உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அந்த நண்பர், டாக்டருக்கு படித்தவர்; ஆனால், பிராக்டீஸ் செய்யாதவர்... கர்நாடக மாநிலம் மணிப்பாலில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் லட்சம், லட்சமாக செலவு செய்து படித்தவர். குடும்பத் தொழில் கோடிகளில் கொட்டிக் கொண்டிருக்க, அதை கவனிக்க ஆளில்லை என்று டாக்டர் தொழிலை விட்டவர்.நண்பர்களைக் காணும் ஆர்வம் அவருக்கு அவ்வப்போது ஏற்பட்டு விடும்; அதுவும், இரவு, 10:00 மணிக்கு மேல் நண்பர்களை மொபைல் போனில் கூப்பிட்டு, நடுநிசி வரை பேசியே அறுத்து விடுவார்.அன்று அவர், 'பீச் மீட்டிங்'குக்கு வந்திருந்தார். லென்ஸ் மாமா, உ.பா.,வில் மூழ்கி இருந்ததைப் பார்த்த டாக்டர், 'ஏம்ப்பா, இப்படி உடம்பக் கெடுத்துக்கறே... எல்லாம் ஒரு அளவோட தான் இருக்கணும்...' என்றார்.'என்ன செய்யறதுப்பா... எங்க, 'ஒர்க் டென்ஷன்' அப்படி... அது கிடக்கட்டும்... இப்பெல்லாம் உடம்பு ஒரு மாதிரியா இருக்குப்பா?' என சொன்னார் உதவிக் கமிஷனர் அந்தஸ்திலிருந்து சமீபத்தில் ரிட்டயர்டு ஆன போலீஸ் நண்பர் ஒருவர்.'அப்படி வாங்க வழிக்கு...' என்றவர், தொடர்ந்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்தார்... போலீஸ் நண்பரும் 'ஆம்... இல்லை' என பதில் சொல்லிக் கொண்டு வந்தார்... நான் சுயநல நோக்கோடு (என்ன... உங்களுக்குத் தரத்தான்) மனதில் அக்கேள்விகளைக் குறித்துக் கொண்டேன்...டாக்டர் கேட்ட கேள்விகளில் இதோ சில...உடல் ரீதியான வேள்விகள்:1. உங்கள் வயதுக்கு, உயரத்திற்கு, அதிகமான உடல் எடை உள்ளதா?2. ரத்தக் கொதிப்பு அதிகமா?3. பசி இல்லையா?4. ஏதாவது பிரச்னை எழுந்த உடன், சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா?5. அடிக்கடி நெஞ்சு எரிச்சல் வருகிறதா?6. வயிற்றுப்போக்கு பேதி, பித்தம் அடிக்கடி உண்டா?7. துாக்கம் வரவில்லையா?8. எப்போதும் சோர்வாக உள்ளதா?9. தலைவலி மருந்து அல்லது ஏதாவது ஒரு மாத்திரை தினமும் தேவைப்படுகிறதா?10. அடிக்கடி தலைவலி வருகிறதா?11. தசைகளில் வலி, பிடிப்பு தோன்றுகிறதா?12. சாப்பிடாவிட்டாலும், வயிறு, 'பம்' என்று இருக்கிறதா?13. ஆழ்ந்து மூச்சு விட முடியவில்லையா?14. மயக்கம், வாந்தி வருவது போன்ற, 'பீலிங்' அடிக்கடி வருகிறதா?15. அழுகை வருகிறது... ஆனால், அழ முடியவில்லை... அல்லது, 'ஓ'வென்று அழுகை வருவது போல அவ்வப்போது தோன்றுகிறதா?16. 'செக்ஸ்' தொடர்பான - பிரச்னை இருக்கிறதா?அடுத்து மனம் தொடர்பான கேள்விகளைக் கேட்டார்...1. கவலையான நினைப்பு எப்போதும் உள்ளதா?2. குடும்பத்தாருடன், உடன் வேலை செய்வோருடன் எரிச்சல், எரிச்சலாக வருகிறதா?3. வாழ்க்கை போர் அடிக்கிறதா?4. வாழ்க்கையுடன் இணைந்து செல்ல முடியாத எண்ணம் உருவாகிறதா?5. பணத்தைப் பற்றிய கவலையா?6. கேன்சர், மாரடைப்பு வந்து விடும் என்ற எண்ணம் உள்ளதா?7. நாம், நம் உறவினர் இறந்து போகப் போகிறோம் என்ற பயம் உள்ளதா?8. கோபத்தை அடக்கி வைத்துள்ள உணர்வு உள்ளதா?9. மனம் விட்டு சிரிக்க முடியாத இயலாமை உள்ளதா?10. உங்களை, குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கின்றனர் என்ற எண்ணம் உள்ளதா?11. வெற்றிகரமான பெற்றோராக இல்லையே என்ற உணர்வு உள்ளதா?12. விடுமுறை எடுக்க சங்கடமாக உள்ளதா?13. உங்கள் பிரச்னையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்ற எண்ணம் உள்ளதா?14. உயரம், வானம், புயல், பூகம்பம்- இவற்றை நினைத்து பயம் உள்ளதா?