்து சென்ற, 'புரொபஷனல்'கள் அமெரிக்கர்களை விட அதிகமாகவே சம்பாதிக்கின்றனர். இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம், அங்கு, 23 லட்சம் ரூபாய்; ஆனால், அமெரிக்கர்கள் சராசரியாக, 16 லட்சம் ரூபாயே சம்பாதிப்பதாக, அமெரிக்காவின் சென்சஸ் அமைப்பு கூறியுள்ளது!என்.பாபு, குறிஞ்சி நகர்: நம் கல்வி முறையில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?உடன்பாடே கிடையாது. நம் கல்வி முறையை, 'வெறும் கிளார்க்குகளை உருவாக்கும் கல்வி முறை' என்பர். ஆனால், அந்த கிளார்க்குகளைக் கூட திறமையானவர்களாக தயாரித்து அளிக்க முடியாத நிலையை தான், கண் கூடாக காண்கிறோம். நம் கல்வி முறையே இன்றைய பெரும் பிரச்னையான, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு அடிப்படைக் காரணம்!