அந்துமணி பதில்கள்
இ. கஸ்துாரி, அகஸ்தியர்பட்டி, நெல்லை:'கொரோனா'வால், ஒவ்வொரு நாளும், தங்களுக்கு எப்படி கழிகிறது...ரொம்ப சுலபமாகி விட்டது. இப்போதெல்லாம், நம் அலுவலகத்தின் நாலாவது மாடியில் உள்ள, மலையாள, 'மெஸ்' அதிபர், அவரே டீ தயாரித்து வந்து வினியோகம் செய்து விடுகிறார்... வேலை மிச்சம் ஆகிவிட்டது அலுவலகத்தில்!* என். சொக்கலிங்கம், திருச்சுழி, விருதுநகர்: ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்த, அரசு அதிகாரிகளை, பணி மாற்றம் செய்தால் மட்டும் திருந்தி விடுவரா?முதலில், பணி நீக்கம் செய்ய வேண்டும்; பின்னர், குறைந்தபட்சம், 10 ஆண்டுகள்,'கம்பி' எண்ண வைக்க வேண்டும்; இதைப் பார்த்தாவது இவர்களைப் போன்றோர் திருந்துவர்!இந்து குமரப்பன், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கேள்வி:இப்படியே ஆண்டு முழுவதும், 'டாஸ்மாக்' கடைகளை மூடி வைத்தால், எப்படி இருக்கும்?இந்த பதில் எழுதும் வரை, 'சரக்கு' கிடைக்காததால், மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இது, இன்னும் அதிகரிக்கும்! கள்ளச்சாராயம் பெருகும்; இது தவிர, 'பிசா' - போதை, புகையிலை, வெற்றிலை வியாபாரம் அதிகரிக்கும்!* வி. பாலகிருஷ்ணன், மதுரை: லஞ்சம், ஊழல் இல்லாத அரசு அமைவது சாத்தியமா?வரும், 2021 தேர்தலில், ரஜினி வந்தால், தமிழகத்தில் சாத்தியம்! மத்தியில் தான், நீங்கள் சொல்லும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளதே!ஜி. விஜயாசாய், திருத்தங்கல்: ஓவியம் நன்றாக வரைவேன், நான்; அதில் சாதனை புரிய என்ன செய்ய வேண்டும்?முதலில் பத்திரிகைகளில் உங்கள் ஓவியம் வெளியாகட்டும்; அடுத்து, தேசிய அளவில் எத்தனையோ போட்டிகள் இருக்கின்றன! முதலில், உங்களுக்கு, 'வாரமலர்' இரண்டு தமாஷ்களுக்கு படம் வரைய, பொ.ஆ.,விடம், 'ரெக்கமண்ட்' செய்யட்டுமா?* எஸ். மங்கையர்கரசி, நெய்வேலி: எதிர்க்கட்சி தலைவர்கள், தினம் ஓர் அறிக்கை விட்டால் தான், தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என, நினைக்கின்றனரா?உண்மை தான்! தங்கள் படத்துடன் பத்திரிகைகளில் அறிக்கை வெளியாக வேண்டும்... 'டிவி'க்களில் தங்கள் அறிக்கை படத்துடன் வரவேண்டும்... அப்போது தான் மக்கள் மறக்க மாட்டார்கள் என, நினைக்கின்றனர்!(ஒரு உண்மை சொல்லட்டுமா, இவர்கள் அறிக்கை, பேச்சுக்களை எழுதித் தர, தனி ஆட்களை வைத்துள்ளனர்!)