அந்துமணி பதில்கள்...
பொ.ராஜேஷ்கண்ணன், அனுமந்தன்பட்டி: எங்கள் ஊரில், குடிசை வீடுகளில், இன்னும் அரிக்கேன் மண்ணெண்ணெய் விளக்குகள் உள்ளன. 'அரிக்கேன்' என்றால் என்ன என்று பலரிடமும் கேட்டு விட்டேன். ஒருவருக்கும் அர்த்தம் தெரியவில்லையே...'அரிக்கேன்' என்றால், பலத்த காற்று என்று பொருள். அதாவது, மணிக்கு, 120 கி.மீ., வேகத்துக்கு மேல் காற்று வீசினால், அதை, 'அரிக்கேன்' என, அழைக்கின்றனர். அந்த பேய் காற்றில் கூட, இந்த விளக்கு அணையாதாம்... அதனால், அதற்கு இந்த பெயர்.கே.எல்.லத்தீப், ராமேஸ்வரம்: கிடைத்த வேலையை, 'கப்' என்று பிடித்துக்கொள்வது, படிப்புக் கேற்ற வேலை கிடைக்கும் வரை காத்திருப்பது... எது சரி?முதலாவதே சரி; இன்று, பல இன்ஜினியரிங் பட்டதாரிகள் இதே முடிவையே எடுக்கின்றனர். தாம் தேர்வு செய்யும், தம் படிப்புக்கு தொடர்பில்லாத துறையில், முன்னுக்கும் வந்து விடுகின்றனர். கால விரயம் என்பது, தேச துரோகம்!ஆர்.வெங்கடேஷ், நீலகரி: திருமணமான பின், 'செக்ஸ்' மீது மோகம் குறைந்துவிடும் என்கிறானே திருமணமான என் நண்பன்...டாக்டர் நாராயண ரெட்டியின் ஆராய்ச்சி முடிவுகள் உங்கள் நண்பரின் ஸ்டேட்மென்ட்டை நிரூபிப்பது போல உள்ளது. திருமணமாகி, இரு ஆண்டுகள், மிகுந்த வேகத்துடன் இருக்கின்ற னராம்; மாதத்தில் சராசரி, 20 முறையும், ஐந்து ஆண்டுகள் ஆகும் போது, 15 தடவையும், ஆறாவது ஆண்டிலிருந்து, 10 முறை உறவு கொள்வது என, குறைகிறது என்கிறது ரெட்டியின் ஆராய்ச்சி!எம்.பிரசன்னா, குமுளி: பெண்களுக்கு எதிரான கொடுமை, நம்மை ஆண்ட வெள்ளைக்கார நாட்டில் இருக்கிறதா?ஏன் இல்லாமல்... லண்டனில் உள்ள, 'ஈக்குவல் ஆப்பர்ச்சுனிட்டீஸ் கமிஷன்' சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த அறிக்கையில், ஆண்டுக்கு, 30 ஆயிரம் பெண்கள் சராசரியாக வேலையில் இருந்து தூக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளது. காரணம் என்ன தெரியுமா? அவர்கள் கர்ப்பம் அடைவது தான். நம் நாடு எவ்வளவோ மேல் அல்லவா!க.சித்தார்த், ஆவடி: உலகில், குற்றவாளி, மிகக் கொடிய குற்றவாளி என, எவர், எவரை வகை பிரிக்கிறீர்கள்?பொய் சாட்சி சொல்கிறவன் குற்றவாளி; நீதி தேவதையின் முன், பொய் சாட்சி சொல்ல அனுமதிப்பவனோ மிகக் கொடிய குற்றவாளி; இவன், சகல துன்பங்களையும் அனுபவித்து பின், 'போய்' சேருவான்!ம.சூரியகாந்த், நங்கநல்லூர்: திடீரென சிலர், பெரிய மனிதத் தோற்றம் அடைந்து விடுகின்றனரே... எப்படி?தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பவை சில நாளிதழ்கள். பிளாட்பாரத்தில், அண்டர்வேரும், ஜாக்கெட் பீசும் விற்றவனை, சினிமா கம்பெனிக்கு, சாப்பாடு தூக்கிச் சென்றவனை எல்லாம், 'ஆ... ஊ...' என, தமிழ் சேவை செய்பவர்களாக சித்தரித்து, படம் எடுத்து, பெரிய எழுத்தில் செய்தி வெளியிட்டு, பெரிய மனித தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இது, நாட்டிற்கோ, தமிழர்களின் உண்மையான முன்னேற்றத்துக்கோ உகந்தது அல்ல! ப.ஈஸ்வர், திருவான்மியூர்: 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்று நினைக்கும் எனக்கு, நன்மையே நடப்பதில்லையே...நன்மையில்லா விதத்தில், கை, கால், கண் ஏதும் போகலியே... நீங்கள் குடி இருக்கும் வீடு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படவில்லையே... நீங்கள் பார்க்கும் வேலை பறிபோய் விடவில்லையே... இதெல்லாம் இல்லாமல் இருப்பதே நன்மை தானே! இப்படிப்பட்ட சிந்தனைக்கு மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்!