அந்துமணி பதில்கள்
* பி.வி. மோகன், மானா மதுரை: தம்பதியர் சண்டையில், யார் முதலில் விட்டுக் கொடுக்க வேண்டும்?கணவர் தான், அடங்கிப் போக வேண்டும்! பெண்கள், பெரும்பாலும் அனாவசிய சண்டை செய்யாதவர்கள்; விரும்பாதவர்கள்! முதலில் அடங்க வேண்டியது, கணவர்கள் தான்!மாணிக்கம், பொள்ளாச்சி: என் நண்பர்கள் எப்போதும், என், 'மணிபர்சின்' மீதே கண் வைத்துள்ளனர். அவர்களை சமாளிப்பது எப்படி?அவர்களை ஏன் நண்பர்களாக கருதுகிறீர்கள்... 'சியூடி' போடுங்கள்; மனம் நிம்மதியாகும்!* தி.செ. அறிவழகன், திருப்புலிவனம், காஞ்சிபுரம்: 'கொரோனா'வை, ஆயுர்வேத, சித்தா மருந்துகளால் குணப்படுத்த முடியாதா? இதில், மத்திய - மாநில அரசுகள், கவனம் செலுத்தாதது ஏன்?மத்திய - மாநில அரசு அதிகாரிகள் எல்லாம், 'அலோபதி'யைத் தான் நம்பி இருக்கின்றனர்; அவர்கள் சொல்வதையே அரசுகளும் கேட்கின்றன!எனக்கு தெரிந்து, ஆறே நாட்களில், ஆயுர்வேத சிகிச்சையில் வெளி வந்தோர் ஏராளம்!* வெ. ராம்குமார், வேலுார்: பத்திரிகை மற்றும் சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?இந்த, 'கொரோனா' காலத்தில் பல வீடுகளுக்கு, கடைகளுக்கு பத்திரிகைகள், 'சப்ளை' செய்யப்படுவதில்லை என்றாலும், விற்பனை கூடியிருக்கிறது. சினிமா மற்றும் தியேட்டர்களின் எதிர்காலம் தான் கேள்விக்குறியாக உள்ளது!கே. முத்துலட்சுமி, தொண்டி, ராமநாதபுரம்: கணவர் உடன் வரும்போதே, தெருவில் பல ஆண்கள், 'ஜொள்ளு' விடுகின்றனரே... இவர்களிடமிருந்து தப்புவது எப்படி?கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு, பிளாட்பாரத்தை விட்டு கண்ணை எடுக்காதீர்கள்! 'ஜொள்ளு' காணாமல் போகும்! பா. சண்பகவல்லி, மாயவரம்: 'கொரோனா' காலம் முடிந்ததும், சட்டசபை தேர்தல் அலப்பரை துவங்கிடுமே... மறுபடி இலங்கை தமிழர் உட்பட அனைத்து விஷயங்களையும் அரசியல்வாதிகள் பேசத் துவங்கி விடுவரே... போரடிக்குது, அந்து! உங்கள் பதில்?அரசியல்வாதிகள் அனைவரும், அரைத்த மாவையே, திரும்பத் திரும்ப அரைக்கின்றனர். இலங்கையில், போரில் மாண்டவர்களின் மனைவியர் நிறைய பேர், விதவையாய் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, அவர்களின் குழந்தைகளை படிக்க வைக்க என, நம்மூர் அரசியல்வாதிகள் யாரும், துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.வெறும், 200 ரூபாய், குவாட்டர் மது மற்றும் பிரியாணியில் மயங்கும் பழக்கத்தை, நம் மக்கள் கைவிட்டால் தான், தமிழகம் இனி பிழைக்கும்!