அந்துமணி பா.கே.ப.,
மதுரை தொழில் அதிபர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு...'குற்றாலத்திலிருந்து 15 கி.மீ., தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டில் கட்டப்பட்ட பங்களாவில் தங்க ஏற்பாடு செய்திருக்கிறேன். குளு குளுன்னு இருக்கும். அவசியம் போகணும்... வாங்க...' என்றார். நான், லென்ஸ் மாமா, அன்வர்பாய் மூவரும் கிளம்பினோம்.'எங்க தாத்தா இங்க வந்து வேட்டையாடுவாராம்... வெள்ளைக்காரர்கள் பலர், என் தாத்தாவின் நண்பர்கள்... அவர்கள் தான் என் தாத்தாவுக்கு, வேட்டையாடும் கலையைக் கற்றுக் கொடுத்தார்களாம்...' என, அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே, நான் நடுவே புகுந்தேன்...'பாழாய் போன வெள்ளைக்காரன், மிருகங்களை துப்பாக்கியால் வேட்டையாடுவது பற்றி மட்டுமா நமக்கு கற்றுக் கொடுத்தான்... நம் மக்களின் நேரத்தை வேட்டையாடும் கிரிக்கெட்டையும் அவன் தானே கற்றுக் கொடுத்தான்...' என, நான் கூறிக் கொண்டிருக்கும் போதே, ஏகாந்தமான அந்த ஓடை கண்ணில் பட்டது.அங்கே இருந்த பாறைகள் மீது நாங்கள் அமர்ந்து, ஓடி வரும் குளிர்நீரில் கால் பதித்து, உடலும், உள்ளமும் சிலிர்க்கும் அனுபவத்தை ரசித்துக் கொண்டிருக்கும் போது, தொழிலதிபர் தயார் செய்து கொண்டு வந்திருந்த எண்ணெயை, எங்கள் உடம்பு, தலையில் தடவி விட ஆரம்பித்தனர் இருவர்... 'மணி... இது சாதாரண எண்ணெ# இல்லை... செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெயில் துளசி, சில மூலிகைகள், மிளகு, காய்ந்த மிளகாய் போன்றவை இட்டு காய்ச்சப்பட்டது... உடலுக்கும், அருவி குளியலுக்கும் ஏற்றது...' என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, 'தட்... தட்... தட்... தட்...' என்ற சப்தம் கேட்க, திரும்பிப் பார்த்தேன்...லென்ஸ் மாமா தலையில் எண்ணெயை ஊற்றி தட்டிக் கொண்டிருந்தார் மசாஜ் செய்பவர்.'சரி... கிரிக்கெட் கதையை தொடர்ந்து சொல்லு...' என தொழிலதிபர் கேட்க, தொடர்ந்தேன்...'இங்கிலாந்தில் தோன்றிய விளையாட்டு கிரிக்கெட்ங்கிறது எல்லாருக்கும் தெரிந்தது தான்... இந்த ஆட்டத்தை உலகெங்கும் பரப்பியவர்கள் இங்கிலாந்தின் மாலுமிகள், போர் வீரர்கள், பாதிரியார்கள் தான்.'கிரிக்கெட் விளையாட்டு விதிகளை வகுக்க ஏற்பட்ட நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,) இந்த நிறுவனம், 1787ல் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டே இந்த நிறுவனத்தினர், தங்களுடைய முதல் ஆட்டத்தை, 'லார்ட்ஸ்' என்ற புகழ் வாய்ந்த மைதானத்தில் ஆடினர்.'அந்த வருடம் மே மாதம் 30ம் தேதி கிரிக்கெட் விதிகளை முதன் முறையாக எம்.சி.சி., நிறுவனம் சீர்படுத்தியது.'கிரிக்கெட் விதிகள் அநேக மாற்றங்களுக்குப் பிறகு, 1947ல் இறுதியாக சரிப்படுத்தப்பட்டது. அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்து, முடிவைக் காண, கிரிக்கெட் ஆடும் நாடுகளை உறுப்பினராகக் கொண்ட, 'இன்டர்நேஷனல் கிரிக்கெட் கான்பரன்ஸ்!' என்ற கமிட்டியும் இப்போது உள்ளது...' எனும் போது, நடுவே புகுந்தார் அன்வர்பாய்...'