அந்துமணி பதில்கள்
* ப.த.தங்கவேலு, பண்ருட்டி: 'டிவி' சேனல்களில் இடம்பெறும், 'விவாத மேடை' நிகழ்ச்சிகளை பார்ப்பீர்களா?ஒவ்வொரு மனிதனுக்கும் திரும்பக் கிடைக்காதது எது என்பது, உங்களுக்கு தெரிந்து இருக்கும்... அது - நேரம்! அதைத் தொலைக்க நான் விரும்புவதே இல்லை! க.ராஜேந்திரன், மதுரை: நீங்கள் எழுதிய கருத்துக்கள், புத்தகமாக வரும் அளவிற்கு வந்து விட்டீர்கள்... இதற்கு காரணம், அதிர்ஷ்டமா, உழைப்பா, இறைவன் அருளா, உங்கள் ஜாதகத்தின் விசேஷமா?இவற்றில் எதுவும் இல்லை!அந்த, நுாலாசிரியர் லட்சுமியின் பிடிவாதம்! நம் நாளிதழின், செய்தித் துறை, உதவி ஆசிரியை அவர். மூன்று ஆண்டுகளாக, என்னைப் பற்றி புத்தகம் எழுத வேண்டும் என, பிடிவாதம் பிடித்து வந்தார்... கடைசியில், ஓ.கே., சொல்லி விட்டேன்!பத்ம.சிவாஜி, கோவை: 'பாத்ரூமில்' குளிக்கும்போது, பாட்டு பாடும் பழக்கம் உங்களுக்கு உண்டா?எனக்கு தான் பாட்டை, முணு முணுக்கக் கூட தெரியாதே... குட்டி, 'டிரான்சிஸ்டர்' அல்லது இப்போது, புதிதாக வந்துள்ள, 5,000 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ள, 'கார்வானை' எடுத்துச் சென்று விடுவேன்... பிறகென்ன! * நா.உன்னிகிருஷ்ணன், மேட்டுப்பாளையம், கோவை:இன்றைய அரசியல்வாதிகளுக்கு, தொலை நோக்கு பார்வை மிகவும் குறைவு என்கிறாரே, என் நண்பர்...அவர் கூறுவது தவறு... ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது, தம் அடுத்த தலைமுறையினருக்கு பல ஆயிரம் கோடி எப்படி சேர்த்து வைப்பது என்பதில் எல்லாம், தொலை நோக்கு பார்வை இல்லாமலா உள்ளனர்...அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உறவு தொடர வேண்டும் என்பதால் தானே, எம்.ஜி.ஆர்., உருவம் பதித்த, பண நாணயங்களை, மத்திய, பா.ஜ., அரசு வெளியிட்டுள்ளது... இது, தொலை நோக்கு பார்வை இல்லையா? சி.ரகுபதி, திருவண்ணாமலை: ஏகப்பட்ட புதிய ரக வெளிநாட்டு, நான்கு சக்கர வாகனங்கள், நம் நாட்டிற்கு வந்து விட்டனவே... இங்கிருந்த, 'அம்பாசிடர்' காரின் கதி என்ன?இப்போதும் ஓடிக் கொண்டிருக்கின்றன... குறிப்பாக, அரசு அதிகாரிகளிடம்! ஆனால், வாகனத்தை இயக்கும் இயந்திரத்தின் நிஜமான பாகங்கள் கிடைக்காததால், அதை மாற்றி விட்டனர்!புதிதாக வரப்போகும், 'அம்பாசிடரின்' படத்தையும், செயல்பாடுகள் பற்றியும் படித்தேன்... வியந்து போனேன்; வெளிநாட்டு வாகனங்களை ஓரம் கட்டிவிடும் போலுள்ளது!* வி.வாசுதேவன், கோவை: ரஜினிகாந்த் எப்போது தான், அரசியலுக்கு வருவார்?அரசியலில் இப்போது உள்ளவர்கள் போல அவர் இல்லை; சினிமாவில் பல கோடிகளை பார்த்து விட்டார்! தான் ஈட்டிய பணத்தை தொலைக்க விரும்ப மாட்டார். அரசியலுக்கு வருவதாக அவர் கூறுவதெல்லாம், தன் அடுத்தடுத்த படங்களை, வெற்றிகரமாக ஓட வைக்கத்தான்!