உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கடந்த வாரம் சேலம் பயணம் -ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, திடீரென தொலைபேசி அழைப்பு...பேசியவர் பெரியசாமி அண்ணாச்சி. சென்னை வாசி, சேலத்தில் மாட்டுத் தீவன பேக்டரி வைத்திருக்கிறார் அண்ணாச்சி...'என்ன சார்... காலையில புடிச்சுத் தேடுதேன்... எங்கிட்டுப் போனீங்க... நீங்க கொடுத்த, 'ஜெள் போன்' (மொபைல் போன்) நம்பரும் வேல செய்யலில்லா...' என்றார்.'அண்ணாச்சி... காலையில ஓமலூர், தொப்பூர், தருமபுரின்னு போயிட்டு, இப்ப தான் வந்தோம்...' என்றேன்.'சரி சரி... இப்பம் நா ஓட்டலுக்கு வாரேன்...' என்றவர், அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார்.ரூமுக்குள் வந்ததும், 'நைட்டு என்ன சாப்பிடுறீங்க அண்ணாச்சி...' எனக் கேட்டேன்.'கழுத என்னத்த சாப்பிடப் போறேன்... நாலு கொத்து புரோட்டா, காரமா சிக்கன் கொளம்பு, மட்டன் சுக்கா, ரெண்டு ஆம்லெட் இவ்வளவு போதும்...' என, அண்ணாச்சி சொல்லும் போதே, ரகசியமாக என்னைப் பார்த்து கண்ணடித்து, அண்ணாச்சியை கிண்டல் செய்தார் லென்ஸ் மாமா. நான் மூன்று இட்லி, எண்ணை - பொடி சொல்ல, மாமாவும், 'என் - வி'க்குச் சொன்னார். ஆர்டர்களை எடுத்துக் கொண்ட அன்பர், ஹாட்பேக்குடன் சென்றார்.அப்புறம் தான் ஆரம்பித்தது கச்சேரி...பேச்சு அப்படியே, தி.மு.க., பக்கம் தாவியது. பழைய நினைவுகளில் மூழ்கி, தி.மு.க., கதைகள் சொல்ல ஆரம்பித்தார் லென்ஸ் மாமா... அந்த நாளில, தி.மு.க., தொண்டர்களில் பெரும்பாலானோர் உணர்ச்சிமயமானவங்க. தி.மு.க.,வில் இரண்டாம் மட்ட தலைவர்கள் அண்ணாதுரையை, 'தென்னாட்டு பெர்னாட்ஷா... இந்நாட்டு இங்கர்சால்' என்றும், 'காஞ்சி தந்த கரிபால்ட்டி' என்றும் புகழ்ந்தனர்...' என்று சொல்லிக் கொண்டு போன, லென்ஸ் மாமாவை இடைமறித்தார் அண்ணாச்சி...'அதெல்லாம் கிடக்கட்டும்வே... இங்கர்சால்ன்னு என்னமோ சொன்னீரே... யாரு அவரு...' எனக் கேட்டார்.'சரியாப் போச்சு... உமக்கும் தெரியாதா? அவர் ஒரு அமெரிக்கர். பழுத்த நாத்திகவாதி, தலைசிறந்த பேச்சாளர். அவர் மைதானங்களில் பேசுவது கிடையாது; மண்டபங்களில் தான் பேசுவார். பேச்சைக் கேட்க கட்டணம் உண்டு. ஒரு மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி பெறும் சம்பளத்தை விட, தன் பேச்சுக்களின் மூலம் அதிகம் சம்பாதித்தவர் இங்கர்சால்...''ஆங்கிலத்தில் எதுகை, மோனை அழகோடு, ஏராளமான உவமைகளை பயன்படுத்தி, புதிய நடையை உருவாக்கினார். இது, அண்ணாதுரையை மிகவும் கவர்ந்தது. இங்கர்சால் ஸ்டைலில், தமிழில் இந்த புதிய நடையை, அறிமுகம் செய்தார் அண்ணாதுரை. இங்கர்சால், 'தி ஒர்க்கிங் கிளாஸ், சேஞ்ச்டு த பாரஸ்ட் இன் டு பார்ம்ஸ்' என, ஆங்கிலத்தில் சொன்னதை, தமிழில், 'காடு திருத்தி, கழனியாக்கிய பாட்டாளி மக்கள்!' என, முலாம் பூசி அளித்தார். இதனால், தான் அண்ணாதுரையை, 'இன்னாட்டு இங்கர்சால்' என்றனர்...' என, லென்ஸ் மாமா முடிக்கும் போது, கொத்து புரோட்டாவின் கடைசி பகுதியை, கோழிக் குழம்பில் நனைத்துக் கொண்டிருந்தார் அண்ணாச்சி.'என்னப்பா... என்ன, பெரிய பிராண்டு... அதுவும், அந்த ஷோரூமில் தான் போய் வாங்கணுமா... ஏன், தள்ளுபடி கொடுக்கிற கடையில் வாங்கக் கூடாதா... அங்க மட்டும் நல்ல துணி கிடைக்காதா...'- இப்படி பேசுபவர்களை, பார்த்திருப்பீர்கள்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில், உண்மை எது, டூப்ளிகேட் எது என்று, புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, போலி சரக்குகள், சந்தையில் குவிந்து விட்டன.முக்கியமான முன்னணி கம்பெனிகளின் துணிகளிலும் போலிகள் வந்துவிட்டன. உங்களுக்கு ரேமண்ட், சியாராம், விமல், ஓ.சி.எம்., இப்படி எந்த வகை துணிகள் வேண்டுமானாலும், அந்த பிராண்டுகளில், துணிகள் தயாரித்து, பல மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா தொழிலதிபர்கள். இங்கிருந்து தான், பல மாநிலங்களுக்கு, போலி துணிகள் அனுப்பப்படுகின்றன. இந்த துணிகள், பிரபல பிராண்டு பெயர் பொறித்தே விற்கப்படுகின்றன. எல்லா பெரிய நகரங்களிலும், போலிகள் நடமாடத் துவங்கி விட்டன.சில ஆண்டுகளுக்கு முன் வரை, மகாராஷ்டிர மாநிலம், பிவாண்டியில் தான் இப்படி போலி துணிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. 1992 அயோத்தி சம்பவத்துக்கு பின், 93ல் மும்பையில், அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு வெடிப்பை அடுத்து, அங்குள்ள பல போலி தயாரிப்பாளர்கள், தங்கள் இடத்தை மாற்றிக் கொண்டனர். அந்த இடம் தான் ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா.இங்கு, எத்தனை பேர், இந்த போலி தொழிலில் உள்ளனர் என்று தெரிந்தால், ஆச்சரியப்படுவீர்கள். மொத்தம் மூவாயிரம் பேர். இவர்கள், எல்லாருமே சொந்தமாக விசைத்தறி வைத்துள்ளவர்கள் என்று சொல்ல முடியாது; பலர், வெறும் வியாபாரிகள் தான். இங்கு, 450 விசைத்தறி ஆலைகள் உள்ளன; இங்கு தான், பிரபல பிராண்டுகளின் பேன்ட், ஷர்ட் துணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும், 25 கோடி மீட்டர் துணிகள் இங்கிருந்து பல மாநிலங்களுக்கு செல்கின்றன.இங்கு தயாரிக்கப்படும் பிரபல பிராண்டு துணிகள் வாங்கும் போது, ஒரு வித்தியாசமும் தெரியாது; ஒரு முறை தண்ணீரில் நனைத்தால் தான் சாயம் வெளுக்கும். சாதாரண மக்களால், இந்த உண்மையான துணிக்கும், போலி துணிக்கும் நிச்சயமாக வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு நிறத்தில், ஷைனிங்கில் பளீரிடும். விலையோ பிரமிக்க வைக்கும். உண்மையான பிராண்டு துணிகள் விலை மீட்டர், 300 முதல், 500 ரூபாய் வரை இருக்கும் என்றால், போலி துணி மீட்டர், 60 முதல் 70 வரை தான் இருக்கும்.இதுபற்றி பில்வாராவில் ஒரு போலி துணிகள் தயாரிப்பாளரிடம் கேட்டபோது, 'என்னது... நாங்க போலி துணியை தயாரித்து விற்கிறோமா... யார் சொன்னது.... உண்மையில், ஏழை மக்களுக்கு, இப்படி குறைந்த விலையில் விற்பதால், நல்லது தான் செய்கிறோம்...' என்று பொரிந்து தள்ளினார்.எப்படியோ... ஒரு உண்மை புரிந்துவிட்டதல்லவா... விலை குறைவு என்று, கண்டதை வாங்கி விடாதீர்கள்; போலி ஒன்று தான் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை, இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !