உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அந்த நண்பர் பெரிய ஆத்திகர்... அவரது இல்லத்தில் பூஜை, பஜனை, ஹோமம், ஆராதனை என, ஏதாவது அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். அவரது மனைவியும், மனைவி வீட்டாரும் சத்ய சாய்பாபாவின் பக்தர்கள் என்பதால், திருமணத்திற்கு பின், இவரும் அதி தீவிர சாய் பக்தராகி விட்டார்.கடந்த வாரத்தில் ஒருநாள், பெரிய ஹோமம் ஒன்று நடத்துவதாகவும், நான் கண்டிப்பாக வர வேண்டும் என, அவரது இல்லத்துக்கு அழைத்திருந்தார்.நண்பரின் மனம் வருத்தமடையக் கூடாதே என்பதற்காக, நானும், லென்ஸ் மாமாவும் அவரது இல்லத்திற்கு சென்றோம்.மிகப்பெரிய இல்லம்... வீட்டின் பூஜை அறையில் அக்னி வளர்த்து, ஹோமம் நடந்து கொண்டிருக்கிறது.எங்களை அழைத்திருந்தது போலவே இன்னும் பல நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்திருந்தார். பெரும்பாலானவர்கள் பூஜை அறையில் இருக்க, நானும், லென்ஸ் மாமாவும் மற்ற சில விருந்தினர் அமர்ந்திருந்த வரவேற்பறையில் அமர்ந்தோம்.சிறிது நேர இடைவெளிக்குப் பின் ஹோமம் முடிந்து, நண்பர் வந்து பூஜை அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார். சாய்பாபா படத்தில் விபூதி பூத்திருந்ததைக் காட்டினார். மீண்டும் வரவேற்பறையில் வந்து அமர்ந்தோம்.அப்போது அரக்கப் பரக்க பெரியவர் ஒருவர் வந்தார்... 'லேட்டாயிடுச்சுப்பா...' என, 'எக்ஸ்கியூஸ்' கேட்டுக் கொண்டார். பெரியவரை எங்களுக்கு அறிமுகம் செய்தார் நண்பர்... 'என்னுடன் திருச்சி ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜில் லட்சுமணன் என்பவர் படித்தார். அவருடைய மாமனார் இவர்; பெயர் சுப்பையா. புதுக்கோட்டைக்காரர் என்றாலும், மலேஷிய நாட்டில் குடியேறி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அங்கே தொழிலதிபராக இருக்கிறார். என் நண்பனும் மலேஷியாவில் தான் இருக்கிறார். பேசிக் கொண்டிருங்கள் இதோ வருகிறேன்...' எனக் கூறிச் சென்றார்.பல விஷயங்கள் பேசிய பின், நம்மூர் ஆட்டோ டிரைவர்களின் மனப்பான்மை பற்றியும், சிங்கப்பூர் டாக்சி டிரைவர்கள் பற்றியும் கூறினார்:முந்தா நாள் மதுரை போயிருந்தேன் தம்பி... ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ டிரைவரிடம், 'எல்லீஸ் நகர் போகணும்...' என்றேன். நூறு ரூபாய் கேட்டார்... 'அதிகம்...' என்று சொல்லி, அடுத்த ஆட்டோ நோக்கிச் சென்றேன்...அவ்வளவு தான்... அடுத்த ஆட்டோ டிரைவரை எச்சரிக்கும் முகமாக இவர், 'ஐயா, எல்லீஸ் நகர் போகணுமாம்... நூறு ரூபாய் அதிகம் என்கிறார்...' என்றார். அதன் பின், எந்த ஆட்டோ டிரைவர் வருவார்...ஒரு முறை சிங்கப்பூர் சென்று இருந்தேன். 'டாக்சி' என்ற மஞ்சள் விளக்கு, காரின் கூரையில் எரிந்து கொண்டிருந்தால், சவாரி ஏற்ற தயார் என்று அதற்குப் பொருள். அப்படி வந்த டாக்சி ஒன்றை நிறுத்தும் பொருட்டு கை நீட்டினேன். நான் கை நீட்டிய பிறகு, 'டாக்சி' என்ற மஞ்சள் விளக்கை, 'ஆப்' செய்து, நிற்காமல் சென்றார் டாக்சி டிரைவர்...போனால் போகட்டும் என்ற நினைப்பில், சட்டை பையில் இருந்து பேனாவும், பேப்பரும் எடுத்து ஏதோ குறிப்பெழுதினேன். இதை டாக்சியின், 'ரியர் வியூ' கண்ணாடியில் டிரைவர் கவனித்து விட்டார் போலும்... டாக்சி நம்பரை நான் எழுதிக் கொள்வதாக நினைத்து விட்டார்...அடுத்த ஐந்தாவது வினாடி, 'யு டர்ன்' அடித்து வண்டியை என் அருகே நிறுத்தி ஏறிக் கொள்ளச் சொன்னார். 'சார்... நான் விளக்கை, 'ஆப்' செய்ய நினைத்த நேரத்தில் நீங்கள் கை காட்டி விட்டீர்கள்... மதிய சாப்பாட்டிற்காக அவசரமாக சென்று கொண்டிருந்தேன். தயவு செய்து போலீசில் புகார் கூறி விடாதீர்கள்...' எனக் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.இது போன்ற குற்றங்கள் நிரூபணமானால், ஜெயில் தண்டனை, அபராதம் மட்டுமல்ல... அவர் வாழ்நாளில், அவரது சொந்த கார், பைக் எதையுமே அந்த டிரைவர் ஓட்ட முடியாதபடி சட்டம் உள்ளது ; அதனால், நடு, நடுங்குகின்றனர்! சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு டாக்சியில் சென்று இறங்கி இருக்கிறார் அமெரிக்கர் ஒருவர். கட்டணத் தொகை போக, ஒரு டாலரோ, இரண்டு டாலரோ பாக்கி தராமல் சென்று விட்டார் டிரைவர்.ஊருக்கு சென்ற அமெரிக்கர், சிங்கப்பூர் டூரிசம் டிபார்ட்மென்டுக்கு, டாக்சி நம்பருடன் ஒரு புகார் எழுதிப் போட்டு இருக்கிறார். உடனே, அவரையும், அவர் குடும்பத்தினரையும் சிங்கப்பூர் அரசு விருந்தினராக வர அழைப்பு விடுத்தது. அவரது குடும்பம் முழுமைக்கும் விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட், நட்சத்திர ஓட்டலில் தங்கல், சிங்கப்பூரில் செலவு செய்ய தலைக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய். ஒரே ஒரு கண்டிஷன்... டிரைவரை அடையாளம் காட்ட வேண்டும்.அழைப்பை ஏற்ற அமெரிக்கர், தம் குடும்பத்துடன் மீண்டும் சிங்கப்பூர் வந்து, டாக்சி டிரைவரை அடையாளம் காட்டினார். ஓய்ந்தது டிரைவர் வாழ்க்கை. ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை; ஒரு லட்ச ரூபாய் அபராதம்; டிரைவிங் லைசென்ஸ் பிடுங்கப்பட்டது; ஆயுளுக்கும் அவர் சிங்கப்பூரில் கார் ஓட்ட முடியாது, என்று முடித்தார்!கேட்க நன்றாக இருக்கிறது... ஆனால், இதே முறையை இங்கே அமல் செய்ய முடியாது. காரணம், இங்கே ஓடும் ஆட்டோக்களில் பாதி போலீஸ்காரர்களின் பினாமி; மீதி அரசியல்வாதிகளுடையது, எனக் கூறி சிரித்தார் லென்ஸ் மாமா; கிளம்பினோம் அங்கிருந்து! 'கேரளாவில், 'கதகளி' என்ற நடனம் ஆடுகின்றனர். அது உங்களுக்குத் தெரியும். ஆனால், ஏதோ, 'ஒட்டந்துள்ளல்' அப்படீன்னு ஒரு நடனம் அங்கே ரொம்ப பிரசித்தமாமே...' என்று குப்பண்ணாவிடம் கேட்டேன். 'ஆமாம், கதகளி பல நூற்றாண்டுகளாக எந்தவித மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. அந்த நடன முறையில் சில மாறுதல்களை செய்து, ஒட்டந்துள்ளல் என்ற புதிய நடனக் கலையைக் கண்டுபிடித்தனர்...' என்றார் குப்பண்ணா.அவரே தொடர்ந்தார்... 'கதகளியில் பல நடிகர்கள் பங்கெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒட்டந்துள்ளலில் ஒரே ஒரு நடிகர் தான். இது, நம்மூர் கதாகாலட்சேப முறையை ஒத்திருக்கும். கதகளி முறையில் முகபாவங்களையும், ஆங்காங்கே நடிப்பையும் வெளியிட்டுக் கொண்டே, ராமாயணம், மகாபாரதம் கதைகளை உள்ளடக்கிய மலையாளப் பாடல்களை ஒட்டந்துள்ளல் நடிகர் பாடுகிறார். பெரும்பாலும் மக்களுக்கு நன்கு தெரிந்த நாட்டுப் பாடல்களே இவை.'நல்ல வேலைப்பாடுள்ள ஒரு கிரீடம். மணிகளும், பல வர்ணக் கண்ணாடித் துண்டுகளும் பதிக்கப்பட்டு வேலைப்பாடுள்ள ஓர் மார்புக் கவசம். கைத்தறித் துணியில் தைத்த ஒரு ஆடை. இவற்றை ஒட்டந்துள்ளல் நடிகர் அணிந்திருப்பார். சலங்கை கட்டி அவர்கள் ஆடும்போது, தாளக்கட்டு தானாகவே ஏற்பட்டு விடும். 'பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மலையாள கவிஞர் குஞ்சன் நம்பியார் கண்டுபிடித்த நடனம் இது. வெகு எளிய குடும்பத்தில் பிறந்த இவர், கதகளி பயிற்சிக்கு ஆளானார். கதகளி, காலப் போக்கில் பிரபுத்துவ டாம்பீகமாக ஆகிவிட்டதை அவர் உணர்ந்தார். அதனால், இவர், இந்த ஒட்டந்துள்ளலை ஆரம்பித்தார்.'இந்த புதிய நடனமுறை மக்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இன்றும் கூட திறமையான ஒரு ஒட்டந்துள்ளல் நடிகருக்குக் கிடைக்கும் சபை வரவேற்பு, வேறு முறை நடனக் கலைஞருக்குக் கிடைப்பதில்லை - கேரளத்தில்!' என்றார் குப்பண்ணா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !