உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பிரபல நாளிதழ் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த முதியவரை, கடந்த வாரம் சந்தித்தேன். சமூக அவலங்கள் அவரை வெகுவாக பாதித்துள்ளது; கொதிப்பாக பேசினார். சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றை விவரித்தார்...'நாகர்கோவிலில் உள்ள பிரபலமான அசைவ ஓட்டல்பா அது! அங்கு, மாலை, 4:00 மணிக்கு இஞ்சிச்சாறு சேர்த்து சுவையான டீயும், சுடச்சுட மெது வடையும் போடுவாங்க. இதனால், மாலையில் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.'சமீபத்தில், ஒருநாள் அந்த நெரிசலான நேரத்தில் ஒருவர், 'ஐயோ... கொல்ல வாரானே... காப்பாத்துங்க...' என்று அலறிய படி, ஓட்டலுக்குள் பாய்ந்தார். அவரைத் தொடர்ந்து ஒரு ஆசாமி, கையில் அரிவாளுடன் விரட்டி வந்தான். ஆனால், அந்த முரடன் ஓட்டலுக்குள் நுழையாமல், படியிலேயே நின்று விட்டான்.'திடீரென ஏற்பட்ட பரபரப்பால், ஓட்டலில் கலெக் ஷன் குறைந்தது. ஓட்டல் அதிபர் கோபத்தால், குதி குதியென குதித்தார். மனிதாபிமானம் சற்றும் இல்லாமல், அடைக்கலம் தேடி வந்த அப்பாவியை, கழுத்தை பிடித்து ஓட்டலுக்கு வெளியே தள்ளினார்.'எப்படியாவது தப்பிக்க வேண்டுமே என்று, தலைதெறிக்க ஓடினார் அவர். ஆனால், அந்த கொலைகாரன் அவரை மடக்கிப் பிடித்து, கண்டபடி வெட்டி, ஓடி மறைந்து விட்டான்.'நடுரோட்டில், அந்த அப்பாவி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து, உயிருக்காக மன்றாடினார். அவரைச் சுற்றி பெருங்கூட்டமே திரண்டு விட்டது. 'ஐயோ பாவம்...' என்று, இரங்கினரே தவிர, அவரது உயிரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.'அப்போது, அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த நல்லவர் ஒருவர், பக்கத்து கடைக்குச் சென்று, இந்தக் கோர சம்பவம் பற்றி காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கொடுத்தார். 'நேரில் இங்கு வந்து புகார் எழுதிக் கொடுங்க...' என்று, காவல் நிலையத்திலிருந்து பதில் வந்தது.'பாவம்... அவர் என்ன செய்ய முடியும்! 'அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பவர் கதி இது தான்...' என்று, எண்ணியபடியே, சம்பவ இடத்திலிருந்து, நடையைக் கட்டி விட்டார்.'இதற்கிடையே தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு ஓடிவந்த அவரது மனைவி, படுகாயமுற்றுக் கிடந்த கணவரின் முகத்தைப் பார்த்து, குமுறிக் குமுறி அழுதாள். கணவரைத் தூக்கி, கடை வராந்தாவில் கிடத்தும்படி, கூட்டத்தினரைப் பார்த்து கண்ணீரும், கம்பலையுமாக மன்றாடினாள்.'உதவலாம் என்றால், காவல் துறையிலிருந்து உபத்திரவம் வருமே என்று எண்ணி, ஒருவர் பின் ஒருவராக கம்பியை நீட்டி விட்டதால், கூட்டம் கலைந்து போயிற்று.'அந்த நேரத்தில், லேசான மழைத் தூறலும் விழ, ரத்த வெள்ளத்தில் நனைந்த படி கிடந்த கணவரைப் பார்த்து, விம்மி விம்மி அழுதாள், மனைவி. 'குடை வைத்திருக்கும் நல்லவர்களே, இரக்கமுள்ளவர்களே... முகத்திலாவது மழைத்துளி விழாமல் காக்கலாமே...' என்று, கதறிய அவள் கண்களிலிருந்து, 'பொல பொல'வென்று, கண்ணீர் வடிந்தது.'இந்த சோகக் காட்சியைப் பார்த்த ஒருவர், மனமுருகி, தம்மிடமிருந்த குடையை அவளிடம் கொடுத்துவிட்டு, நனைந்தபடியே வேகமாக நடந்து மறைந்தார். குடை ஒரு தடயமாகி விடக் கூடாதே என்பது தான் அவரது வேகமான நடைக்கு காரணம்.'சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குப் பின், மரணத்திற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிய வேளையில், போலீஸ் ஜீப் இரைந்து கொண்டே வந்து நின்றது.'போலீசார், 'தடதட'வென்று, குதித்து இறங்கியதும், கூட்டம், 'மடமட'வென்று கலைந்து, ஐந்தாறு பேரே நின்றிருந்தனர்.'அவர்களில் ஒரு வயோதிகர், தன் கண்களை துடைத்துக் கொண்டே, 'போலீஸ், சட்டத்தின் கெடுபிடி, மக்களின் உதவும் மனப்பக்குவத்தையே அழித்து விட்டது...' என்று, முணுமுணுத்தார்.'உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த அனாதையாக்கப்பட்ட, 'அப்பாவி' சில மணி நேரத்தில், பரிதாபமாக இறந்து போனார்.'இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், என்ன நடந்திருக்கும்? மக்கள் திரண்டு கொலைகாரனை விரட்டிப் பிடித்து, மரத்தில் கட்டி, போலீசாரிடம் ஒப்படைத்திருப்பர்.'படுகாயமுற்றவரை, எப்படியாவது தூக்கிப் போய் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருப்பர். அத்தகைய உதவிக் கரங்களை இப்போது கட்டியது யார்?'- எனக் கூறி முடித்தார். சிந்திப்போமா?பெண் சிசு கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து வரும் காலம் இது. கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை!ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல். அதிலிருந்து சில பகுதிகள்:இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக்கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும், ஆண்மக்களே தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க, ஆண் மக்களே தேவைப்பட்டனர்.ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை, பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், இது, அவர்கள் பொறுப்பாயிற்று.இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று வாழ்கின்றனர்.மேலும், பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப்பதும், பெற்றோருக்கு சுமையான பொறுப்பாகி விட்டது.கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ, அவர்களை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோரைச் சேர்கிறது. அதிக பெண்களைப் பெற்ற தந்தையை, சமூகம் தாழ்வாகக் கருதுகிறது.ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்தால், அதை அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்தால், அதை புறக்கணித்து, அவளை ஏற்பதில்லை.- இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசு கொலைக்கு காரணமாக இருக்கிறது என்கிறது, இந்நூல். இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !