உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

டி.பொன்னுச்சாமி, திருமுல்லைவாயில்: நியாயம், நேர்மை, நீதி, கட்டுப்பாடு, ஒழுக்கம், கைச் சுத்தம், வாக்கு தவறாமை என்பதையெல்லாம் பின்பற்றி வாழ்பவன், வாழ்வில் வெற்றி பெறாமல், தோல்வியுற்று, மனமுடைந்து நிற்கிறான். ஆனால், லஞ்சம், மோசம், ஏமாற்றுதல், பொய் பேச்சு, கேப்மாறித்தனம் உள்ளவன் வெற்றியடைந்து, சுகமாக, சந்தோஷமாக இருக்கிறான். இதன் அர்த்தம் என்ன? தத்துவம் பேசாமல், வீண் வாதம் இன்றி, 'பிராக்டிகலாக' பதில் கூறுங்கள்...எது இருக்கோ, இல்லையோ இரவில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வர வேண்டும். 'சுகமாக, சந்தோஷமாக இருக்கிறான்...' என, நீங்கள் குறிப்பிடும் பேர்வழிகள், உண்மையாகவே சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். தூக்கம் வரவழைக்க, 'ஸ்லீப்பிங் டோஸ்' எடுத்துக் கொள்வர். போலீஸ் எப்போது பிடிக்குமோ, இன்கம்டாக்சில் மாட்டிக் கொள்வோமோ என பல பிரச்னைகள் மண்டையை குடைந்தபடியே இருக்கும். இது, உடல் உபாதைகளில் கொண்டு விடும். கொள்ளையடித்து சேர்த்த காசெல்லாம் கடைசியில் டாக்டரிடம் போய் சேரும். நியாயமாக வாழ்பவன், வாழ்வில் தோல்வி அடைந்ததாக நினைத்துக் கொள்வது வெறும் மனப் பிராந்தி! எம்.மும்மது ராஜா, திண்டிவனம்: வன்முறையில் ஈடுபடும் கட்சிகளை அரசியலில் இருந்து நீக்கினால் என்ன?அப்புறம் எந்தக் கட்சி தான் மிஞ்சும்?கே.ஆர்.வெற்றிச் செல்வன், திருப்பூர்: பிறருக்கு, 'ஜால்ரா' போடுவதையே குறிக்கோளாக கொண்டவர்கள், எளிதில் முன்னேறி விடுகின்றனரே...ஒவ்வொரு தனி நபருக்கும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும் தானே... வாழ்வின் முன்னேற்றத்திற்கு பல பாதைகள் இருக்கின்றன. அதில், 'ஜால்ரா' பாதையை சிலர் தேர்ந்தெடுக்கின்றனர். பிறருக்கு கேடு நினைக்காதவரையில், 'ஜால்ரா' பாதையில் தவறு இருப்பதாக தெரிய வில்லை!எஸ்.முத்துராமலிங்கம், பல்லடம்: என் போன்ற இளைஞர்களுக்கு பெரியோர், 'அட்வைஸ்' என்ற பெயரில் ரம்பம் போடுவது பற்றி தங்கள் கருத்து... தங்களுக்கு இது போல் அனுபவம் ஏற்பட்டதுண்டா?ரம்பமாக தோன்றிய பருவம் உண்டு. உடல் நலமாவதற்கு தானே டாக்டர் மருந்து தருகிறார்... அது, கசப்பாக இருந்தாலும் பொறுத்துக் கொள்கிறோம் அல்லவா? அதுபோல தான், இப்போது நீங்கள், 'ரம்ப'மாக எடுத்துக் கொள்ளும் சமாசாரமும்!எம்.கனகவேல், அனுப்பானடி: இன்றைய கன்னி பெண்களுக்கு ஏற்படுகிற கவலைகள், பணத்தைப் பற்றியா அல்லது திருமணத்தை பற்றியா?திருமணத்திற்கு முன், இரண்டாவதைப் பற்றி, பின், முதலாவது பற்றி!வி.பெருமாள், வீரபாண்டி: பணம், வேலை வாய்ப்பு, படிப்பு, வழக்கு தொடர்பான விஷயங்களில் மற்றவர்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்து வருகிறேன். என்னால் பலன் பெற்றவர்கள், சமய சந்தர்ப்பங்களில் என்னை உதாசீனப்படுத்துகின்றனர். இதனால், விரக்தி ஏற்பட்டு, இனி, நன்மையும் செய்யாமல், தீமையும் செய்யாமல் நம் வேலையை பார்த்துக் கொண்டு போவோம் என எண்ணத் தோன்றுகிறது. என் எண்ணம் சரிதானா?சரி என ஒப்புக் கொள்ள மாட்டேன். நம்மால் முடிந்த நன்மைகளை, அது, ஓர் அறிவு பெற்ற உயிராக இருப்பினும் செய்யவே, நாம் படைக்கப்பட்டுள்ளோம். நீங்கள் நன்மை செய்யும் போது, எதிர்பார்ப்புகள் - பணம் அல்லது உதவியால் கிடைக்கும் பெயர், புகழ் அல்ல, உதாசீனம் கூட படுத்தப்படக் கூடாது என்ற எதிர்பார்ப்புடன் செயல்பட்டுள்ளீர்கள்.எதிர்பார்ப்புகளை மூட்டை கட்டி வைத்தீர்கள் என்றால், 'விரக்தி' ஏன் ஏற்படப் போகிறது!ஜெ.ஆர்.ஜெகன்னாதன், குரோம்பேட்டை: புதிது புதிதாக தோன்றும், 'டிவி' சானல்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவுகிறதா?உதவத் தான் செய்கின்றன... தமிழர்களை மேலும் சினிமா பைத்தியமாக்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !