உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

'என்னமோ, 'பிசா'வோ, முசாவோ அப்படீன்னு ஒரு தின்பண்டம்; கேக், பன் -பட்டர் -ஜாம் மாதிரி இருந்தது. வெளிநாட்டு வகை தின்பண்டம் போலிருக்குன்னு ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். நான், ருசி கூட பாக்கல; அப்படியே என் மனைவிகிட்ட கொடுத்துட்டேன்...' என்றார் குப்பண்ணா.'சாப்பிட்ட பின், உங்க வீட்டுக்காரம்மா என்ன சொன்னாங்க?''ஒண்ணு, இந்த பிசா அல்லது நான் - இரண்டில் ஒன்றுக்குத்தான், இந்த வீட்டில் இடம்ன்னு சொல்லிட்டாள்...'அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த குப்பண்ணாவின் மனைவி, 'கார்ப்பரேஷனிலிருந்து வரிகட்ட நோட்டீஸ் வந்திருக்குது...' என்று கூறி, குப்பண்ணா பக்கமாக, ஒரு கடுதாசியை தூக்கி போட்டவர், 'இவனென்ன, மாதக் கடைசியிலும், வருஷக் கடைசியிலும் வரி கேட்கிறான்... ஜனங்கள் கையில பணம் புழங்குகிற நேரம் பார்த்து கேட்க கூடாது...' என்று, கோபித்தார்.'பரவாயில்லயே... மாமி கூட, பெரிய பொருளாதார நிபுணரா ஆகி வருகிறாரே...' என்றேன் குப்பண்ணாவிடம்!'இதிலே என்ன பெரிய பொருளாதார நிபுணத்துவம் வாழுதாம்...' என்றார் குப்பண்ணா.'ஆடம் ஸ்மித் தெரியுமா?' என்று குப்பண்ணாவிடம் கேட்டேன்.'பொருளாதார தத்துவத்தின் தந்தை; அவன் ஒரு இங்கிலீஷ்காரன் என்றெல்லாம், பள்ளிக் கூடப் பாடத்தில் படித்தது, லேசுபாசாக நினைவிருக்கு...' என்றார்.'அவரேதான்... வரி விதிப்பு கொள்கையில் கடைப்பிடிக்க வேண்டிய, நான்கு அடிப்படை கொள்கைகளை சொல்லியிருக்கார். முதலாவது, ஒரு மனிதனுக்கு, அவன் வாழும் சமூகத்திலிருந்து, எந்த அளவு பயன் கிடைக்கிறதோ, அதற்கு தகுந்தபடி வரி இருக்க வேண்டும்.'இரண்டாவது, அவனுக்கு, அவன் கட்ட வேண்டிய வரி, இவ்வளவு தான் இருக்கும் என்று நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். மூன்றாவது, எந்த காலத்தில், அவன் கையில் பணம் புழங்குமோ, அந்த காலத்தில் வரியை வசூலிக்க வேண்டும். நாலாவது, வரிப் பணம் கட்டுகிறவனிடமிருந்து, அரசாங்கத்திடம் போவதற்கு, குறைந்தபட்ச செலவே ஆக வேண்டும்...''பரவாயில்லயே... என் பொண்டாட்டி சொன்னதைத் தான் அந்த அறிஞனும் சொல்லிஇருக்கானா...' என்றார் பெருமையுடன் குப்பண்ணா!வாசலில், 'கிணிகிணி' என்று மணி ஒலித்தது. எதிர் வீட்டிலிருந்து வந்த குப்பண்ணாவின் மனைவி, வீட்டுக்குள் ஓடிப் போய், கையில் பணத்துடன் வந்தார்.'வெண்ணெய் கடை ஆள்... பாக்கிக்காக வந்திருக்கான்...' என்றார் குப்பண்ணா.'சைக்கிளில் இவனுக்கு மணி எதற்கு... அந்த வெண்ணெய் நாற்றம் ஒன்றே போதாதா அவன் வருகையை அறிவிக்க...' என்றார், அங்கு அமர்ந்திருந்த குப்பண்ணாவின் பக்கத்து வீட்டுக்காரர்.'நம் வீட்டில் தான் இப்படி, டாண்டாண்னு பாக்கியைத் தீர்க்குறோம்; ஒவ்வொருத்தர் வீட்டில் பத்து நடையாவது இழுத்தடித்து விட்டுத்தான் பணத்தை தருகின்றனர். கையில் பணமில்லாமலில்லை; இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் பத்து பேருக்குப் பங்கு தீர்த்துவிட்டு, வெறும் கையை பிசைந்து கொண்டு நிற்பதா என்ற ஜாக்கிரதை உணர்ச்சி தான்...' என்றார் குப்பண்ணா, தம் மனைவியிடம்!'ஆமாமாம்... மாம்பலத்தில் என் மைத்துனர் இருக்கிறாரே... அவருக்கென்ன பணத்துக்கா குறைவு... இருந்தும் தயிர்க்காரனோ, பால்காரனோ வந்து நின்றால், 'போடா போ, ௫ம் தேதியே வந்துட்டான்; 15ம் தேதிக்கு முன்னால் வந்தால் உதைப்பேன்...' என்று மிரட்டி அனுப்புவார்...' என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.'