அந்துமணி பதில்கள்!
ஆர்.நவீன், சிதம்பரம்: அந்துமணியார், 'வாட்ச்' கட்டுவதில்லையே... ஏன்?'ஓ.சி'யில் கிடைத்த, 'சிட்டிசன்' வாட்ச் ஒன்று, சிறுவயதில் இரண்டு நாள் கட்டிப் பார்த்தேன். ஏதோ அன்னியப் பொருள் இடது கையை உறுத்திக் கொண்டே இருப்பது போன்ற தர்மசங்கட உணர்வு, அந்த இரண்டு நாட்களும் இருந்ததால் தொடர்வதில்லை! கடிகாரம் இல்லாமலேயே கிட்டதட்ட சரியான நேரத்தை உள்ளுணர்வு சொல்லிவிடும் எனக்கு! * வி.தனபால், திருவள்ளூர்: திருமணத்திற்கு பின் முந்தைய காதலி பற்றி, மனைவியிடம் சொல்லலாமா?தெளிந்த நீரோடை போல செல்லும் மண வாழ்வில், தேவையில்லாமல் கல்லை எறிந்து ஏன் குழப்பத்தையும், மனைவி மனதில் சஞ்சலத்தையும் உருவாக்க வேண்டும்... வாயை மூடிக் கொண்டு, 'அக்கடா' என இருங்கள்!டி.செல்வன், திருப்பூர்: பூட்டுகளின் சாவி துவாரங்களுக்கு மேல், '6 லிவர், 7 லிவர்' என்றெல்லாம் போடுகின்றனரே... அதன் பொருள் என்ன?இவை எல்லாம் பூட்டினுள் எத்தனை தாழ்பாள்கள் உள்ளன என்பனவற்றை குறிக்கின்றன. சாவியில் உள்ள பற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தாழ்பாளையும் ஒரே நேரத்தில் திறக்கும்; பூட்டு திறந்து கொள்ளும்!* பி.ராமு, மதுரை: எதற்கெடுத்தாலும் கவலை கொள்கிறேன் நான்...இப்போது மன அமைதி இல்லாமல் இருப்பீர்கள்; இன்னும் கொஞ்ச காலத்தில் உங்கள் உடல் அமைதி கெட்டு விடும். அதன்பின், குணசீலம் கோவில் துாண்களுடன் எப்போதும் பேசிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்! இந்நிலை வர வேண்டுமா, யோசியுங்கள்; வகைப்படுத்துங்கள். கவலை இருந்த இடம் தெரியாமல் பறந்து போகும்!எம்.லதா, திருவண்ணாமலை: பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர் எல்லாம் இப்போது குண்டு, குண்டாக இருக்கின்றனரே...உண்மைதான்! பள்ளி செல்லும் பிள்ளைகளில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குண்டாக இருக்கின்றனராம்! இது, கருவுற்று இருக்கும் தாய்மார்களுக்கு அலோபதி டாக்டர்கள் கொடுக்கும் கண்ட, கண்ட மருந்துகளால் ஏற்படும் கோளாறு என்கின்றனர்! அதுவும் போக, குளிர்பானங்கள், சாக்லேட், உருளை சிப்ஸ், சீஸ் போன்றவைகள் சமீபத்தில் படையெடுக்கும், 'குண்டு'க்கு காரணிகளாக அமைகின்றன.* எஸ்.நல்லதம்பி, சிவகங்கை: என் தந்தை இறந்து விட்டார். என் பங்கு சொத்தாக கணிசமான தொகை கிடைத்துள்ளது. ஒரு சினிமாப் படம் எடுக்க ஆவல்... உங்கள் கருத்து என்ன?கெட்டுப் போவதோடு மட்டுமில்லாமல், நஷ்டப்பட்டும் போவீர்கள். பழக்கமில்லாமல், பணத்தோடு படத் தொழிலில் இறங்கிய பலர் பாழாய் போயுள்ளனர்! வேறு தொழிலில் இறங்குங்கள். தெரியாது என்றால், வங்கியில், 'பிக்சட்' டிபாசிட்டில் போட்டுவிட்டு, 'ஹாயாக' இருங்கள்!