அந்துமணி பதில்கள்
** பி.ராஜேஸ்வரி, சென்னை: எங்கள் பக்கத்து வீட்டில் இரவு, பகல் என நேரம் பாராது, 'ஓ'வென, 'சிடி'யில் பாடல்கள் போட்டு, 'டிஸ்டர்ப்' செய்கின்றனர். கல்லூரி மாணவியான என் படிப்பு இதனால் கெடுகிறது. இச்சிக்கலில் இருந்து மீள வழி சொல்லுங்களேன்...பக்கத்து வீட்டுக்காரர்களிடம், 'ரிக்வஸ்ட்' தான் செய்து கொள்ள முடியும். வேண்டுதலுக்கு அவர்கள் செவி மடுக்கவில்லை என்றால், வீட்டை மாற்றிக் கொள்ளவா முடியும்? 'சிடி' பாடுவதை, 'இக்னோர்' செய்யுங்கள்.அந்த சப்தத்தை அழுத்தும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்றைய உலகில், 'காம்ப்ரமைஸ்' செய்து, வாழ கற்றுக் கொண்டால் தான், சுலபமாக இருக்கும் வாழ்வு!****சு.சரவணன், மதுரை: காதலித்து விட்டு, திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, மணமேடையில் பெண் காத்திருக்க, கம்பி நீட்டும் மாப்பிள்ளைகளை தேடிப் பிடித்து, போலீஸ் துணையுடன் அவர்களையே கைப்பிடிக்கும் பெண்களைப் பற்றி...துணிச்சல் மிக்க கெட்டிக்காரப் பெண்கள்! ஊருக்கு நாலு பெண்கள் இப்படி இருந்தால் போதும். காதலித்து, காரியம் முடிந்ததும் கம்பி நீட்டும் ஆண் சிங்கங்களை கூண்டில் அடைத்து வேடிக்கைக் காட்டலாம்!****ப.பரமசிவம், ராஜபாளையம்: தன் வீட்டுக்காரர் எவ்வளவு சம்பாதித்துக் கொடுத்தாலும், அடுத்த வீட்டுக்காரியின் கணவனை புகழ் பாடும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அடுத்த வீட்டுக்காரியின் கணவரை, இவர் மனைவி புகழ்கிறாள் என்றால், அடுத்த வீட்டுக்காரர் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பாங்கு, மனைவி, குழந்தையிடம் அவர் காட்டும் அன்பு, அரவணைப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம்! பணம் மட்டுமே திருப்தியைத் தந்து விடாது!**** டி.பசுபதி, திண்டுக்கல்: மன நிம்மதியோடு வாழ, ஒரு வழி சொல்லுங்களேன்?அடுத்தவரின் நல்வாழ்வு கண்டு பொறாமைப்படும் குணத்தை ஒழியுங்கள். தானே தேடி வரும் மன நிம்மதி!****டி.எஸ்.நாகராஜன், நங்கநல்லூர்: நாம் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நம்மைப் பேச விடாமல், அவர்கள் புராணத்தையே பாடி அறுப்பவர்களைப் பற்றி?இப்படிப்பட்ட ஆசாமிகளை என்ன சொல்லியும் திருத்த முடியாது. சிறிது நேரம் ஹி... ஹி... என அசடு வழிந்து, பின், நைசாக, 'கட்' செய்து விடுவதே மேல்!****எஸ்.பானு, கோவை: கணவருக்குத் தெரியாமல், நான் தபால் அலுவலகத்தில் பணம் சேமிக்கிறேன்; அது தவறா?கணவன் கண் அயர்ந்த நேரத்தில், அவன், 'பாக்கெட்டில்' கை போட்டு, அதை சினிமா தியேட்டரில் கொண்டு கொட்டுவது தான் தவறு!***** எம்.ரங்கநாதன், புதுச்சேரி: காதலிக்காமல் ஆண், பெண் நட்பாக இருக்க சாத்தியமா?சாத்தியம் தான்... செக்ஸ் உட்பட எல்லா சப்ஜெக்டும் பேசினால் கூட, உடல் ரீதியான தொடர்பு இல்லாமல், நட்பாக இருப்பது சாத்தியம் என்பது பலரது அனுபவம் மூலம் இப்போதெல்லாம் உணர, தெரிந்து கொள்ள முடிகிறது என்னால்.***