அந்துமணி பா.கே.ப
மாநில அரசின் முக்கியத் துறை ஒன்றில் பணியாற்றும் அந்த அன்பர், பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, தம் டூ–வீலரில் வீட்டை நோக்கிச் சென்று இருந்திருக்கிறார்.வழியில் போலீஸ் செக்கிங்... 'ஐயா... வாயை ஊதுங்க...' எனக் கூறி, 'பிரெத் அனலைசரை' வாயின் முன் நீட்டி இருக்கிறார் ஒரு போலீஸ்காரர். அன்பர், 'பூ... பூ...' என லேசாக ஊதி இருக்கிறார்... வேகமாக ஊதினால், காட்டிக் கொடுத்து விடுமோ என்ற பயம்.போலீஸ்காரர்கள், எம கிங்கர்களாயிற்றே... எத்தனை கில்லாடிகளைப் பார்த்து இருப்பர்!'இன்னா... பூ, பூன்னு செல்லம் கொஞ்சுறே... நல்லா ஊது மேன்...' என போலீஸ்காரர் சப்தம் போடவும், இவர் வேகமாக ஊத, மூச்சுக் காத்து சோதனை மிஷின் மணி அடித்து விட்டது!மாட்டிக் கொண்டார் அன்பர். தான் அரசாங்க ஊழியன் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது; அப்படிச் சொன்னால் இன்னும் ஏறுவர் போலீசார்... லஞ்ச ரேட்டும் ஏறும்...கடைசியில் தண்டம் அழுது, போதையும் இறங்கி வீடு போய் சேர்ந்திருக்கிறார்.இந்த சமாச்சாரத்தை என்னிடம் கதை போல கூறி முடித்தவுடன், நான் சொன்னேன்: நல்ல காரியம் செய்தீர்கள். அந்த நேரத்தில், அந்த ஸ்பாட்டில், போலீஸ்காரர்களிடமிருந்து விடுபடத் தான் பார்க்க வேண்டும். காரணம், அதிகாரம், அந்த நேரம் அவர்கள் கையில்...அவர்கள் நினைத்தால், லத்தியால் நாலு தட்டு தட்டி விட முடியும்; விடியும் வரை லாக் – அப்பில் உட்கார வைத்து விட முடியும்!நாலு தட்டும் தட்டி விட்டு, நாம் யார் என்று தெரிந்து கொண்ட பின், 'ஐயா... அப்பவே சொல்லி இருக்கக் கூடாதா? தெரியாம நடந்திருச்சு...' அது, இதுவென டிராமா போடுவர்!அவர் ஏட்டு என்றால், அந்த நேரத்தில் அவரை இன்ஸ்பெக்டர் ஐயா என்றும், இன்ஸ்பெக்டர் என்றால், ஆபிசர் ஐயா என்றும் விளித்து, மரியாதை செய்து விட வேண்டும்!ஆளானப்பட்ட இந்திராகாந்தி, கருணாநிதியைக் கூட போலீசார் என்ன பாடு படுத்தினர்... சாதாரணமான நாமெல்லாம் எம்மாத்திரம்?அந்த நேரத்தில் ஸ்பாட்டை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டால், மறுநாள் உங்களுக்கு, 'இன்புளுயன்ஸ்' இருந்தால், அதைப் பயன்படுத்தி, மேற்படி போலீசாரை தண்ணியில்லா காட்டுக்கு தூக்கியடிக்கக் கூட முடியும்... எனக் கூறி, நிறுத்தினேன்.'ஆமாங்க...' என்றார் அன்பர்.'நான் ஒரு போலீஸ் கதை சொல்கிறேன்...' என ஆரம்பித்தார் அமீர் பாய்.'சொல்லுங்க... சொல்லுங்க...' என உற்சாகப்படுத்தினேன்.'இந்த சமாச்சாரம் நடந்து கொஞ்ச நாளாயிட்டது... சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிங்க இப்போ மேற்படி ஸ்டேஷன்லேயும் இல்லே...' என பீடிகை போட்டார்.'இந்த பீடிகைக்கு காரணமும் உண்டு... இதைப் படிக்கும் போலீசாரோ, மற்றவரோ, தொடர்புடைய போலீஸ்காரர் யார் எனத் தெரிந்து கொள்ள மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாமே!'சென்னை நகரின் மிக பிசியான பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அது; அதற்கு கிளைகளும் உண்டு. அந்த ஓட்டலின் அதிபருக்கு போலீஸ் உயர் மட்டத்திலும், போலீசின் இன்டலிஜென்ட்ஸ் பிரிவிலும் நல்ல பழக்கம் உண்டு என்பதால், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனையோ, லோக்கல் இன்ஸ்பெக்டரையோ, மற்ற போலீசாரையோ சட்டை செய்வது கிடையாது.'ஒரு முறை, லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், தம் நண்பர் ஒருவருக்காக அந்த ஓட்டலில் ரூம் ஒன்று கேட்டிருக்கிறார். ஓட்டலில் உள்ளவர்கள், 'ரூம் ஏதும் காலி இல்லை...' என்று மறுத்து விட்டதோடு நில்லாமல், போலீஸ் இன்டலிஜென்ட்சில் உள்ள உயர் அதிகாரிகளிடமும் போட்டுக் கொடுத்து விட்டனர். 'அதாவது, போலீஸ்காரர்கள் ரூம் எடுத்தாலோ, சாப்பிட்டாலோ, பணம் தர மாட்டார்கள் என்ற நோக்கில், ரூம் காலியாக இருந்தும், 'இல்லை...' என மறுத்ததோடு, மேற்படி இன்ஸ்பெக்டர், 'ஓசி' அடிக்க முயல்கிறார் என்ற நோக்கில் இன்டலிஜென்சில் போட்டுக் கொடுத்தனர்.'இன்ஸ்பெக்டர் கறுவிக்கொண்டே இருந்திருக்கிறார். ஒரு நாள், 'டெபுடி கமிஷனர்' ஒருவர், இவரது ஸ்டேஷனுக்கு, 'விசிட்' செய்து விட்டு, மதிய நேரம் மேற்படி ஓட்டலில் சாப்பிடப் போகிறேன் என, இன்ஸ்பெக்டரிடம் கூறி இருக்கிறார். 'சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், 'ஐயா... ஏட்டுகிட்ட நான் பணம் கொடுத்து அனுப்பிடறேன்; நீங்க பில் ஏதும் கொடுக்க வேண்டாம்!' எனக் கூறி இருக்கிறார். 'சரி!' எனக் கிளம்பிப் போன டெபுடி கமிஷனர், காடை, கவுதாரி, வான் கோழி என மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்திருக்கிறார்.'இதற்கிடையே இன்ஸ்பெக்டர் மேற்படி ஓட்டலுக்கு போன் செய்து, பொறுப்பாளர்களிடம், டி.சி., அவர்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்திருப்பதாகவும், அவரது பில்லை தான் செட்டில் செய்து விடுவதாகவும் கூறி இருக்கிறார்.இன்ஸ்பெக்டரிடம், 'சரி...சரி!' என தலையாட்டிய ஓட்டல்காரர்கள், டி.சி., சாப்பிட்டு முடித்ததும் அவரிடம் பில்லை நீட்டி இருக்கின்றனர். இவர் தான், டி.சி.,யாயிற்றே... வெளியே செல்லும் போது எதற்காக பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கோதாவில், தன் சபாரி சூட்டில் உள்ள பையில் கர்சிப் தவிர. எதுவும் எடுத்துச் செல்லவில்லை; பணமோ, கிரடிட் கார்டோ எதுவுமே இல்லை டி.சி.,யிடம்.'தான் அந்த ஏரியா டி.சி., என்றும், சிறிது நேரத்தில் பணத்தை அனுப்பி வைப்பதாகவும் கூறி இருக்கிறார். 'ஆனால், ஓட்டல்காரர்களோ, பணத்தை கீழே வைத்தால் தான் ஆயிற்று என்று, பிடிவாதம் செய்துள்ளனர். பதறிப் போன டி.சி., ஸ்டேஷனுக்கு போன் செய்திருக்கிறார்.'பதட்டத்துடன் ஓடி வந்த இன்ஸ்பெக்டர், 'பில்' பணத்தை கட்டியிருக்கிறார். பின்னர் அவர், கடுப்பில் இருந்த டி.சி.,யிடம், 'இந்த ஓட்டல்காரர்களே இப்படித்தான் சார்... லோக்கல் ஸ்டேஷனை மதிக்கறதே இல்லை... எதற்கெடுத்தாலும் மேலதிகாரிகளை தொடர்பு கொள்கின்றனர்' என போட்டுக் கொடுத்திருக்கிறார்.'இதைக் கேட்ட டி.சி., 'அப்படியா செய்தி! ஓட்டலின் அவுட்–கேட் அருகே போலீஸ் பாரா போடு! ஓட்டலில் குடித்து விட்டு கார் ஓட்டி வரும் வாடிக்கையாளர்களை, பிடித்து கேஸ் போடு!' என்று கூறிச் சென்று விட்டார். 'லோக்கல் இன்ஸ்பெக்டருக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல ஆயிற்று... டி.சி., சொன்னது போலவே செய்ய ஆரம்பிக்க, ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது. 'அத்தோடு மட்டுமல்ல... அந்த வாரத்திலேயே அந்த ஓட்டலில் பணியாற்றும் ஒரு பெண்ணும், அங்கேயே பணியாற்றிய ஒரு ஆணும் காதலித்து திருமணம் செய்து, தலைமறைவாகி விட்டனர்.'பெண்ணின் தகப்பனார் போலீசில் புகார் செய்ய, ஓட்டல் மேனேஜர் உட்பட, முக்கியஸ்தர்களை பிடித்து வந்து ஸ்டேஷனில் அமர வைத்து விட்டனர்.'இதில் முக்கிய கூத்து என்னவென்றால், மாதம் ரூபாய் ஒன்றே கால் லட்சம் சம்பளம் வாங்கும் நிர்வாகியின் பேன்ட், சட்டையைக் கழட்டி, ஜட்டியுடன், 'தேர்ட் ரேட் கிரிமினல்' போல உட்கார வைத்தது தான்.'நொந்து போன ஓட்டல் அதிபர், தமக்கு தெரிந்த உயர் அதிகாரிகளிடம் தொடர்ப்பு கொள்ள, அவர்கள் அந்த நேரத்தில், 'டம்மி' போஸ்டில் இருக்க, ஒன்றுமே செய்ய முடியாமல் போனது ஓட்டல் அதிபருக்கு!'இப்போதெல்லாம் மரியாதையாக நடந்து கொள்கின்றனராம்...''ம்...' என்று நாங்கள் பெரு மூச்சு விட, 'இதற்கே பெருமூச்சு விடுகிறாயே... நான் சொல்லும் அடுத்த கதையைக் கேள்!' என்றவர், சொல்ல ஆரம்பித்தார்:கொடைக்கானலில் உள்ள பிரபலமான ஓட்டல்களுள் ஒன்று அது. அந்த ஓட்டலில் சென்னையில் உள்ள பல போலீஸ் உயர் அதிகாரிகளும் அவ்வப்போது தம் குடும்பத்தோடோ, 'செட்டப்'களோடோ வந்து தங்கிச் செல்வர். இதன் மூலம் அந்த ஓட்டல் அதிபருக்கு, பல போலீஸ் அதிகாரிகளுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது.இதனால் அவர் லோக்கல் போலீஸ்காரர்களை சட்டை செய்வதில்லை. பொருமிக் கொண்டேயிருந்தார் லோக்கல் இன்ஸ்பெக்டர்.ஒரு நாள், மந்திரி ஒருவர் கொடைக்கானல் வந்திருக்கிறார். அவரது பாதுகாப்பு பணியில் லோக்கல் இன்ஸ்பெக்டர் இருக்கும்போது, ஓட்டலில் இருந்து ஸ்டேஷனுக்கு ஒரு போன் வந்திருக்கிறது.ஓட்டல் அறை ஒன்றில் உல்லாசப் பயணி ஒருவர், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக போன் தகவல் கூறியது.உடனே, இன்ஸ்பெக்டருக்கு, பழம் நழுவி பாலில் விழுந்தது மட்டுமல்லாமல், அது நழுவி வாயில் விழுந்தது போல் ஆகிவிட்டது.மந்திரியிடம், அரை மணி நேரம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு ஓட்டலுக்கு வந்தவர், பிணத்தைக் கைப்பற்றி, ஓட்டல் வரவேற்பறையில் கிடத்தி விட்டு, மந்திரியின் பாதுகாப்பிற்கு சென்று விட்டார்.ஓட்டலில் தங்கியிருக்கும் உல்லாசப் பயணிகள் இந்த காட்சியைக் கண்டு, ஓட்டலை காலி செய்து கொண்டு ஓட, திகைத்துப் போன ஓட்டல் அதிபர், சென்னைக்கும், மதுரைக்கும் மாறி, மாறி போன் போட்டு, தனக்குத் தெரிந்த உயர் அதிகாரிகளிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.அவர்கள் லோக்கல் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு கொண்டபோது, இவர், தான் மந்திரியின் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதால், அங்கே, இங்கே அசைய முடியாது என்றும், அந்த உயர் அதிகாரிகள், மந்திரியிடம் பேசி பர்மிஷன் வாங்கிக் கொடுத்தால், தான் போய் ஆக வேண்டியதைப் பார்ப்ப தாகக் கூறியிருக்கிறார்.மந்திரியிடம் பேச, எந்த போலீஸ் அதிகாரிக்குத் தான் துணிவு வரும். எனவே, கமுக்கமாக இருந்து விட்டனர். ஓட்டல் அதிபரின் அடுத்தடுத்த போன் கால்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், அவர்களது உதவியாளர்கள், 'ஐயா... செகரட்டரியேட் போயிருக்காரு... ஐயா, 'சி.எம்.,' ஐ பார்க்க போயிருக்காரு... வட சென்னையில் தீ விபத்து... தென் சென்னையில் கலவரம்...' எனடுபாக்கூர் விடச் சொல்லி, தப்பியுள்ளனர்.மறுநாள், காலை வரை பிணம் ஓட்டல் வரவேற்பு அறையிலேயே கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தான் இன்ஸ்பெக்டர் வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறார்.இதிலிருந்து நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்னதான் உயர் அதிகாரிகளை அறிந்திருந்தாலும், லோக்கல் போலீசையும் கைக்குள் போட்டுக் கொள்வது நல்லது என முடித்தார்.விஷயங்களைக் கேட்டு பகீராகிப் போயிருந்த நான், 'பெருசும் வேண்டாம்; சிறுசும் வேண்டாம். என்னைப் போன்ற சாதாரணர்களுக்கு போலீஸ் சகவாசமே வேண்டாம்...' என்று கூறி, தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கி கும்பிட்டு, இடத்தை காலி செய்தேன்!