சில பேர் முகராசிக்குத் தான் அது செல்லும்! நாமெல்லாம் சொன்னால், 'எங்கே உதை பாக்கலாம்...' என்று, கச்சை கட்டி, வந்து விடுவர்...' என்றார் குப்பண்ணா.பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தட்டில் நேந்திரங்காய் சிப்ஸ் எடுத்து வந்து, எங்கள் முன் வைத்தார் குப்பண்ணாவின் மனைவி. அவர் ஒரு அடி கூட நகர்ந்திருக்க மாட்டார்; ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, கைநிறைய சிப்சை அள்ளிக் கொண்டார் பக்கத்து வீட்டுக்காரர். 'ஓய்... மற்றவர்களுக்கும் பாக்கி வையும்...' என்றார் குப்பண்ணா.'நான் கொஞ்சமாகத் தானே எடுத்துக் கொண்டேன்...' என்றார்.'ஆமாமாம்... அதுதான் கையைப் பார்த்தாலே தெரிகிறதே...' என்றார், குப்பண்ணா.'உங்க வீட்டு மாமி, ஆளுக்கொரு தட்டில் கொண்டு வந்து வைத்திருந்தால், வம்பில்லாமல் இருந்திருக்குமே...' என்றேன்.'மொத்தமாக வைத்தால் தான் என்ன... அவரவர் பங்கை அவரவர் எடுத்துக் கொண்டால் போயிற்று. பந்தியில், வெள்ளைக்காரர்கள் சாப்பிடும் போது பார்த்திருக்கிறாயா... பெரிய தட்டுல, ஒவ்வொரு வகையையும் வைத்து, பட்லர் நீட்டுவான். சாப்பிட உட்கார்ந்திருப்பவர்கள், தங்கள் பங்கு எவ்வளவு என்று கணக்கு பார்த்து, தாங்களாகவே எடுத்து வைத்துக் கொள்வர்...' என்றார் குப்ஸ்!'நீங்கள் சொல்வது, பபே முறை...' என்றார், பக்கத்து வீட்டுக்காரர்; வாயில் சிப்சை அடக்கிக் கொண்டு!'இல்ல... பபே முறை வேறு; அதில் பரிமாற ஆளே இருக்க மாட்டான். மேஜை மேல் எல்லா உணவு வகைகளும் குவிந்திருக்கும்; அவரவருக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்; அளவைப் பற்றி பேச்சே கிடையாது. ஆனால், நின்று தான் சாப்பிட வேண்டும்; ஓட்டல் என்றால், உட்கார்ந்து கொள்ளலாம்...' என்றேன்.'என்ன வெள்ளைக்கார நாகரிகமோ...' அலுத்துக் கொண்டார், பக்கத்து வீட்டுக்காரர்.'சிப்ஸ் பிளேட்' காலியானதும், குப்பண்ணாவின் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.கிருபானந்த வாரியார், ஒரு முறை மலேஷியா மற்றும் சிங்கப்பூர் சென்றிருந்த போது, கோலாலம்பூரில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவை முடித்த பின், சிங்கப்பூரிலும் அதே தொடர் உபன்யாசத்தை ஆரம்பித்தார். சிங்கப்பூரில் மூன்றாம் நாளன்று சொன்ன ஒரு நயமான விஷயம்:நான் சென்னையிலிருந்து மலேஷியாவுக்குப் புறப்படும் போது, கம்பராமாயணப் புத்தகங்களில் நூறு பிரதி எடுத்து வந்தேன்; கோலாலம்பூர் ரசிகர்கள், நான் முந்தி, நீ முந்தி என்று வாங்கினர். இரண்டே நாட்களில், 75 பிரதிகள் விற்பனையாகி விட்டன. அத்துடன், விற்பனையை நிறுத்திக் கொள்ளச் சொல்லி விட்டேன்.எனக்கோ உள்ளூற பயம்; கோலாலம்பூரை விட சிங்கப்பூரில் ரசிகர்கள் அதிகமாயிற்றே... தமிழன்பர்களுக்கு, 25 புத்தகங்கள் எப்படி போதும் என்றெல்லாம், எண்ணினேன்.ஆனால், நேற்று இரண்டாம் நாள் புத்தகம் விற்றுக் கொண்டிருப்பவரிடம், 'எத்தனைப் புத்தகங்கள் விற்பனையாயின...' என்று, விசாரித்தேன். அவர், 'இதுவரை, ஐந்து புத்தகங்கள் தான் விற்றிருக்கின்றன...' என்றார். இது எதைக் காட்டுகிறது?இங்கு சில நொடிகள் நிறுத்தி, வாரியார் மேலும் சொன்னார்...'இது எதைக் காட்டுகிறது என்றால், சிங்கப்பூர் ரசிகர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், ஏற்கனவே, கம்பராமாயணப் பிரதி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது...' என, நாசூக்காக இடித்து காட்டினார்; மீதி புத்தகங்கள் உடனே விற்று தீர்ந்தன.— வாரியார் புத்தகம் ஒன்றில் படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !