அந்துமணி பதில்கள் !
*மு.பழனிசாமி, திருப்பூர்: நீங்கள் விரும்பும் பெண், உங்களை விரும்பா விட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?இந்த ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபட நேரம் ஏது எனக்கு? ** ஆர்.விஜயராஜ், திண்டுக்கல்: அரசியல்வாதிகள் எப்போது முற்றும் துறந்தவர்கள் போல காட்சி அளிப்பர்?தேர்தல் நெருங்கும் போது!*வி.ஹரிசங்கர், உடுமலைப்பேட்டை: ஒரு எழுத்தாளரின் படைப்பை, அது இலக்கியமா, இல்லையா என்று முடிவு சொல்வது யார்?'இலக்கியமுன்னா என்னங்க?' - இந்த கேள்வியை நான் கேட்காத எழுத்தாளர், படைப்பாளி இல்லை. இதுவரை, யாரும், நான் ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை தரவில்லை! படமில்லாமல் கொச, கொசவென எழுத்துக்கள் மட்டும் நிறைந்து உள்ள பத்திரிகைகளில், கதைகள், கட்டுரைகள் போல் எழுதுபவர்கள் தங்களை இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றனர்; இவர்கள் தான் எது இலக்கியம், எது இலக்கியமில்லை என்றும் கூறுகின்றனர். *எஸ்.ரஞ்சித், சென்னை: அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை கொள்பவன் சோம்பேறியா? உழைப்பாளியா?வடிகட்டிய முட்டாள்! ** எஸ்.ராஜகோபாலன், காஞ்சிபுரம்: சினிமா பார்ப்பது கெடுதல் என்கிறீர்களா?இல்லை. எப்போதாவது வெளியாகும் நல்ல படங்களைப் பாருங்கள்... கெடுதல் இல்லை! கண்ட படங்களையும் தினமும் பார்த்துவிட்டு, அதைப் பற்றியே பேசிக் கொண்டு, பித்துப் பிடித்து அலைவதும், தமக்கு பிடித்த நடிகர், நடிகை என்று எவரையாவது சொல்லிக் கொண்டு, அவனை விட சிறந்தவர் எவரும் இல்லை என்று சண்டை போட்டு கொள்வதும் தான் கெடுதல்! *ஆர்.மூர்த்தி, கோவை: 'பிகர்'களை, 'சைட்' அடிக்கும் பழக்கம் உள்ளவன் நான். ஆனால், என் தங்கையை, பிறர், 'சைட்' அடிக்கும் போது, என் ரத்தம் கொதிக்கிறதே...'டேக் இட் ஈஸி பாலிசி' வைத்துக் கொள்ளுங்கள். இல்லே... கொதிக்கிற ரத்தம், நிரந்தர, 'பிளட் பிரஷர்' நோயாளியாக்கி விடும் உங்களை! * எம்.யாழ்மொழி, பழனி: அடங்கிப் போற மனைவியைத் தானே நல்ல குடும்பப் பெண் என்று சமூகம் சொல்கிறது...சமூகம், சமூகம்ன்னு ஏன் தான் அடிச்சுக்கிறீங்களோ? நாளைக்கு இதே சமூகம், 'அடங்கிப் போற' பெண்ணை புருஷன்காரன் கொடுமைப்படுத்தினா எதுத்து நின்னு கேட்கவா போகுது?