அந்துமணி பதில்கள்
எம்.பழனிச்சாமி, கோவை: தொழிலாளர்களை நிர்வகிப்பதில் தகுதி பெற, எந்தெந்த புத்தகங்களைப் படிக்கலாம்?'எந்த புத்தகத்தையுமே படிக்கத் தேவையில்லை...' என்கிறார், இந்தியாவின் தலைசிறந்த கம்பெனி நிர்வாகிகளில் ஒருவர்... 'கடுகடுப்பை கைவிடுங்கள்; இன்முகம் காட்டுங்கள் போதும். தொழிலாளர்களின் இதயத்தில் இடம் பிடித்து விடலாம்...' என்று கூறுகிறார்; முயன்று பாருங்களேன்!வி.ரேவதி, சென்னை: 'டிவி' சீரியல்களில் சிக்கி தவிக்கிறேன்... எப்படி மீள?கொஞ்ச காலத்துக்கு, 'டிவி'யைத் தூக்கி பரணில் போடுங்கள். சீரியல் ஒளிப்பரப்பாகும் நேரத்தில் நெஞ்சம் படபடக்கத்தான் செய்யும். அப்போது, 'டிவி' ஒளிபரப்பு ஆரம்பமாகாத காலத்தை நினைவுக்கு கொண்டு வந்து, பயனுள்ள புத்தகத்தில் மூழ்குங்கள் அல்லது வீட்டு வேலைகளில் நாளை பார்த்துக் கொள்ளலாம் என ஒத்தி போட்டவைகளில் ஈடுபடுங்கள்... சீரியல் பைத்தியம் ஓடிப்போயிடும். இதெல்லாம் பழக்க தேஷம் தான்!வி.டி.ஜெயசீலி, திருவொற்றியூர்: மதிய உணவிற்குப் பின் குட்டி தூக்கம் போடலாமா?கூடாது; அதற்கு பதிலாக, 10 நிமிடம் எந்த வேலையும் செய்யாமல், 'ஹாயாக' உட்கார்ந்து இருக்கலாம் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குட்டித் தூக்கம் பலரை குண்டாக்கி விடுமாம்!எம்.வேணுகோபாலன், அனுப்பானடி: ஒரு எழுத்தாளரின் படைப்பை, அது இலக்கியமா, இல்லையா என்று முடிவு சொல்வது யார்?இலக்கியமுன்னா என்னாங்க? இந்தக் கேள்வியை நான் கேட்காத எழுத்தாளர், படைப்பாளி இல்லை. இதுவரை, யாரும் நான் ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை தரவில்லை. படமில்லாமல் கொச கொசவென எழுத்துக்கள் மட்டுமே நிறைந்து உள்ள பத்திரிகைகளில், கட்டுரையை போன்று கதைகள் எழுதுபவர்கள், தங்களை இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்வதுடன், எது இலக்கியம், எது இலக்கியமில்லை என்றும் கூறுகின்றனர்.எம்.ராஜசிம்மன், வீரபாண்டி: சினிமா பார்ப்பது கெடுதல் என்கிறீர்களா?இல்லை; எப்போதாவது வெளியாகும் நல்ல படங்களைப் பாருங்கள்; கெடுதல் இல்லை. கண்ட படங்களையும் பார்த்து, அதைப் பற்றியே பேசி, பித்துப் பிடித்து அலைவதும், தமக்கு பிடித்த நடிகர், நடிகை என்று எவரையாவது சொல்லி, அவரை விட சிறந்தவர் எவரும் இல்லை என்று, சண்டை போட்டுக் கொள்வதும் தான் கெடுதல்!கே.கனகவேல், நத்தம்: வருமானத்திற்கு தக்கவாறு செலவை வைத்துக் கொள்ள வேண்டுமா, செலவுக்கு தக்க வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டுமா?முதல் வகையினர் புத்திசாலிகள்; இரண்டாம் வகை ஆசாமிகள் சாமர்த்தியசாலிகள். இரண்டும் இல்லாமல், கடன் வாங்கி செலவு செய்பவர்கள் ஊதாரிகள், ஏமாளிகள், தற்பெருமை பிடித்து அலைபவர்கள்!பொ.சுகுமாறன், கடலாடி: பட்டப் படிப்பெல்லாம், இனி, வேலை வாய்ப்பிற்கு உதவாது என்கின்றனரே... அப்படியா சார்?உண்மை தான்; புரபஷனல் கோர்ஸ் படித்தவர்கள் கூட வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பிளஸ் 2 முடித்த கையோடு, ஏதாவது தொழில் கற்று, ஒவ்வொருவரும் சொந்தக் காலில் நின்றால் தான், இனி பிழைக்க முடியும்!ஆர்.ரக் ஷனா, ஆர்.எஸ்.புரம்: நான் சுகமாக வாழ எப்படி நடந்து கொள்ள வேண்டும்?உங்களிடம் கோப குணம் இருந்தால், அதை எப்பாடுபட்டேனும் விரட்டி அடியுங்கள். கோபமுள்ளவர்களிடம் எப்போதும் கவலை இருந்து கொண்டே இருக்கும்; கவலை உள்ளவர்களால் சுகமாக வாழ முடியாது!