அந்துமணி பதில்கள்!
கே.எம். பாரூக், சென்னை: 'பாட்னாவில் கூடினோம்: மகிழ்ச்சியாக திரும்பினோம்... அகில இந்திய அளவில், பா.ஜ., தோற்கடிக்கப்படும்...' என்று முதல்வர், ஸ்டாலின் கூறியுள்ளாரே...கூட்டம் முடிந்ததும், அங்கு சாப்பிடாமல் கூட, விமானத்திற்கு நேரமாகி விட்டது என, தனி விமானத்தில் திரும்பிய முதல்வர், பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வந்தது ஏன்? அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியை தவிர்ப்பதற்கு தானே!* பி.ஜெயகுமார், வந்தவாசி: 'இந்தியாவிலேயே தரமற்ற மது வகைகள், தமிழகத்தில் தான் இருக்கிறது...' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளாரே...மதுபானம் விற்பனையாகும் மாநிலங்கள் அனைத்திற்கும், இவரது கட்சி தொண்டர்கள் சிலரை அனுப்பி, சோதனை செய்து இருப்பார் போலும்! எஸ். ஜான், மதுரை: எனக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. என்னால், அனைத்தும் முடிக்க முடியவில்லை. யாரை நம்பி, பணிகளைக் கொடுக்க வேண்டும்?இந்த பணியை, இந்த காரணத்தால், இவர் செய்து முடிப்பதில் வல்லவர் என்பதை நன்கு ஆராய்ந்த பின்னரே, அப்பணியை அவரிடம் ஒப்படையுங்கள்... வெற்றி பெறுவீர்கள்! வி. திருமுகில், உளுந்துார் பேட்டை: ஆட்சிக்கு ஜால்ரா போடாததால், அரசு விளம்பரங்கள் தரப்படாமல் புறக்கணிக்கப்படும் நிலையிலும், விற்பனையில் நம் நாளிதழ், முதலிடத்தில் தொடர்வதன் ரகசியம் என்ன?வாசகர்களாகிய, முதலாளிகள் தான் காரணம்... அரசு விளம்பரங்களால், அவர்களுக்கு எந்த பயனும் இல்லை!க. கதிரேசன், சென்னை: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியாவின் 17 கட்சித் தலைவர்களை அழைத்து, 'வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்...' என்று கூறுகிறாரே... முடியுமா?எப்படி முடியும்... 17 கட்சித் தலைவர்களுக்கும்தான், பிரதமர் ஆசை இருக்கிறதே... சும்மா தமாஷ் செய்து கொண்டிருக்கிறார், நிதிஷ்குமார்!க. லதா, சென்னை: நடிகர் விஜய், அரசியலுக்கு லாயக்குபடுவாரா?எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின் எந்த சினிமாக்காரர்களும் அரசியலில் எடுபடவில்லை... அதே நிலை தான் விஜய்க்கும்!* க. மூர்த்தி, நெல்லை: நாம் யார் என்பது, நமக்கு எப்போது தெரியும்?சவால்களோடு போராடும் போது... சவால்களை சந்திக்கும் போது தான், நாம் யார் என்பது, நமக்கு தெரியும்!