இவற்றில், உடல் தொடர்பான கேள்விகளில் இரண்டுக்கு, 'ஆம்' என்ற பதிலும், மனம் தொடர்பான கேள்விகளில் நான்கிற்கு, 'எஸ்' என்ற பதிலும் சொன்னால், மன அழுத்த நோய்க்கான அறிகுறிகள்... அந்த நோய் தான் மனிதனுக்கு மகா டேஞ்சர் என்று கூறிவிட்டு கிளம்பினார் டாக்டர்... மிச்சமிருந்த, உ.பா.,வுடன் கண்ணாடி கிளாசை துாக்கிப் போட்டார் ரிட்டயர்டு போலீஸ் ஆபீசர்.சிற்றிதழ் ஒன்றில் படித்தது இது:கணவனை கைக்குள் போட்டுக் கொள்ள மனைவியருக்கு யோசனை சொன்னதெல்லாம் அந்த காலம். மனைவியை கைக்குள் போட்டுக் கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்!இந்த, 'லீடை' கட்டுரையில் படித்ததுமே, லென்ஸ் மாமாவிற்கு மிக்க உதவியாக இருக்குமே என நினைத்தபடி, மேலும் தொடர்ந்தேன்...* வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்... ஆனால், முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில் நீங்கள் ஏகப்பட்ட வேலை செய்திருப்பதாகத் தோன்றும்!* உங்கள் உடைகளைக் கழற்றும் போது, ஐந்து ரூபாய் நாணயம், மனைவி எதிரே விழுகிறார் போல கழற்றுங்கள். மறுநாள், உங்கள் ஆடைகளை கழற்ற, ஒத்தாசை செய்வார், பாருங்கள்!* சாதாரண வேலையில், உங்கள் மனைவி எது செய்தாலும் (தவறுகள்) 'உன்னைத் தவிர, இவ்வளவு அழகாக யார் செய்வர்?' என்று கூறுங்கள்!* உங்கள் மாமனார் வீட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டே இருங்கள்! பெற்றோர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று மனைவி கேட்டால், உடனே அனுப்பி வையுங்கள்! (காய்கறி என்ன விலை விற்கிறது... - மட்டன், சிக்கன் பற்றி சொல்லவே வேண்டாம்!)* உங்கள் மனைவியை விட அழகான பெண் எதிரே போனால், 'என்ன பெரிய அழகு?' என்று இடித்துக் கூறுங்கள். (யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று அவளுக்குத் தெரிய கூடாது!)— இன்னும் பல யோசனைகள் கூறியுள்ளனர். லென்ஸ் மாமாவுக்கு மட்டுமல்ல; திருமணமான உங்களில் பலருக்கும் இக்குறிப்புகள் பயன்படும் என்றே நினைக்கிறேன்!அதே புத்தகத்தில் இன்னொரு துணுக்குச் செய்தி.* மனைவி பணம் கேட்டால், கொடுங்கள்! ஆனால், என்ன செலவாயிற்று என்று கணக்கு மட்டும் கேட்காதீர்கள்! கொடுத்த 100 ரூபாய்க்கு கணக்கு கேட்டால், 120 ரூபாய்க்கு கணக்குச் சொல்லி, 'அடுத்த வீட்டு அக்காவிடம், 20 ரூபாய் கடன் வாங்கி சமாளித்து இருக்கிறேன். நாளைக்கு அந்த காசைக் கொடுங்கள்...' என்பாள். சந்தேகம் இருந்தால் கேட்டுப் பாருங்கள்!— இப்படிச் சொல்கிறது அந்த துணுக்கு!யப்பா... எவ்ளோ கத்துக்க வேண்டி இருக்கிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !