உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* ஏ.எஸ்.யோகானந்தம், சென்னை:நான் எது செய்தாலும், 'இது சொள்ளை... இது நொள்ளை' என, என் நண்பன் கூறுகிறான். என்னுடைய எந்த செயலையுமே அவன் பாராட்டுவதில்லை... இது ஏன்?உங்கள் நண்பர், குறை உள்ளவர். அவரால் உங்களைப் போல் செயலாற்ற முடிவதில்லை. அவர் ஏற்கும் பணிகள் அனைத்திலும், தோல்வி காண்பவராய் இருக்கிறார். அதனாலேயே உங்களைப் பாராட்டுவதில்லை. குறையுள்ளவர், பிறரை பழிக்கும் குணம் கொண்டிருப்பர். இதுபோன்றோரை ஒதுக்கி தள்ளுங்கள். அவர் கூற்றை, மதிக்காதீர். கே.வி.கோபாலகிருஷ்ணன், காஞ்சிபுரம்: தன் நேசிப்பை ஒரு பெண், ஆணிடம் கூறலாமா?இங்குள்ள ஆண் மகன்களில், 10 சதவீதம் மட்டுமே, 'ஜென்டில்மேன்'கள்! நேசிப்பை முதன் முதலில் ஒரு பெண் சொன்னால், நேசிக்கப்படும் நபர், 90ல் ஒருவராக இருந்து விட்டால், பெண்ணுக்கு மானக்கேடு வந்துவிடும்! எனவே, அதிக கவனம் கொள்ள வேண்டும்! தீபா ஆதித்யாநாதன், ராஜபாளையம்: உலகத்தில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நான் மட்டுமே துயரத்தில் மூழ்கி இருப்பதாகவும், ஒரு உணர்வு... இது எதனால்?சுய பச்சாதாபம்! எப்படியாவது பயனுள்ள வகையில், உங்களை, 'பிசி'யாக வைத்துக் கொள்ள முயலுங்கள்... அதற்கான வழிமுறைகளை கண்டு, நேரமே இல்லை என்ற நிலைக்குச் செல்லுங்கள்... இந்த உணர்வு ஓடிப் போய்விடும்!என்.செல்வராஜ், பொள்ளாச்சி: சாதனையாளர்களைப் பற்றி, பத்திரிகைகளில் படிக்கும்போது ஏற்படும் பொறாமை ஒரு புறம்... குடும்பத்தின் வறுமையை எண்ணி, நம்மால் முடியவில்லையே எனும் இயலாமை மறுபுறம்... இரண்டும் மனதை வாட்டுகிறதே...சாதனை புரிந்தவர்களின் பின்னணியைப் பாருங்கள்... பெரும்பாலும் வறிய பின்னணியை கொண்டவர்களாக இருப்பர். வறுமை தான், முன்னேற்ற ஆசையை, சாதனை புரிய வைக்கும் உந்துதலைக் கொடுக்கும் துாண்டுகோல்... இயலாமையை எண்ணி சோர்வடையாமல், முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்! வி.தினேஷ், கோவை: வஞ்சிக்கும் நண்பர்களை, முன்னரே அடையாளம் காண்பது எப்படி?கண்கள் இருக்கின்றனவே... அவை கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும்!* இ.ஜெயமணி, விழுப்புரம்: மற்றவர்களின் அறுவையிலிருந்து மீள, நிறைய வழி சொல்கிறீர்கள்... மற்றவர்களை நாம் அறுப்பதை, எப்படி தெரிந்து கொள்வது?நாம் அறுக்கும்போது, எதிராளி, 'திருதிரு'வென விழிப்பார்; அக்கம் பக்கம், மேலே, கீழே பார்ப்பார்; அசுவாரசியம் காட்டுவார்; நம்மை திசை திருப்ப, வேறு, 'சப்ஜெக்ட்' பேச முயல்வார்; 'அவசர வேலை இருக்கு, அப்புறம் பார்ப்போமா...' என்பார்... இவ்வளவு குறிப்புகளையும் நாம் உணராமல் தொடர்ந்து, 'பிளேடு' போட்டால், அடுத்த முறை, நம் தலை தெரிந்தால், தப்பி ஓடி விடுவார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !