உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எஸ்.ஷைலஷா, மந்தைவெளி: எனக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன; கூட்டுக் குடும்பம். பட்டப்படிப்பு படிக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர். என் மாமியார் திட்டும் போது, என்னுடைய படிப்பையும், என் பெற்றோரையும் சேர்த்து திட்டுகிறார். என் கணவரோ பதில் பேச வேண்டாம் என்று கூறுகிறார். மனது நிம்மதியில்லாமல் இருக்கிறது. இதற்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!உங்கள் கணவர் சொல்வது தான் சரி. அவர் கூறியபடி சில காலம் நடந்து வாருங்கள். அதே நேரத்தில், மாமியாரின் அன்பை பெற்று, அவரை உங்கள் கைக்குள் போட முயற்சி செய்யுங்கள். அப்படியும் கொட்டிக் கொண்டே இருந்தால், சுமூகமாக பிரிந்து, தனிக் குடித்தனம் சென்று விடுங்கள். பிரச்னை தீர சுலபமான வழி இது தான்!எம்.எஸ்.ரமேஷ், மதுரை: குற்றவாளிகளை எல்லாம் வி.வி.ஐ.பி., ஆக்குவது யார்?வாக்காளர்கள் தான்!எம்.பிலோமினா, ஆரப்பாளையம்: நாம் தம்பி போல் நினைக்கும் சின்னப் பையன்கள், நம்மை காதலியாக கருதுகின்றனரே... இவர்களை எப்படி திருத்துவது என்று, என் தோழி மனம் வெதும்பி கேட்கிறாளே...அந்த சின்ன பையன்களிடம், 'தம்பி... பரீட்சையில எத்தினாவது ராங்க்... தம்பி... நல்லா மார்க் எடுக்கணும்...' என, மூச்சுக்கு மூன்று முறை, 'தம்பி' போட்டு பேசச் சொல்லுங்கள்; நிஜமாகவே தம்பிகளாக மாறிவிடுவர்!க.விக்ரம், சிறுகடம்பூர்: என் நண்பனுக்கு வங்கியில் கடன் தர உள்ளனர்; அவனுக்காக கேரன்டி கையெழுத்துப் போடுவது நல்லதா, கெட்டதா?நண்பனுக்கு உதவுவது நல்லது தான்; ஆனால், அது கேரன்டி கையெழுத்து போடுவதன் மூலம் இல்லாமல், உங்கள் கையில் இருந்தே ( காசு இருந்தால்) கொடுத்து விடுங்கள். பின்னாளில் கடன் வாங்கியவர் திரும்பக் கொடுக்க முடியாமல், கேரன்டி கையெழுத்து போட்டவர் பிரச்னையில் சிக்கிக் கொண்டதை நிறைய பார்த்திருக்கிறேன். இதனால், நண்பர்கள், எதிரிகளாவதும் உண்டு.என். முபாரக் அலி, கண்டி: என் நண்பன் வேலை தேடி சென்னை போகிறான்; அவனுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...நான்கு மாநிலங்களில் உள்ள ஏமாற்று பேர்வழிகள் ஒருங்கே சங்கமித்து, ஓஹோ என, பிழைப்பு நடத்தி வரும், 'மா'நரகம் சென்னை என்பதை மனதில் வைத்து புறப்படச் சொல்லுங்கள்!ஜெ.ஆர்.டி.ரகுராமன், திருவொற்றியூர்: சுடும் என்று தெரியாமல், நெருப்பில் சுட்டுக் கொண்டு அழுகிறது, குழந்தை. கையைக் கடிக்கும் என்று தெரிந்தும், பல புதிய பத்திரிகைகள் முளைத்து கொண்டிருக்கின்றனவே...புதிதாக வரும் பத்திரிகைகள் இப்போது, 20 அல்ல 25 ஆயிரம் பிரதிகள் விற்றாலே, கையை பிடிக்காமல் நடத்தி விடலாம் என்று, புது சித்தாந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உதவி செய்து, வழி வகை செய்வது, 'டெக்னாலஜி' அச்சுத் துறையில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றம்!ஜெ.மனோகரன், பொள்ளாச்சி: அதிர்ஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?சோம்பேறிகளுக்கு சொந்தமான ஒரு சொல் என்பது என் எண்ணம்!ஐ.பிரேம் நசீர், சிதம்பரம்: இதுவரை உம்மை, 'சைட்' அடித்த பெண், திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் உம் கண் எதிரே மற்றொருவரை, 'சைட்' அடித்தால், உம் மனம் எவ்வளவு பாடுபடும்; சீரியசாக கேட்கிறேன்... நன்கு சிந்தித்து பதில் செல்லும்...இதுவரை சும்மா, 'சைட்' தானே அடிச்சாங்க. 'நான் உன்னை காதலிக்கிறேன்; நீ இல்லாமல் என் வாழ்வு இல்லை...' என, எந்த வசனமும் பேசவில்லையே...காய்கறி கடையில் கத்திரிக்காய் பார்க்கிறோம்... நல்லா இருப்பது போல் தெரிகிறது; வாங்கலாம் என நினைக்கும் சமயம் பக்கத்து கடைக்கு எதிர்பாராமல் கண் செல்கிறது. இந்தக் கடையை விட, அந்தக் கடையில், 'பிரஷ்' கத்திரிக்காய்கள் இருப்பதாக தெரிகிறது. என்ன செய்வோம்?'சைட்' அடிப்பதை எல்லாம் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !