அந்துமணி பா.கே.ப.,
இம்மாத முதல் வாரத்தின் வியாழக்கிழமை; நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகே உள்ள ஒரு ஊர். காலை, 5:30க்கு அங்கிருந்து கிளம்பினேன்; கிளம்பும் நேரம் நல்ல மழை! 120 கி.மீ., வேகத்தில், சென்னையை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தேன்; வழியில் ஆங்காங்கே, 'ஹால்ட்' உண்டு.உளுந்தூர்பேட்டையில் இருக்கும் மோட்டலில், 3:00 மணி அளவில், டீ சாப்பிட இறங்கினேன்.அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் வந்திருப்பேன்; நடு ரோட்டில் ஒரு, 'ஆக்சிடெண்ட்!' ரத்த வெள்ளத்தில் கிடந்தார் நடுத்தர வயது மனிதர் ஒருவர். மோதிய வண்டியை அருகே காணோம்.நாகரிக உலகில் மனித மனம் கல்லாகி, இரும்பாகி, -இரக்கமில்லாமல் போய் விட்டதே என, மற்றவரைப் பற்றியும், என்னைப் பற்றியும், நினைக்க வைத்த சம்பவம் இது!தூரத்தில் வரும்போதே இக்காட்சியை கண்ட நான், வண்டியின் வேகத்தை குறைத்தேன். சிலர் வண்டியை நிறுத்த சைகை காட்டினர். விபத்து காட்சியை பார்த்தபடியே வண்டியை நிறுத்தாமல், சென்றேன். 7:30 மணிக்கு சென்னையில் இருக்கும் அப்பாயின்மென்ட் நினைவு ஒருபுறம்; விபத்து கேஸ்களில் உதவச் சென்று, நம் மீதே பழி போட்ட முன் அனுபவம் ஒருபுறம்... வண்டியை நிறுத்தாமல் செல்லத் தூண்டியது. என் மீதே எனக்குக் கோபமும் வந்தது.மேலும், கொஞ்ச தூரம் சென்று இருப்பேன். அரசு போக்குவரத்துக் கழக லாரி ஒன்று, மிக மெதுவாகச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அந்த லாரியின் ஓட்டுனர் கை அசைத்து, என் வண்டியை நிறுத்த சைகை செய்தார். வண்டியின் வேகத்தை குறைக்கு முன், லாரியில் இருந்து காவல் அதிகாரி ஒருவர் குதித்து, என் வண்டியை நிறுத்தினார். வேகமாக கதவை திறந்து உள்ளே அமர்ந்து, 'சார்... கொஞ்சம் வேகமாகப் போங்க... 'கன்டைனர்' லாரி ஒன்று, ஒரு ஆளை மோதிட்டு நிற்காம போகுது...' என்றார்.எனக்காகப் பாடிக் கொண்டிருந்த, 'பெரி கோமா' வாயை அடைத்து விட்டு, குளிர் சாதனத்தை அணைத்து, கியரை மாற்றி, வேகம் எடுத்தேன். 'அந்த ஆளை ஆஸ்பத்திரியில சேர்க்க ஏற்பாடு செய்துட்டீங்களா?' எனக் கேட்டேன். புலம்ப ஆரம்பித்து விட்டார்... 'இந்த ரோட்டில, என் ஸ்டேஷனுக்கு, 15 கி.மீ., வரை ரேஞ்ச் இருக்கு; இதனால, வாரத்தில நான்கு நாட்கள் ராத்திரி தூக்கம் கிடையாது. இதே பேஜாராப் போச்சு! இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்புறது என் வேலை இல்ல; குற்றவாளியைப் புடிக்கணும்...' என, அதிகாரி கூறியதும், எரிச்சல் தான் வந்தது.ஒரு வழியாக அந்த லாரியைப் பிடித்தவர், எனக்கு நன்றி கூறினார். என் மன உளைச்சல் தீரவில்லை. தவறு செய்துவிட்ட உள் உணர்வுடன், சென்னையில் இருக்கும், 7:30 அப்பாயின்மென்ட்டை உதறி, வண்டியை மீண்டும் ஸ்பாட்டுக்குத் திருப்பினேன். நான் போய்ச் சேருமுன், மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருந்தனர்.இறுகிக் கல்லாகிய இரக்கமற்ற நெஞ்சங்கள், 99 இருந்தால், அதில் ஒன்று அவற்றிலிருந்து மாறுபட்டே இருக்கிறது; அதனால்தான் மழையும் பெய்கிறது. இதுவே, இயற்கையின் நியதி என, எண்ணியபடி திரும்பினேன். மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு, 'பெரி கோமோ'வை பாட விட்டேன்!அனேகமாக எல்லா இளம் பெண்களும் ஒரு குறிப்பிட்ட, 'செட் டயலாக்' பேசுவதையே பெருமையாக நினைக்கின்றனர் போலும். அவர்களின் வழக்கமான, 'டயலாக்' இப்படித்தான் இருக்கும்... 'என் குடும்பத்திலேயே நான் ரொம்ப வித்தியாசமானவ! துடுக்குத் தனம் ஜாஸ்தி. 'வெடுக் வெடுக்' என, பேசி விடுவேன். மற்ற பெண்கள் எல்லாம் எப்பவும் டிரஸ், சினிமா, பாய் பிரண்ட்ஸ்ன்னு தான் பேசிக்கிட்டு இருப்பாங்க. எனக்கு இதெல்லாம் அறவே பிடிக்காது. ஒரு ஜெபர்சன் மகளின் எழுத்து பற்றியோ, மாப்சன் டோராதி கவிதை பற்றியோ, தெரியாது. சே... சே... எப்பப் பார்த்தாலும் கல்யாணம், குழந்தை பெத்துக்கறது... இதுதான் பேச்சா...' என, அலுத்துக் கொள்வது போல ஆங்கிலத்தில் புலம்பித் தீர்ப்பர்.கொஞ்சம் வித்தியாசமான இளம் பெண்ணின் டயலாக்கை, சமீபத்தில் கேட்க நேர்ந்தது.ஜெபர்சனையும், மாப்சனையும் கரைத்துக் குடித்த இளம் பெண் அவள். இனிமையான மாலை நேரம்; விசாலமான ஆள் அரவமற்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் டைனிங் ஹாலில், பேசிக் கொண்டிருந்த போது, குறை குடம் போல் தளும்பாமல், நிறை குடமாகப் பேசினாள். கொஞ்சம் கூட அலட்டலே இல்லை. திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, லேசாக தலை குனிந்து, தனக்கே உரிய வேற்று நாட்டு அழகு தமிழில், 'இப்போ அவசரம் இல்லே... இருந்தாலும் அப்பா, அம்மா, சொல்லும் போது நிச்சயம் உண்டு...' என்றாள்.ரொம்ப நாட்களுக்குப் பிறகு, அலட்டல் இல்லாத பேச்சைக் கேட்ட திருப்தி ஏற்பட்டது!மதுரை செல்லும் விமானத்திற்காக, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு சினிமா கோஷ்டி. நேரம் அதிகாலை; ஒரு ஓரமாக நானும் அமர்ந்திருந்தேன். கறுப்புக் கலர் குட்டைப் பாவாடை, வெள்ளை நிற இறுக்கமான பனியனுடன் (அதை, 'டக்-இன்' செய்து) குதிரை போல நடந்து வந்தார் நடிகை த்ரிஷா. அரை தூக்கம், இன்னும் கண்ணில் இருந்தது.எனக்கு எதிர் வரிசை இருக்கையில் அமர்ந்து, தடிமனான ஒரு, 'அயன்ராண்ட்'டின் புத்தகத்தை எடுத்து, முடித்த இடத்தில் இருந்து தொடர ஆரம்பித்தார். அவ்வப்போது அடிக்கண்ணால் யாராவது தன்னைக் கவனிக்கின்றனரா என்று, பார்த்துக் கொண்டார். என் அருகே அமர்ந்திருந்த இரண்டு பாலியஸ்டர் வேட்டிகள், கொஞ்சம் சத்தமாகவே கிசுகிசுத்துக் கொண்டன...'காலைப் பாருடா... வெண்ணை மாதிரி என்னா வெளுப்பு!' என, ஒரு பாலியஸ்டர் சொல்ல, 'ஆமாடா...' என்றது அடுத்த பாலியஸ்டர். 'வாடா... கிட்டே போய் பார்க்கலாம்...' என, இருவரும் கிளம்பவும், அவர்கள் பேச்சை கேட்கும் ஆவலில், அவர்களுடன் நானும் எழ முயன்றேன். ஆனாலும், அப்பட்டமாகத் தெரியக் கூடாது என, இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின், ஒன்றும் தெரியாதது போல அவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டேன்.அமர்ந்திருந்த நடிகையின் பின்பக்கம் நின்று, குனிந்து பார்த்தபடி கொஞ்சம் விரசமான கமென்டுகளை பரிமாறிக் கொண்டதுடன், அவர் படித்த ஆங்கிலப் பள்ளியின் பெயர், குலம், கோத்திரம், உடன் பிறப்பு எல்லாவற்றையும் ஒருவர் மற்றவரிடமும், முதலாமவர் தப்பாக சொல்லும்போது, மற்றவர் அதைத் திருத்துவதுமாக, ஒரே தமாஷாக இருந்தது.திடீரென நடிகை சரண்யா ஆடி ஆடி வருவது தெரிய, 'சரண்யா அக்கா வராங்க டோய்...' என்றபடியே, மஞ்சள் கலரில் ஆர்.ஆர்.சி., மதுரை என, அச்சிட்டிருந்த துணிப்பையை ஆட்டியபடியே, நடிகையை நோக்கிச் சென்றனர். இப்படி நடிகைகளையும், அவர்களது ஜாதகத்தையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனரே நம் மக்கள் என, வருந்தியபடி, விமானம் கிளம்பும் அறிவிப்பை எதிர்பார்த்து அமர்ந்தேன்.