உங்க தாத்தா மிருகங்களை வேட்டையாடியதா சொல்றீங்களே... அப்போல்லாம் மிருகவதை தடுப்பு சட்டம் எல்லாம் அமலில் இல்லையா?' எனக் கேட்டார்...'அது தான் சொல்றேனே... அது வெள்ளைக்காரன் ஆண்ட காலம்... அப்போ, அவனே வேட்டையாடப் போகும்போது, யார் தடுக்க முடியும்! இந்த வேட்டைகளுக்காக காசை தண்ணீரா செலவழிப்பாராம் எங்க தாத்தா... ஆள் படை என ஏகப்பட்ட செலவு! தன்னோட சொத்துல பாதி அழிச்சிருக்கார்...' என தொழிலதிபர் கூறும்போது, லென்ஸ் மாமா உட்புகுந்தார்...'ஐயையோ... கேட்கவே கஷ்டமா இருக்குதே... உங்க தாத்தா தனவந்தர்; சமாளிச்சுகிட்டார்... என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர், சிக்கனமா இருக்கணும்ங்கறதுக்காக, காஞ்சிப் பெரியவர் சொன்ன அறிவுரை இப்போ நினைவுக்கு வருது...' எனக் கூறும் போது அன்வர்பாய் ஓடையில் இறங்கி குளிக்க ஆரம்பித்தார். நானும், தொழிலதிபரும், லென்ஸ் மாமா வாயைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.அவரே தொடர்ந்தார்...'அவர் சொல்கிறார்... 'செலவை எல்லாரும் குறைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு மூன்று விதத்தில் குறைக்கலாம் என்று தோன்றுகிறது... எல்லாரும், ஸ்திரீகள் உட்பட, கடைசித் தரமான வஸ்திரம் தான் வாங்குவது என்று வைத்துக் கொள்ள வேண்டும்!' என்கிறார்...'இப்படிச் சொல்பவர், மேலும், 'காலையில் கோதுமைக் கஞ்சிதான் சாப்பிடுகிறதென்று வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மோர் சாப்பிடலாம். ஒரு பழக்கத்தைப் பண்ணி விட்டதால் அதை மாற்ற ஏதாவது ஒன்று வேண்டும் அல்லவா? மோர் தான் அமிர்தம் என்று வைத்திய சாஸ்திரம் சொல்கிறது. இப்படிச் செய்வதால், செலவில் நூற்றுக்கு அறுபது பங்கு குறைந்துவிடும் என்று தோன்றுகிறது...' என்கிறார்.'மேலும் அவர் சொல்கிறார், 'அரிசி எவ்வளவு வாங்குகிறோம்? பால், காபி கொட்டை எவ்வளவு வாங்குகிறோம்? பால், காபி கொட்டை தான் அதிகமாக செலவு. விவாகத்துக்கான பணத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப் பண்ணினால் டம்பம் போகும். அவை அனுபவத்தில் தெரிய வேண்டும்; உசிதமானால் எடுத்துக் கொள்ள வேண்டும்...' இப்படிச் சொல்கிறார்...' என்றார் மாமா!அருகே இருந்த லோக்கல் அன்பர் ஒருவர், 'அருமையான யோசனையாக இருக்கிறதே... உடனடியாக செயல்படுத்திப் பார்க்கிறேன்...' என்றார்.'குற்றாலத்தை சுற்றுலாத்தலமாக எல்லாரும் கருதுகின்றனர்... மிகச் சரி... ஆனால், உங்கள் ஊர் அருகே மகாபலிபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறதே... அதையும் பலர், சுற்றுலாத் தலமாகத் தானே கருதுகின்றனர்.... அது தான் இல்லை...' எனத் தொழில் அதிபர் கூறவும், அவர் என்ன கூறப் போகிறார் என ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தாலும், அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்...'மகாபலிபுரம் ஒரு காலத்தில் ஆன்மிகத் தலமாக இருந்தது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.'முதல் ஆழ்வார் மூவருள் பூதத்தாழ்வார் பிறந்த ஊர் இந்த மகாபலிபுரம் தான்... இவ்வூரின் பழைய பெயர், 'கடல் மல்லை!''திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில்,களங்களியங்கும் மல்லைக்கடல் மல்லைத் தல சயனம்துளங்கொள் மனத்தாரவரைவலங்கொள் மடநெஞ்சே!என்று பாடியிருக்கிறார்.'இதிலிருந்து, கப்பல்கள் வந்து தங்கியிருந்த துறைமுக நகராக அக்காலத்தில் இது விளங்கியிருக்கிறது என்று புரிகிறது. அதற்கு சான்றாக பழங்கால, 'கலங்கரை விளக்கம்' - லைட் ஹவுஸ் ஒன்றும் இங்கே இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இவ்வூரை, 'செவன் பகோடாஸ்' — ஏழு கோவில்கள் என்றே அழைத்து வந்தனர்...' என்று விளக்கம் அளித்தார் தொழிலதிபர்...எல்லாரும் குளித்து முடித்து வந்தபின், காட்டு பங்களாவில், கொதிக்க கொதிக்க நாட்டுக்கோழி குழம்பு, விரால் வறுவல், புழுங்கல் அரிசி சோறு என வகை, வகையாகப் பரிமாறப்பட்டது... எனக்கு வழக்கம் போல சைவம்...சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, தொழிலதிபரிடம், 'அது சரி... உங்க தாத்தாவின் வேட்டைப் பழக்கம், பேரனான உங்களிடம் உண்டா, இங்கே இன்னும் மான் வேட்டைகள் நடக்கிறதா?' எனக் கேட்டேன்.அவரிடமிருந்து பதில் இல்லை!***மேற்கத்திய நாட்டுக்காரர்களுக்கு, நம் ஆசியா கண்டத்தைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வான அபிப்பிராயம் உண்டு. 15ம் நூற்றாண்டில் கோழிக்கோட்டில் (கேரளா) கப்பலில் வந்து வாஸ்கோ - ட - காமா இறங்கியதன் மூலம் தான் ஆசியாவே, கண்டுபிடிக்கப்பட்டது! இல்லாவிட்டால் ஆசியா ஒரு இருண்ட கண்டமாகவே இருந்திருக்கும்... என்றெல்லாம் வெளிநாடுகளில் ஒரு கருத்து உண்டு.இதையெல்லாம் மறுக்கும் விதத்தில், ஆதாரபூர்வமான ஒரு புத்தகம் வந்திருக்கிறது. 'வாஸ்கோ- ட - காமாவின் கதை!' என்ற இந்தப் புத்தகத்தை எழுதியவர் சஞ்சய் சுப்ரமணியம் என்பவர். விலை என்ன தெரியுமா? 1500 ரூபாய்!இந்தப் புத்தகத்தில் சஞ்சய் சுப்ரமணியம் சொல்லியிருக்கும் கருத்துகள் சுவாரசியமானவை... வாஸ்கோ - ட - காமா கோழிக்கோட்டுக்கு வந்து சேர்ந்தது அவருடைய திறமையால் அல்ல; அவருடைய கப்பலில் மாலுமியாக இருந்த ஒரு குஜராத்தியரால் தான். போர்ச்சுக்கலில் இருந்து இந்தியாவுக்கு வாஸ்கோ- ட - காமா வந்து சேர வழிகாட்டியாக இருந்தவர். ஆக, ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்தது ஒரு ஐரோப்பியர் அல்ல; அந்த வழி ஏற்கனவே இந்தியர்களுக்கு தெரிந்து தான் இருந்திருக்கிறது. நாம், நம்முடைய வரலாற்றைச் சரியானபடி எழுதி வைப்பதில்லை என்பது தான் நம்முடைய குறை!***