உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* ஜி. ராஜா, திருப்பூர்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமான வரித்துறையின், 'ரெய்டு' பழி வாங்கும் நடவடிக்கையா?இல்லை! தவறு செய்தவர்கள் எவர் என்றாலும் அவர் மீது நடவடிக்கை பாய வேண்டும். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டதால் தானே, ஜெயலலிதாவும், சசிகலாவும் பெங்களூரு சிறையில் கம்பி எண்ணினர்! ச. ஜான்பிரிட்டோ, திண்டுக்கல்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இருவரின், பிரதமருடனான, 'திடீர்' சந்திப்பின் பின்னணி என்ன?உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கும் முயற்சி இது என, செய்தியாளர்கள் சொல்கின்றனர்!ஜி. குப்புசுவாமி, சென்னை: ஒரு அஞ்சல் அட்டையில், எத்தனை கேள்விகள் எழுதலாம் சார்?நீங்கள் வழக்கமாக மூன்று கேள்விகள் தான் எழுதுவீர்கள்; ஆனால், சிவாஜி மூக்கையா என்ற சென்னை வாசகர், குட்டி குட்டி எழுத்துகளில், தபால் அட்டையின் முகப்பிலேயே, 10 கேள்வி எழுதி விடுவார்; அதுவும் தினமும் நாலு அட்டை; சுற்றி விடும் தலை!எம். சாந்தி, சென்னை: தமிழகத்தில் மீண்டும் மேல் சபை வந்தால், யாருக்கு பலன்?பலன் கிடைக்குமே! நமக்கல்ல... அரசியல்வாதிகளுக்கு! கட்சியில், ஆட்சியில் யார் யாருக்குப் பதவி கிடைக்கவில்லையோ, அவர்கள் அனைவரும் மேல் சபையில் உறுப்பினர் ஆகலாம்; எம்.எல்.ஏ., போலவே சம்பளமும் உண்டு; அரசு வீடு கேட்பர், கிடைக்கும்; பி.ஏ., கேட்பர், பி.ஆர்.ஓ., கேட்பர்... எல்லாம் கிடைக்கும்; கொழிக்கலாமே! 'கெத்'தாய், 'பொலீரோ, இன்னோவா' கார்களில் வலம் வரலாமே! வழக்கம்போல, நமக்கு ரேஷன் அரிசியும், பற்றாக்குறைக்கு ஈரத் துணியும்!* கே. பக்தவச்சலம், காஞ்சிபுரம்: பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, முதல்வராக வாய்ப்புள்ளதா?ஓ... உள்ளதே! அவரது கனவில் மட்டுமே! ஆர். ஜெயலட்சுமி, நெல்லை: ஆடித் தள்ளுபடியில் அள்ளினீர்களா?மொத்தம் ஐந்து பொருட்கள் அள்ளினேன்... 50 சதவீத தள்ளுபடியில்! ஆனால், அவை என்னவென்று கேட்காதீர்கள்!ந. சண்முகம், திருவண்ணாமலை: தமிழகத்தில் தலைவிரித்தாடும், 'டாஸ்மாக்' பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிறாரே, பா.ம.க., ராமதாஸ்...முடியவே முடியாது! 'டாஸ்மாக்' மூடியிருந்த நேரத்தில் எவ்வளவு கள்ளச்சாராயம், கஞ்சா, போதை ஊசி பெருகியது என்பதை, செய்தித் தாளில் படித்திருப்பீர்கள் தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !